உலகில் இரசாயனம் இல்லா உணவை உற்பத்தி செய்யும் ஒரே நாடு.. இரசாயனங்கள் இல்லாத உணவு பற்றிக் கற்றும் தரும் நாடு…. கியூபா… இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் எமக்குத் தெரியும்.
‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்பார்கள் கியூபாவை…! கரும்பை மட்டுமே முதன்மைப் பயிராகக் கொண்ட கியூபா, 1959ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நிகழ்ந்த புரட்சியின் மூலம் கம்யூனிச நாடாக மாறியது. அருகிலிருக்கும் அமெரிக்காவிற்கு, மிகச்சிறிய நாடான கியூபாவின் மாற்றம் பிடிக்கவில்லை. அமெரிக்கக் கண்டத்தில் ஒரு கம்யூனிச நாடு செழித்து வளர்ந்தால், அது அருகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்பது அமெரிக்காவின் பயம். அதனால் உலக நாடுகள் பலவற்றோடு இணைந்து, கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது அமெரிக்கா.
கரும்பு மட்டுமே விளையும் கியூபாவுக்கு உணவு உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் பிற நாடுகளிடமிருந்து தான் வர வேண்டும். இந்நிலையில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை கடும் சிக்கலை கியூபாவிற்கு ஏற்படுத்தியது. அப்போது சோவியத் ரஷ்யா கியூபாவிற்கு உதவ முன் வந்தது. கியூபாவின் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டு, கியூபாவிற்குத் தேவையான உணவுப் பொருட்களையும், இதர அத்தியாவசியப் பொருட்களையும் ரஷ்யா அனுப்பி வைத்தது. அன்றைய கியூபாவின் உணவுத் தேவையில் அறுபது சதவீதம் ரஷ்யாவில் இருந்தே வந்தன.
கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கிய கியூபா, அதற்குத் தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், டீசல், வேளாண் எந்திரங்கள்… இப்படி அனைத்தையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்றது. நவீன வேளாண் முறையில் உணவு உற்பத்தியைத்துவங்கிய கியூபாவில் ஓர் ஆண்டிற்கு 13 லட்சம் டன் இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. சுமார் 90,000 டிராக்டர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. ஒற்றைப் பயிர் சாகுபடியில் கியூபா முன்னிலையில்இருந்தாலும் கூட, பல்வேறு சூழலியல் பிரச்னைகளை எதிர்கொண்டது.
இரசாயன வேளாண்மையின் பல்வேறு தீங்குகளையும் கியூபா சந்தித்தது. நிலங்கள் படிப்படியாக உற்பத்தித்திறனை இழந்தன. தொழிற்சாலைகளைப் போல விவசாயம் நகர் மயமானதில் கிராமம் சார்ந்த பல தொழில்கள் நசிவைச் சந்தித்தன. விளைவு…கிராம மக்கள் நம் நாட்டைப் போலவே நகரங்களை நோக்கிப் பயணித்தார்கள். 1956ம் ஆண்டின் புள்ளி விவரப்படி கியூபாவில் கிராமங்களில் வசித்தவர்கள் அதன் மொத்த மக்கள் தொகையில் 56%. ஆனால் 1989ம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை 28 சதவீதமாகக் குறைந்தது. இந்தச் சூழலில் தான் சோவியத் ரஷ்யா சிதறுண்டது.
கியூபா தன் தேவைகளுக்காக சார்ந்திருந்த ரஷ்யாவின் உதவிகள் கிடைக்கவில்லை. நவீன விவசாயத்தை சுய சார்போடு செய்ய முடியாத சூழலில் டீசல் உட்பட பல பொருட்களின் தேவை இருந்தது. தயாரான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உணவுப்பொருட்கள், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதையும் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத சூழலில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தார்.
அதன் படி, கரும்பு மட்டுமே விளைவிப்பது என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி முறையைக் கை விட்டது கியூபா. தங்களுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தங்கள் மண்ணிலேயே உற்பத்தி செய்யும் முடிவிற்கு வந்தார் ஃபிடல். நாடு முழுவதும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் உரங்கள் இயற்கை வழி வேளாண் முறையில் தயாரிக்கப்பட்டன. குடும்பத் தோட்டங்கள், நகர்ப்புற விவசாயம் என அனைத்து வகைகளிலும் தற்சார்பு வேளாண்மைக்குத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
கியூப மக்களின் முக்கியமான உணவுகளில் ஒன்று, அரிசி. இயற்கை வழி வேளாண்மை துவங்கப்பட்ட ஒரே ஆண்டில், கியூபாவின் ஒட்டு மொத்த தேவையில் ஐம்பது சதவீத நெல் அங்கேயே விளைந்து செழித்தது. கிழங்கு உற்பத்தியில் தென்அமெரிக்காவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது கியூபா. கியூபாவின் மொத்த மக்கள் தொகையில் 95% கல்வி கற்றவர்கள். அவர்கள் செய்த விவசாயத்தில் தான் கியூபாவின் உணவுத்தேவை நிறைவேறத் துவங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புற காலியிடங்கள் எல்லாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான காலி இடங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறின. 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவின் குடிமக்கள் அனைவரும், தங்கள் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சுய போராட்டத்தை தாங்களே நடத்தினார்கள்.
வீடுகளில் இருக்கும் குறைந்த இடங்களில் காய்கறி பயிரிட்டார்கள். மாடித்தோட்டம் மூலம் தங்கள் தேவையையும் நிறைவேற்றி, எஞ்சியவற்றை விற்கத் துவங்கினார்கள். இயற்கை வழி வேளாண்மையில் நிலத்தையும், சூரிய ஒளியையும் வீணாக்காமல் பயன்படுத்துவதன் அவசியத்தை விளக்குவார்கள். ‘‘ஒரு சதுர அடி இலைப் பரப்பின் மீது எட்டு மணி நேரம் தொடர்ந்து சூரிய ஒளி விழுந்தால் மூன்று கிராம் குளுகோஸ் ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரிக்கப்படுகிறது’’ என்று சொல்வார் மராட்டிய கணிதப் பேராசான் ஸ்ரீபாத் தபோல்கர். அதே புரிதலோடு கியூபா சூரிய ஒளியை அறுவடை செய்தது. உணவிற்காக பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை உடைத்தெறிந்தது. தன் உணவுத் தேவையை தானே பூர்த்தி செய்து கொண்டது.
2000ம் ஆண்டில் நகர்ப்புற வேளாண்மையில் மட்டும் கியூபாவிற்குக் கிடைத்த உணவுப் பொருட்கள் 12 லட்சம் டன். விவசாய நிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் கிடைத்த உணவுப்பொருட்களின் கணக்கு தனி. இது எவ்வளவு பெரிய வேறுபாடு…? தங்களுடைய உணவுத் தேவைக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பிற நாடுகளைச் சார்ந்திருந்த கியூப மக்கள், சில ஆண்டுகளில் தற்சார்பு உணவு உற்பத்தியைச் சாத்தியமாக்கினார்கள். விவசாயத்திற்காக நாட்டிற்கு வெளியிலிருந்து எந்த இரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை. ‘சூழலியலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள். மக்களை அல்ல, பசியை எதிர்த்துப் போராடுங்கள்’ என ஃபிடல் காஸ்ட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று கியூப மக்கள் தங்கள் தேவைகளை சுய முயற்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டார்கள்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு தனிமனிதனின் காய்கறித் தேவையை அறிவிக்கிறது. அதன் படி, ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறி தேவை. இந்த உலகக் கணக்கை கியூப மக்கள் மிஞ்சி விட்டார்கள். அவர்களுடைய அன்றாட காய்கறிப் பயன்பாடு, ஒரு தனிநபருக்கு 469 கிராம். நிலமும், விவசாயத்திற்கான சூழலும் குறைவாக இருந்த கியூபா மாதிரியான குட்டி நாடு இரசாயனங்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி, தங்கள் மண்ணையும் விவசாயத்தையும் உணவுகளையும் மக்களையும் காத்துக் கொண்டிருக்கிறது. தற்சார்பு உணவு முறை, தன்னிறைவுப் பொருளாதாரம், 95 சதவீத கல்வி அறிவு என தடைகளை மட்டுமல்ல ஏகாத்திபத்தியத்தையும் உடைத்துக் கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது கியூபா.
பனம்பழத்தில் உடுப்புத் தோய்த்த மக்கள்.. மண்ணெண்ணெயில் மோட்டார் ஓடிய மக்கள்.. கள்ளிறக்கும் தானியங்கி எந்திரம் கண்டு பிடித்த மக்கள்… குப்பி விளக்குகளைக் கொண்டு இருட்டை விரட்டிய மக்கள்.. பொருளாதாரத்தடைகளால் வளர்ந்த மக்கள்.. என்ற முன்னுர்ழியோடு கியூபாவை முந்தி ஓட வேண்டியவர்கள் நாங்கள் என்ற மனவோட்டம் எழுதி முடித்த பின் எழுவதை தவிர்க்க முடியவில்லை.