சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால் தூத்துக்குடி தாமிர ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. இம்முடிவு பற்றி பலதரப்பட்ட விசனங்களும் விமர்சனங்களும் வெளிவிடப்பட்டும் இந்நேரத்தில் மக்கள் பக்கம் நேர்ந்த தவறுகளை அலசி எதிர்வருங்காலங்களில் அவை நிகழாதிருக்க உறுதி கொள்ள வேண்டும்.
இப் போராட்ட இலக்கு, ஆலை வெளியிடும் இரசாயணக் கழிவுகளும் சுற்றுச் சூழல்ப்பாதிப்பும், அதனூடாக அவ்வூரகவாசிகள் எதிர் கொள்ளும் கேடுகளும். ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதை எதிர்த்துப் போராடிய மக்களொலி ஆலையை மூட வேண்டும் என மாறி, மத்திய அரசுக்கெதிரான கோசங்களை வெளிப்படுத்தி துப்பாக்கிச் சூடு வரை மாற்றம் பெற்றது.
என்னைப் பொறுத்தவரை துப்பாக்கிச் சூடு நடத்தப்படக் காரணம் அரசு மீதானா எதிர்ப்புக் கோசங்களே. அதற்காக சூட்டை ஆதரிக்கிறேன் என்பதல்ல அர்த்தம். அது மிகப் பெரிய மிலேச்சத்தனக் கொடூரம். ஆனால் அதற்கு இடங்கொடுத்த மக்களாகிய நாமும், சந்தடி சாக்கில் புகுந்து சிந்துபாடிய சிலரும் இந்த குற்றத்தின் பங்காளர்களே..
மக்கள் போராடத் தொடங்கியதுமே தோழர் என்றழைத்தவாறு ஒரு கை தோளில் விழும். நீங்கள் புரட்சியாளர் தோழரென உசுப்பேத்தும். இது தூத்துக்குடியிலும் நடந்தது. அடக்குமுறைக்கு எதிராக நீ போராடினால் நீயும் என் தோழனே என்றான் சேகுவாரா.. அதோடு அவன் நிறுத்தி விட்டான். அவன் பிள்ளைகள் எனச் சொல்லும் தோழர்களோ, ஏகாதிபத்தியம்.. முதலாளித்துவம் எனச் சம்பந்தா சம்பந்தமில்லா விடயங்களை கொண்டு வாழ்வாதாரப் போராட்டங்களையும் மக்கள் போராட்டங்களையும் தோழர்களின் போராட்டமாக்கி விடுவார்கள். தூத்துக்குடியில் அதையேதான் செய்தார்கள். அப்படிச் செய்தவர்கள் இன்னும் சிவந்திருப்பார்கள் மக்களின் குருதியால்.
அடுத்த கூட்டம் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோர். ஆரியம்-திராவிடம் எனும் இத்துப் போன ஒன்றை வைத்துக் கொண்டு “இது தமிழருக்கெதிரான ஆரியனின் சதி” என்று ரூட்டை மாத்துபவர்கள் இவர்கள். ஆரிய திராவிட விடயத்தை முன்பு எதற்குப் பயன்படுத்தினார்களென அறியாமல் எல்லாத்துக்கும் பயன்படுத்தும் இவர்கள் தூத்துக்குடிப் போராட்டக் களத்தில் புகுந்தனர். மத்திர அரசுக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக போராட்டத்தை திசை திருப்பினர்.
மூன்றாம் தரப்பாக அரசியல்வாதிகள். எங்க என்ன நடந்தாலும் இவர்கள் தேடுவது அரசியல் ஆதாயம். தூத்துக்குடிக் களத்திலும் அதையே செய்தார்கள்.
இந்த மூன்று தரப்பினரும் என்ன செய்திருக்க வேண்டும். மக்களை அங்கே போராட விட்டு விட்டு பிறிதொரு முனையைத் திறந்து அங்கே சார்போராட்டம் செய்திருக்க வேண்டும். வெவ்வேறு மட்டங்களில் தங்களால் முடிந்த அழுத்தங்களைக் கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து மக்களுடன் கலந்து மக்கள் போரைச் சிதைத்து தம்மிடம் இல்லாத பலத்தை இருப்பதாகக் காட்டிக் கொள்ள எத்தனித்து கொலைக்குத் துணைபோன இவர்களை என்ன மக்கள் நாம் தூக்கி எறிய வேண்டும். சுட்டவர்களுடன் சேர்த்து சூட்டுக்குத் துணைபோன இவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
மக்கள் போராடட்டும்.. அரசியல்வாதி நான் களத்தில் இறங்கி அரசியலாக்க வேண்டாம் என்றெண்ணும் அரசியல்வாதிகளை சட்டைப் பிடித்து கேள்வி கேட்காமல் வேறு களம் திறந்து எமக்கான சார்போராட்டங்களை ஏன் நடத்தவில்லை எனக் கேட்கும் நிலை எடுக்க வேண்டும்.
மக்கள் மக்களாகவும் மற்றோர் மற்றோராகவும் இருப்பது போராட்டங்களை மேலும் கூராக்கும்.