தலைவர் இல்லை என்ற
எண்ணத்தில்,….
குடாரப்பு கூட்டுஆளுமையும்,
திலீபஅர்ப்பணிப்பும்
கைநழுவிடக் கூடாது,
நமக்குள் மனம்விட்டு பரிசீலிக்வேண்டிய
பல்லாயிரம் உயிர் முடிச்சுக்கள் உண்டு,
திமிராய் எழவேண்டிய
களத்தில்என்னால், நம்மால் எழமுடிந்ததா இல்லையே?
வைராக்கியம் கொண்டு
காப்பாற்ற வேண்டிய தருணத்தை நழுவவிட்ட கூச்ச உணர்வு, என்னை,நம்மை எச்சரித்து விழிப்படையச் செய்யவேண்டாமா?.
குப்பி, தகட்டை தொலைத்துவிட்டு
விசிலடி வீறாப்பு நமக்கு எதற்கு?
நிமிர்ந்து தீர்மானிக்க வேண்டிய தருணங்களில்
மில்லரும் ,
அங்கயற்கண்ணியும்
நினைவிற்கு வரவில்லை,
சரி,போகட்டும்..
உலகப்பரப்பெங்கும்
கூடிக்குரல்கொடுத்த நம் மக்களை,
சங்கம்,கழகம்
அமைத்து பங்குபோட்டு,
கூட்டுவலியை பொறுப்பாசை எனும் குறுக்கு வாய்க்கால்வழி
மடைமாற்றி….
அவர் இல்லை என்றதும்,
உரிமை கோரல் உளறல்
கொஞ்சம் அதிகம்தான்.
ஏனய்யா இது?
யாரைத் திருப்திப்படுத்த?
முள்ளிவாய்க்காலில் இருந்து கரையேறிய நம்
கால்களும்,கைகளும்
ஓரணியில்
ஓர்மனதாய்,
ஒரேபுள்ளியில்
உருத்திரண்டு நின்று.
ஆயிரம் சிட்டிகள்,
ஆயிரம் திரிகள்,
ஆயிரமாயிரம் ஒளிதீபம் கொண்டும்,
திருவுருவப் படத்தின்முன்னால் நின்று கொண்டும்,
அணையா சுடர்விட்டெரியும், தீபத்தை ஏற்றிவைத்து,
மீண்டும் புனிதப்போருக்கு புறப்படுகிறோம்
அல்லது,
மக்கள்முன்
கட்டுக்குலையாத
ஒழுக்கநெறியுடன்
ஒன்றாய் அணிவகுத்து பயணிப்போம்’
என்றாகிலும்
உறுதி ஏற்கும் மனநிலை உருவாகி விட்டதா?
இன்று
விடுதலைப் புலிகளின்
அரசியல் வரலாற்றுப் போக்கினையும், மரபார்ந்த நோக்கினையும், தேவைகளையும், அதன்
பரிணாம வளர்ச்சியின்
படிமுறைகளையும்,
திலீப அர்ப்பணிப்பையும்
பெருமூச்சுக்குள் தொலைத்த சூழலில்,
சிறுசிறு குழுக்களாக சிதறி நமது
குடாரப்பு கூட்டு ஆளுமையை சிதைக்க துணியலாமா?
மக்களையும் சகித்துக்கொள்ளுமாறு
நிர்ப்பந்திக்கலாமா?
இந்தப் பெருந்தூரப் பார்வை நமக்கு
கட்டாயமாகிறது.
உண்மையும்,தர்மமும்
எமது பக்கம் அதுவே எமது பலம்.
என்றவர் நம்தலைவர்.
உலகத்தின் முன்னால், மக்கள் நடுவில்
எந்த உண்மையை,
எந்த தர்மத்தை உயர்த்திப் பிடிக்கப்போகிறோம்.?
இப்படியே நம்மையும்,நமது மக்களையும்
பிரித்து மேயும் மனச்சுமையுடன் நமது நீதிக்கான பயணம் அமைந்திடக் கூடாது.
இதற்காகவா நாம் செதுக்கி.
கையளிக்கப்பட்டோம்.
தொடரும்…
அ.சுரேஷ்