நாம் எந்த சமுதாயத்தில் பிறந்தோமோ அந்த சமுதாயத்தின் இலட்சியத்துக்கும் பழக்கவழக்கங்களுக்கும் உட்பட்டு நம்மை உயர்த்தவும் நம்மை உன்னதப்படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை ஆகிறது. எந்தக் கடமையையும் அலட்சியப்படுத்தக் கூடாது. தாழ்ந்த வேலை செய்வதானாலே அவன் தாழ்ந்தவன் என்றெண்ணக் கூடாது. எந்த வேலையைச் செய்கிறான் என்பதை விட எப்படி வேலை செய்கிறான் என்று பார்த்து மதிப்பிடுதலே சிறப்பானது. நமக்கென வாய்க்கின்ற கடமைகளை எப்போதும் தயாரான முழு மனதுடன் முன்னெடுத்துப் போவோம். அப்போது நிச்சயம் ஒளியைக் காண்போம்.
மனதுக்குப் பிடித்த வேலையைப் பரம முட்டாள் கூட செய்து விடுவான். ஆனால் எந்தவொரு வேலையையும் தனக்குப் பிடித்ததாக மாற்றி அமைத்துக் கொள்பவனே புத்திசாலி. பயன் கருதி வேலை செய்பவந்தான் தனக்கென வாய்த்த கடமையைப் பற்றிக் குறைபட்டுக் கொள்வான். ஆனால் பலனில் பற்றில்லாதோருக்கு எல்லா வேலையும் ஒரே மாதிரி நல்லவைகள்தான். எனவே நீங்கள் செய்யும் எதற்கும் பாராட்டுகளையோ பரிசுகளையோ எதிர்பார்க்காதீர்கள். இந்த உலகத்தில் மகத்தான மனிதர்கள் பலரும் யாருக்கும் தெரியாமால் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. “எதுவும் வரட்டும். உலகம் இருந்தாலும் சரி; அழிந்தாலும் சரி; நான் என் கடமையை மறக்க மாட்டேன்” இவைதான் பெருவீரனின் வார்த்தைகள்.
நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம். கடமை ஒவ்வொன்றும் புனிதமானது. அதை பய பக்தியுடன் செய்வது மிக உயர்ந்த இறை வழிபாட்டுக்கு ஈடானது.