செஞ்சோலை நினைவோடு நிமிர்வோம்

மக்களுக்களால் மக்களுக்காக கட்டியமைக்கப்பட்ட விடுதலை அமைப்பினை விழுதெனத்தாங்கிய ஓர் விடுதலை வீரனின் உள்ளத்திலிருந்து எழும் உண்மைச் சாட்சியங்கள் இவை. – (போராளி மருத்துவர் தணிகை )

மண்ணையும் மக்களையும் இவர்கள் எந்தளவுக்கு நேசித்தார்கள் என்றால் ஆயிரம் ஆயிரமாய் களத்தில் பகைகள் வரினும் தாழாத மனவுறுதியோடு எதிர்கொள்பவர்கள் தமது உயிரினும் மேலான மக்கள் கொன்றழிக்கப்படும் போதெல்லாம் உடைந்து போய்விடுவார்கள் . அதனை நன்கு அறிந்த இனவாத ஆட்சியாளர்களும் அவர்கள் இராணுவமும் தமது படைக்கள சக்திக்கு அச்சுறுத்தல் நிகழும் போதெல்லாம் விடுதலைப் போராளிகளின் உளவுரணை உடையச்செய்வதற்காக மக்கள் குடிமனைகள் மீதும் பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்கள் மீதும் குண்டுகள் வீசி தாக்குதல் நடாத்தி எமது மக்களைக் கொன்றழித்து வந்திருக்கின்றன.

அவ்வாறானதொரு இனவழிப்பு அரசின் கோர முகம் தான் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு இதே நாளில் (14/08/2006) வெளிப்பட்டிருந்தது . ஆம் ஈழத் தமிழர்கள் வாழ்வில் மகிழ்வள்ளிச் சொரிந்த மாயை கலைந்து மீண்டும் போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம் . வட போர்முனை அதிர்ந்துகொண்டிருந்தது. நாகர் கோவில் பகுதியில் தந்தையும்( மாவீரர் லெப்.கேணல் ஞானசுதன்/மணி) கிளாலி பகுதியில் மகனுமாய் நின்றிருந்த முதல் களமுனை எனது.அதன் நினைவுகளும் வரலாறும் அழிந்திடாதவை

அந் நேரத்தில் முழங்கும் போராயுதங்களின் இடியோசைக்கு மத்தியிலும் பேரிடியாய் வந்திறங்கியது இந்தச் செய்தி. செஞ்சோலை வளாகத்தில் முகாமைத்துவ கற்கைக்காக ஒன்றிணைந்திருந்த பள்ளி மாணவிகள் மீது சிங்கள வான்படை தாக்குதல் நடாத்தியதில் அறுபத்தியொரு (61)மாணவிகள் இனப்படுகொலை செய்யப்பட்டும் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயங்கள் அடைந்துள்ளார்கள் என்கிற செய்தி களமுனையில் நின்றிருந்த தளபதிகள் போராளிகள் அனைவரையும் பதறடித்து அவர்களில் உள்ளம் அழுத காட்சிகளுக்கு நானும் ஒரு சாட்சியாக உயிர்வாழும் சாபத்தைப் பெற்றிருக்கிறேன் என நினைக்கையில் தடுக்கமுடியாமல் வழியும் கண்ணீருக்கு இடையில் தான் போராளி மருத்துவர் தணிகை அவர்களின் அழைப்பும் வந்திருந்தது.

எப்போதும் நான் அழ நேரிடும் போது அவரும்.. அவர் மனம் பதைக்கும் போது நானும் சொல்லிவைத்தாற் போல அழைப்பெடுத்திருப்போம் .அத்தகைய பேரன்பும் உணர்வுகளும் எமக்குள் . வழமையான எமது உரையாடல்களைப் போல இவ்வுரையாடலை நான் என்னோடு மட்டும் வைத்திருக்கப்போவதில்லை .

இனி மருத்துவர் தணிகை பேசுகிறார் நீங்களும் கேளுங்கள்

“வடபோர்முனை” என அழைக்கப்பட்ட முகமாலை, கிளாலி , கண்டல் பகுதி , நாகர்கோவில் என விரிந்த களங்களுக்கான களமுனை வைத்தியசாலையில் (Field Hospital) விழுப்புண் தாங்கிய வீரர்களின் வேதனைகளை வென்று கொண்டிருந்தோம்.

ஆம், கரிகாலன் கண்மணிகளின் உயிர்களைக் காத்துக் கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில்தான் எங்களுக்கு முப்பது(30) கிலோ மீற்றர்கள் பின்னாலிருந்து வந்த கொடுஞ்செய்தி காதுகளில் சுடு எண்ணையாய்ப் பாய்ந்தது.

ஒரு நாளும் இல்லாதவாறு
ஒரு கணம் திகைத்தாலும் சுதாகரித்துக் கொண்டோம் ஏனெனில் நாம் ஒரு கணம் நாங்கள் சோர்ந்தாலும் எங்கள் கையில் இருக்கும் போராளிகளின் உயிர் பிரிந்துவிடும்.
ஒருவரை ஒருவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பணிகளைத் தொடர்ந்தாலும் மனம் பதறியது, என்றுமில்லாதவாறு பேதலித்தது.

சீரணிக்க முடியாத அந்தப் பெருந்துயரிலிருந்து சற்று வித்தியசமாக வேறுவிடையங்களில் மனதை திருப்ப நடைபேசியை (Walky Talky) கையிலெடுத்து களமுனைத் தளபதி அணித்தலைவருக்கு இடும் கட்டளை கேட்கத் தொடங்கினோம்.
வெஞ்சமராடும் முன்னணி வீரர்களின் நிலைமையும் ஆரோக்கியமாக இருக்கவில்லை.
ஆம், எங்களுக்கு முன்னால் வெஞ்சமராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கும் செஞ்சோலையில் இடிவிழுந்த கதை தெரிந்தே இருந்தது.
அவர்களின் குரல்களும் வழமைக்கு மாறாகவே இருந்தது. தென்பு இன்றி இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

அடுத்து,

விசேட கட்டளைத் தளபதி களமுனைத் தளபதிகளுக்கு
இடும் கட்டளைகளை நடைபேசியில் (walkie talkie) கேட்டோம் அவர்களிடையேயும் செஞ்சோலை சிறுவர் தலையில் இடிவிழுந்த சேதியின் தாக்கம் தெரிந்தது.
“மலையே சரிந்தாலும் நிலை குலை”யா உளவுரண் கொண்ட புலிகள் சோர்வதா..? என என் மனம் எண்ணம் கொண்டது.
ஒரே தட்டில் உணவு கொண்டு ஒன்றாய் படுத்துறங்கிய எம் சக போராளிகள் பல நூறு பேர் மடிந்த ஆனையிறவு, பூநகரி, மணலாறு, கொக்குத்தொடுவாய் சமர்களில் செத்துவீழ்ந்த போது நாம் கிறுங்கவுமில்லை, சோரவுமில்லை!

ஆனாலும்,

எம் படையியல் வரலாற்றில் முன்னொரு போதும் ஏற்படாத சோர்வு 61 சிறுவர்கள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி ஏற்பட்டது?

எந்த மக்களுக்களின் துன்ப துயரங்களை கண்டு தாங்கிக் கொண்டு அம்மா, அப்பாவின் இதமான இறகுகளுக்குள் இருக்காமல் போராடப் புறப்பட்டோமோ அதே மக்கள் இரத்த வெள்ளத்தில் வீழும் போது எப்படி துவளாமல் இருக்க முடியும்?….
எதிரி தனது வழமையான பாணியில் தமிழர் எம் கண்களில் தாக்கி எமை திசை திருப்பினான். ஈற்றில் முகமாலைச் சமரும் தனது இலக்கை எட்டாது போய்விட்டது!

இன்றும் எம் மக்கள் மீதும் இளைய சமூகத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட சமூக,கலாச்சார வரலாற்றுத்திரிப்பு மற்றும் நிலபகரிப்பு போன்ற இனவழிப்புகளில் மனம் சோர்ந்து விடாமல் ஆயிரமாயிரமாய் இன்படுகொலைசெய்யப்பட்ட மக்களின் நீதிக்காகவும் எமக்காக அர்ப்பணிக்கப்பட்ட தியாகங்களுக்காகவும் எமது தலைமுறைக்காகவும் எமது அபிலாசைகளை அடையக்கூடிய வழிமுறைகளில் தொடரந்து பயணிப்பதற்கு உறுதிபூணும் அதே வேளை செஞ்சோலையில் இனப்படுகொலை செய்யப்பட்ட பிஞ்சுகளையும் இந்நாளில் எம் நெஞ்சிருத்தி நிமிர்வோம்! 🙏

முற்றுப்பெறாத உரையாடலுடன்
க.குவேந்திரன்

2 COMMENTS

  1. Let’s all bow our heads for these innocent Schoolgirls!

Comments are closed.