அறத்தலைவன்

எந்தை தனக்கென ஒரு எழுத்து நடையினை வைத்திருந்தார்!

எழுத்தறிவிக்கும் ஆசானாகத் தனது முதலாவது தொழிலைத் தொடங்கிய அவர் எப்போதும் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார்!

“அறத்தலைவன்” எனும் பெயரில் அவர் வீரகேசரியிலும் அந்தக் காலத்து ஈழத்துச் சஞ்சிகைகளிலும் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் தொடர்பான விடையத்தினை அப்பா இறந்து பின்னரே பாவி யான் ஆழமாய் அறிந்தேன்!

அப்பாவின் நினைவு மலரை யான் எழுதிக் கொண்டிருந்த போதே எந்தன் அம்மா அது குறித்துச் சொன்னார்!

அதென்ன ‘அறத்தலைவன்’?

அந்தப் புனைபெயர் ஏன் உருவானது? யார் உருவாக்கியது என அம்மாவிடமே யான் கேட்டேன்.

“தருமதுரை” எனும் அவரது பெயர் தூயதமிழில் இல்லை என்பதால்,… ‘தருமம்’என்ற வடமொழிச் சொல்லை
‘அறம்’ என்றும்….

‘துரை’ என்ற வடமொழிச் சொல்லை ‘தலைவன்’என தமிழாக்கம் செய்தார்.

பின்னர் அந்த இரு சொற்களையும்
சேர்த்து “அறத்தலைவன்” என ஆக்கினார்.

அந்தப் புனைபெயரிலேயே எழுதியும் வந்தார் என எந்தன் அம்மா மேலும் சொன்னார்!

பெரிய எழுத்தாளனாக வரவேண்டும் என்ற ஆசை அவரிடம் அறவே இருக்கவில்லை ஆனாலும் எழுத்துப்பணி அவரைத் துரத்தியே வந்ததால் அப்பப்ப எழுதியே வந்தார்.

முத்துச்சிலாப வன்னிமையில் (சிலாபம்)
தனது தம்பியாராகிய எந்தன் சித்தப்பாவின் திடமான துணையுடன் முகம்மதியரையும் இணைத்துக் கொண்டு சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த புதினங்களை அவர் ஒரு போதும் பெருமையாய் சொல்லியதில்லை!

ஆனால்,…

எந்தன் வீட்டுச் சுவரில் தொங்கிய நிழல்படம் அவர் அந்த தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் இருந்த காதைதனை எந்தனுக்கு சொல்லியது!

ஊரிலுள்ள பிள்ளைகளுக்கோ அல்லது எந்தன் அக்காளுக்கோ பேச்சுப் போட்டிக்கு கட்டுரை எழுதிக் கொடுதால் அதுதான் மாவட்ட மட்டத்தில் முதலிடம்

அஃதே,

மாகாண மட்டத்திலும் முதலிடம் வகிக்கும்!

அறத்தையும் மறத்தையும் தன் பிள்ளைகளுக்கு ஊட்டிய அவர் தான் அவதரித்த ஊர் குறித்து எழுதும் போது “வயவை”அல்லது வயவையம்பதி என பாவிப்பார்!

குறிப்பாக தான் தவழ்ந்து, “அ”எழுதிப் பழகிய அந்த எழில் கொஞ்சும் வயாவிளான் தெற்கு பகுதியை “தென்வயவை”என விளிப்பார்!

சின்னஞ் சிறிய பருவத்தில் அப்பாவின் அந்த விளிப்பு முறை என் காதில் விழுந்திருந்தாலும் பெரிய விழிப்பினையோ
அதிர்வினையோ ஏற்படுத்தவில்லை!

இளைஞன் ஆகிய பின்னர் ஒரு
கிறுக்கல் கிறுக்கி மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழா மேடையில் வாசித்தேன்.

செவி மடுத்துக் கொண்டிருந்த ஒரு பெருங்கவிஞர்(இன்று உயிருடன் இல்லை) அது கவிதை இல்லை என உண்மையை காதில் உரைத்தார். ஆனாலும் “கவியுள்ளம்”உந்தனுக்கு
உண்டு என்றார்.

திருநெல்வேலியில் இடம்பெயர்ந்திருந்த வீட்டில்
அப்பாவுக்கு எனக்கு நடந்த அவமானத்தைச் சொல்லி அந்தக் கிறுக்கலை
வாசித்துக் காட்டினேன்.

எதையும் சுற்றி வளைத்துப் பேசத் தெரியாத எந்தை எழுந்து இதுதான் புதுக்கவிதை என்றார்.

தன் மகனைப் புகழாத தந்தையும் தன்னைப் புகழாத கம்மாளனும் இவ்வுலகில் இருக்கமுடியுமா?என்ன?

தொடர்ந்து எந்தன் ஊரின் அருமை பெருமைகளையும் சொன்னார்!

அப்போதுதான் அப்பா உரைத்த
‘தென்வயவை’என்பது எந்தன்
செவிகளில் “தென்மதுரை”
என ரீங்காரம் செய்தது!

ஆதாலால் யான் அப்பாவிடம் தென்மதுரைத் தமிழ் தொடர்பில் பேச்சுக் கொடுத்தேன்!

தேமதுரைத் தமிழையும் தோற்கடிக்கக் கூடிய அல்லது அதற்கு எந்த வகையிலும் சளைக்காத தமிழ் எம் தென்
“வயவை”யிலும் ஏன் ஈழத்திசைகள் எங்கணும் உண்டு என்றார்!

அப்பா தனது “தென்வயவை”த் தமிழை தேம்சு நதிக்கரை கொண்டு வந்து தந்துள்ளார் என்பதை அவர் பேரன் ஆகிய ஒளிமாறன் கீழுள்ள காணொளிதனில் சொல்கின்றான்!

யான் எந்த எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் முன்னுள்ள கேள்வி!!…..