“போர்க்காலம் ஆயினும் அதுவே பொற்காலம்” என இன்று போற்றப்படும் காலத்தில் வன்னியிலிருந்து மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் மற்றும்
அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் எம் மக்கள் வவுனியா செல்வது வழமை.
அவ்வாறு பொது மக்கள் தங்களது அவசியமானதும் மற்றும் அத்தியவசியமானதுமான அலுவல்களை முடித்துக் கொண்டு மீளவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத்
திரும்புவார்கள்.
அக்காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கறுக்காய்குளம் ஊடாக அல்லது மடு ஊடாக என மாறி மாறி அந்த இடர்மிகு பயணங்கள் இடம்பெற்றது.
ஒரு முறை புதிய பாதை திறந்து உங்களை அனுப்பப் போவதாக ஶ்ரீலங்காப் படையினர் பயணிகளை மூன்றுமுறிப்பு பகுதிக்கு அழைத்துவந்து அவர்களை முன்னே விட்டு விட்டு தாங்கள் சத்தமின்றி பின்னே நடந்து வந்தார்கள்.
அப்போதுதான் பயணிகளுக்கு தங்களை இராணுவம் புதிய பாதைதிறப்பு என்று கூறி இங்கே கூட்டிவந்த நோக்கம் புரிந்தது.
ஆம், சண்டை இன்றித் தந்திரமாக இடங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையின் ஓர் உத்திதான் இது ஆகும்.
அப்போது அந்த முன்னரங்கில் நின்ற புலிப்பிள்ளைகள் மக்களின் அவலநிலை கண்டு கலங்கியே சண்டை செய்யாது பின்வாங்கிச் சென்றார்கள்.
இந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கையும் இதன் தொடர் அல்லது கிளை நடவடிக்கையுமான “ரணகோச” நடவடிக்கையையும் தமிழர்படை ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் முறியடித்துவிட்டே ஆனையிறவைத் துவசம் செய்து துடைத்தழிக்கத் ஓரிடத்தில் திரண்டிருந்தனர்.
வீரியம் மிக்க அந்த நாள்
குடாரப்புத் தரையிறக்கத்துக்கு முன்னைய நாட்கள் ஆகும்.
வழங்கல் , மருத்துவ , மோட்டார் அணிகள் உட்பட அனைத்து அணிகளையும் பொதுவாகச் சந்தித்துவிட்டு
அணித் தலைவர்களை தலைவர் சந்தித்து அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
ஈற்றில் கேள்வி கேட்கும் நேரத்தையும் தலைவர் ஒதுக்கியிருந்தார்.
தலைவர் முன்னே எழுந்து நின்று கேள்வி கேட்கத் தயக்கங்கள் இருந்தாலும் ஒவ்வொருவராய் அணித் தலைவர்கள் எழுந்து கேள்விகேட்டுத் தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
வன்னிக்கள முனையில் நீண்டகாலம் அணிகளை வழிப்படுத்திய மகளிர் அணியின் ஒரு தலைவிக்கு எமது மக்களை சிங்கள இராணுவம் கேடயமாகப் பாவித்த முன்னைய “ரணகோச” நடவடிக்கையின் கசப்பான அனுபவங்கள் நினைவில் திரும்பிக்கொண்டிருந்தது.
“மக்கள் வாழும் பகுதியில் திடீரென ஊடுருவிச் சண்டை செய்யப்போகின்றோம்.
இந்த நிலையில் ஶ்ரீ லங்கா இராணுவம் மூன்றுமுறிப்பில் செய்தது போல எம் மக்களை முன்னே விட்டு பின்னே அவர்களின் பின்னே முன்னேறி
வந்தால் என்ன செய்வது….?”
ஆம், போரியல் பட்டறிவுடனும் எதிரியின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்த மகளிர்
அணியின் தலைவி ஒருத்திதான் எங்கள் தலைவரிடம் இந்தக் கேள்வியைத் தொடுத்தாள்.
உங்களது துமுக்கி (துப்பாக்கி)களை தலைக்கு மேலே நன்றாக உயர்த்திச் சுடுங்கள். அவை மக்களை பாதிக்காது. அதேநேரம் நீண்டகாலம் யுத்தத்தின் பட்டறிவுகளுடன் வாழ்ந்து வரும் எம்மக்கள் நிலத்தில் வீழ்ந்து படுத்துக்கொள்வார்கள். அதன் பிற்பாடு உங்களைச் சமநிலைப் படுத்த உங்களுக்கும் மக்களுக்கும் ஓர் அவகாசம் ஏற்படும்.
எந்தக்கட்டத்திலும் மக்களுக்கு ஓர் சிறு கீறல் கூட ஏற்படக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.
அதே நேரம் தலைவர் இன்னொரு கதையையும் சொன்னார்.
அதையும் தருகிறேன்.
“ஒரு முறை ஓர் போராளி மாட்டைச் சுட்டுவிட்டான் என்று என்னிடம் முறைப்பாடு செய்தார்கள்.
பொதுமக்களின் பிரச்சனைகளை விசாரித்துக் கொண்டிருந்த போது மாட்டை ஏன் தம்பி சுட்டீர்கள் என்று கேட்டேன்.
அந்தப் புதிய போராளியோ,
“நான் மாட்டுக்குச் சுடவில்லை மாட்டின் மேல் நின்றிருந்த காகத்துக்குத் தான் சுட்டேன்,மாடு செத்துப் போச்சு”… எனச் சொன்னதாக கவலையுடனும் கோபக் கனலுடனும் சொன்னார்.
தலைவர் தான் தனது உயிரிலும் மேலாக நேசித்த மக்கள் மீதானதும் மக்களின் வாழ்வாதரங்கள் மீதான தனது குன்றாத
வாஞ்சையினையும் எடுத்துக் காட்டி எமைச் சென்று வாருங்கள் வென்று வாருங்கள் என வழியனுப்பி வைத்தார்.
தொடரும்!
நன்றி
-வயவையூர் அறத்தலைவன்-