வயவையூர்க்காரரின் ஒற்றுமை மீண்டும் பேசு பொருளாகிவிட்ட நிலையில், வயவையூரின் சமூக வெளியை அதிகமாகக் கவனித்ததில் ஒற்றுமையின் கழுத்து அறுபட்டுக்கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக உள்ளது.
வயவையின் குறிப்பிட்ட சாரார் இன்னொரு சாரார் மீது குறிச்சி வாரியாகவும் சாதி ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்திய காலம் கடந்து விட்டாலும் அதன் எச்சங்கள் இன்னும் ஈரம் காயாமல்தான் உள்ளன, வயவையின் சமூக வெளிகளில்.
ஆனாலும் முன்னொரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களின் இன்றய நீட்சிகள் அமைதியாகத்தான் உள்ளார்கள், சமூக வலைத்தளங்களில். அமசடக்காக உள்ளார்கள் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடு. ஊமையாகி ஊரைக் கெடுக்கிறார்கள் என்பது அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. இது உண்மையாகவும் இருக்கலாம்.. சுடுபட்ட வடுவின் காரணமாகவும் இருக்கலாம். அது பற்றி இப்போ உரையாடப் போவதில்லை. தவிர்க்க வழிகள் உண்டாவெனத் தேட விளைவோம்.
கருத்து ஒன்று முன் வைக்கப்படுகையில், அக்கருத்தைக் கருத்தில் கொள்ளாது கருத்தாளரைக் கருதுவதால் ஒற்றுமையின் கழுத்தில் கத்தி வைக்கப்படுகிறது.
ஆம்! கருத்து வைக்கப்பட்டதும் கருத்தாளர் யாரெனத்தான் முதலில் பார்க்கப்படுகிறது. கருத்தாளரைப் பற்றிய தப்பான அபிப்பிராயத்துடன் கருத்தை வாங்குகையில் அதன் அர்த்தம் மாறுகிறது. பதில் கருத்து பறக்கிறது. பதிலுக்குப் பதிலென்றாகி சண்டை வலுத்து ஒற்றுமை சாகிறது.
உதாரணமாக “இவர் எனக்குரிய அங்கீகாரத்தை வழங்க மாட்டார்” என்ற தப்பான அபிப்பிராயத்துடன் ஒருவருடைய கருத்தை உள்வாங்குகையில், அவருடைய கருத்து அங்கீகாரம் தர மறுப்பதாகத்தான் தோன்றும். கருத்தாளரைக் கவனத்தில் கொள்ளாது கருத்தை மட்டும் கருத்தில் எடுத்தால் உண்மையான அர்த்தம் புரியும். காலப்போக்கில் கருத்தாளர் மீதான தப்பான அபிப்பிராயம் மறைந்து உறவு இனிக்கும். பிரிவினை அழியும்.. ஒற்றுமை நிலைக்கும்.
இது புரிதல் தவறு உடையோருக்கு மட்டும் பொருந்தும். வீம்புக்கு விரதம் இருப்போருக்கு அல்ல. நான் என்ற அகங்காரமும் நான் தான் என்ற ஆணவமும் உடையோர்தான் இந்த வீம்புக்கு விரதம் இருப்போம்.. அவர்களை நாளை பார்ப்போம்.