CNN விளைவு என்றால் என்ன..?
ஆனையிறவுச் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில், எனக்குப்பழக்கமான ஒரு மேலைத்தேயப் படையதிகாரிக்கு புலோப்பளைச் சண்டைக் காட்சியைப் போட்டுக்காட்டினேன்.
இதற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்தான் அவர் ஆனையிறவுச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு ” அது ஒரு அசைக்கமுடியாத கோட்டை” என என்னிடம் கூறியிருந்தார். இத்தாவிலில் நிலை கொண்டிருந்த பால்ராஜின் படையோடு, சிறிலங்காவின் 53 வது பிரிவின் படைகளைத் திரும்பத்திரும்ப மோதவிட்டு, தமது ஆள்வலுவைச் சிறிலங்காவின் படைத்தளபதிகள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என அந்த மேலைத்தேய இராணுவ அதிகாரி கவலைப்பட்டார். (ஏனெனில் 53.வது படைப்பிரிவை வளர்த்தெடுக்க அவரது நாடு கணிசமான முதலீடு செய்திருந்தது)
அதனால்தான் பால்ராஜின் அணிகள் சன்னதமாடிய புலோப்பளைச் சமரை அவருக்குப் போட்டுக்காட்டினேன். ஒளிப்பேழையைப் பார்த்து முடிந்ததும் “பிழையான குதிரையின் வாலில் பணத்தைக் கட்டிவிட்டோம்” என்றார். அவர் சிறிலங்காவில் தங்கியிருந்த இரண்டாண்டுகளில் எனது கட்டுரைகளோ உரையாடல்களோ ஏற்படுத்தாத தாக்கத்தை, பால்ராஜின் ஒரேயொரு சண்டைக்காட்சி அவருக்கு ஏற்படுத்தியது.
ஆயிரம் சொற்களால் ஏற்படுத்தமுடியாத தாக்கத்தை ஒரு படம் ஏற்படுத்தும். பத்தாயிரம் சொற்களை விடவும், உடனடியாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி விம்பத்தொகுதி உண்டாக்கும் விளைவு மிகப்பெரியது. இதுவே CNN விளைவு எனப்படுகிறது.
-மாமனிதர் தராகி (சிவராம்)-