எங்கே எங்கள் வணபிதா பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்

மலைப் பிரசங்கத்தை மக்களுக்குச் சொன்ன மகான் எங்கே? எங்கே எங்கே எங்கள் வணபிதா? சாதாரணமான மனிதனாக உண்டும், உடுத்தும், உழைத்ததும், உறங்கியும் வாழ்ந்தவர் அல்ல எங்கள் குருவானவர். வானவர் போற்றும் குருவானவர் அவர். அவர் இறைபணியாற்றிய எங்கள் தந்தை அவர் அறிவமுதும் ஊட்டிய குருவானவர்.

ஆண்டவன் மட்டுமா அன்பே
உருவானவர்?
கர்த்தர் மட்டுமா கருணையே
வடிவானவர் ?-இல்லை
எங்கள் குருவானவர் திருமுகம் ஒருமுறை பார்த்தால் எவரும் அப்படிக் கூறமாட்டார்கள்!

மலைப் பிரசங்கத்தை
மக்களுக்குச் சொன்ன
மகான் எங்கே?

எங்கே எங்கே
எங்கள் வணபிதா?

சாதாரணமான மனிதனாக
உண்டும்,
உடுத்தும்,
உழைத்ததும்,
உறங்கியும் வாழ்ந்தவர் அல்ல
எங்கள் குருவானவர்.

வானவர் போற்றும் குருவானவர் அவர்.

அவர் இறைபணியாற்றிய எங்கள் தந்தை
அவர் அறிவமுதும் ஊட்டிய குருவானவர்.

இலங்கையில் உள்ள முன்னணிக் கத்தோலிக்கப் பாடசாலைகளுள் ஒன்றான யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார்(Rector/Principal of St. Patrick’s College,Jaffna)கல்லூரியின் முதல்வராக அரும்பணி ஆற்றியவர்.
ஒன்றரை நூற்றாண்டுப் பழம்பெருமை pas கொண்ட சம்பத்திரிசியார் பாடசாலையின் அரும்பெரும்சரிதத்தில் இவரின் வரலாறு பல அத்தியாயங்கள் கொண்டது .
அர்த்தம் பொதிந்த அவர்தம் வாழ்நாளில்பல ஆயிரம் புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் இந்த உலகிற்குத் தந்தவர்தான் எங்களின் வண பிதா பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்.
தமிழீழக் கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஆற்றிய தொண்டுகளை இங்கே வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.
வெளிநாடொன்றில் #மேலாண்மைப் பட்டம்(PhD) பெற்று தாய்மண் திரும்பிய நாளில் இருந்து இறுதிவரைக்கும் இறைபணியுடன் கல்விக்கண்களை திறந்து அகங்களில் விளக்கு ஏற்றிவர்.
சர்வதேசத்தின் வளர்ச்சி, அறிவியலின் ஏற்றம் அறிந்து எங்கள் இளைய தலைமுறை வளர வேண்டுமெனின் எம்
தாய்மொழியாம் தமிழுடன்
ஆங்கிலத்தையும் கசடறக் கற்க வேண்டும் எனச் சொல்வார்.
ஆங்கிலம் என்பது ஓர் Phonetic Language ஆகவே மாங்கனித்தீவின் தமிழர்தேசத்தில் ஆங்கிலக்கல்வியை ஒலிப்பியல் (phonics) இலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இறுக்கமாக இருந்தவர்.
1994ஆம் ஆண்டு இடதுசாரிச் சிந்தனைகள் கொண்ட அமரர் விஜயகுமாரண துங்காவின் சகி சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதி வேட்பாளரானார்.
“நானும் உங்களைப் போலவே தந்தையைப் பறிகொடுத்த மகள். போரினால் கண்ணாளனை இழந்த விதவை” என்றும் சொன்னார்.
ஈரமனம் கொண்ட வீரர்களும் மனமுருகியே நின்றனர். பெரும்பானமை இனத்தவருடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களும்வாக்குகளை வாரிவழங்கினர்.
அம்மையாரும் அரச கட்டில் ஏறினார்.
சிம்மாசனம் ஏறிய சந்திரிக்கா அம்மையார் 1995ஆம் ஆண்டு சூரியக்கதிரென எம்மைச் சுட்டெரித்து மீதியை செம்மணியில் புதைத்தார்.
தனிச்சிங்களச் சட்டம்(Sinhala only act)மற்றும் கல்வித் தரப்படுத்தல்(Policy of Standardization) உட்பட பல கொடுமையான சட்டங்களை அமுலாக்கம் செய்த பெற்றோரின் பிள்ளையேதான் சிம்மாசனம் ஏறியுள்ளார் என்பது பின்னரே தமிழருக்கு உறைத்தது.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைகள்
(Operations Sun Shine 01,02,03)நடைபெற்ற இக்காலப்பகுதியில் கிளாலியில் படகெடுத்து பெருநிலப்பரப்புக்கு வந்தனர் பெருமளவு தமிழர்கள்.
அந்த இக்கட்டான காலகட்டத்தில்
வன்னிப் பெருநிலப்பரப்புக்கு வந்த தமிழருக்கு #நல்ல_மேய்ப்பனாக எங்கள் குருவானவரும் வந்தார்.
எங்கள் வன்னிமண்ணில் குருவானவர்ஓர் சிறு ஆங்கிலப் பாடசாலையை நிறுவி
அங்கே ஒலிப்பியல் (phonics) முறையில் ஆங்கில உச்சரிப்பை அறிமுகப்படுத்தி
அதை நடைமுறையிலும் செய்துகாட்டியவர்.
இன்று பாரெங்கும் பர(ற)ந்து வாழும் பலர் அங்கே நற்பயன் பெற்றனர்.
இன்று தமிழ் பேசும் நம் உறவுகளால் மண்ணிலும் விண்ணிலும் தேடப்படும் பலரில் எங்களின் குருவானவரும் ஒருவரான பெருந்துயர் நடந்தேறி ஒன்பது வருடங்கள் விசாரணைகள் ஏதுமின்றிக்கரைந்துவிட்டது!
“பைபிளைக் கையிலெடுத்து அதன் படி வாழ்ந்தவர். ரைபிளை ஒரு போதும் தொட்டவரில்லை”அப்படி இருந்தும் இப்படி ஏன் நடந்தது எனக் கேட்டு பாமரரும் படித்தவர்களும் மத,இன எல்லைகள் கடந்து தேம்பி அழுகின்றனர்.
மானுட விடுதலை தேடிய ஜெசுபிரானின் வழி நடந்த அருட்தந்தை ஆண்டவரால் மானுடர்க்கு அளிக்கப்பட்ட
மனித உரிமைகள் மறுக்கப்பட்ட போது ஒருபோதும் ஒத்திசைந்தவர் இல்லை.
மாங்கனித்தீவில் சிறுபான்மை இனத்தவரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் மிதிக்கப்பட்டும் வந்த போது குரல் எழுப்பிய நல்லதோர் மனித உரிமைச் செயற்பாட்டாளரும்(Formidable Human Right activist)ஆவார்.
எங்கள் அருட்தந்தை தொடர்பான விசாரணைகளுக்கு வத்திக்கான் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்த கொடுக்க வேண்டுமென வேண்டிவரும் ஏழை உள்ளங்களில் எனது உள்ளமும் ஒன்று ஆகும்.
“நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”
– யோவான் 10:11-
நன்றி
-அறத்தலைவன்