வித்தியாச விருந்து

487

இந்த ஊருக்கு வந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டது. இது போல இதுவரை நடந்ததில்லை. கடந்த ஒருவாரமாகத்தான் இப்படி நடக்குது. யாராக இருக்கும்? அவனா? அவளா? அவர்களா? நிச்சயமாக அவளாக இராது. இந்த ஊர்ப்பெண்களுக்கு இருட்டுக் கட்டினாப்பிறகும் நடமாடும் தைரியம் இருந்தாலும், இப்படிச் செய்ய அவர்களால் இயலாது. அவன் அல்லது அவர்கள்தான் செய்கிறார்கள். இன்றைக்கு எப்படியாவது யாரென்று பார்த்துவிட வேண்டும். இந்த நினைப்பு நித்திரையை திருடியது. அவர்கள் இன்றைக்கு வருவார்களா என்ற சிந்தனை சோர்வை விரட்டியது.

இரவு பதினொரு மணி இருக்கும். கேட்டைத் திறந்தேன். கேட்டின் இருமருங்கும் நின்ற போவன்வில்லா மரங்கள் கையசைத்தன. குளிரை முகத்திலறைந்த தென்றல் காகிதப்பூவொன்றை நெற்றியில் வைத்தது. பாதையின் மண்ணில் பாதங்களைப் பதித்தேன். மூன்று நிமிட நடையின் பின் வலப்பக்கம் திரும்பினேன். படுத்திருந்த நாய் உறுமியபடி தலை நிமிர்த்தியது. அடையாளம் உணர்ந்து காலைத் தொட்டது மட்டுமில்லாமம் தொடர்ந்து வந்தது. பகலில் மட்டும் மணிக்கொரு பஸ் போகும் ரோட்டைக் கடந்து ஒற்றையடிப் பாதையில் பயணித்தோம். அவர்கள் இன்றைக்கும் வருவார்களா என்ற யோசனை எனக்குள் ஓடியபடி இருந்தது.. . 

இரண்டு பக்கமும் பற்றைக்காடுகள்.. பற்றைக்காட்டுப்பூக்களின் கலவை வாசனை.. சில் வண்டுகளின் ரீங்கார சங்கீதம்.. சின்னப் பூச்சிகளின் இராகமாளிகை.. கறுப்பு வானில் மின்னும் நட்சத்திரங்களைப் போல ஆங்காங்கே பறக்கும் மின்மினிகள்.. ஆபத்தை அறிந்து அடக்கமாக வீரமுழக்கமிடும் நாய்.. எதுவுமே தொந்தரவு செய்யாத என்னை, மரவள்ளித் தோட்டம் தொட்டு உலுப்பியது. 

மரவள்ளி மரங்களை அடுத்தாற்போல மருதண்ணனின் தோட்டம். கடந்த மாதந்தான் காய்கறிப்போகம் முடித்து பசளைக்காக சனற்பயிர் பயிரிட்டிருந்தான். சும்மா சொல்லக் கூடாது. மருதண்ணனின் மனம் மாதிரி அமோகமாக வளர்ந்திருந்தன சனற்செடிகள். அடுத்தாப்போல மதர்த்து வளர்ந்த வாழைகள்.. பாதிக்கு மேல் குலைதள்ளி இருந்தன. இடைப்பழம் கண்டதும் வெட்டலாம் என்று நினைத்து விட்ட குலைகள் மகிழ்ச்சியில் ஆடின.. சனல்பயிர்கள் காற்றில் சுதிபிடித்துப் பாடின.. அவர்கள் வரவேண்டும் என்ற என் பிரார்த்தனையில் அவையும் பங்கெடுத்தது போல் தோன்றியது.

வாழைச் சருகுகளை மிதித்தபடி நடந்து மறைவான வசதியான வரம்பில் அமர்ந்தேன். சூழ்ந்திருந்த இருட்டும் என்னை மறைக்க உதவியது. காத்திருந்தேன்… பாம்பூறும் வலி தாங்காமல் சருகுகள் முனகின. கூடவே முனகிய நாயை மென்மையாகத் தடவிக்கொடுத்தேன். நாயை வருடிக் கொடுப்பதை அடிக்கடி செய்யவேண்டி இருந்தது. அரை மணிநேரம் போயிருக்கும்.. குசு குசு குரல்கள் காதில் விழுந்தன. கூர்மையானேன்.. ஒன்று ஆணுடையது. மற்றது பெண்ணுடையது.. கூர்மையை அதிகரித்தேன்.. எனக்கும் அவர்களுக்கும் இடையிலான தூரமும் குறைந்தது.. சின்னபசங்க குரல்.. அடப்பாவிங்களா.. இந்தவசுல இந்தக் குணமா? உன்னிப்பாக காதுகொடுத்தேன்… 

“இந்தா சின்ராசு… அந்தியில நீ கேட்ட மரவள்ளிக்கிழங்கு அவியலும் அம்மியில் அரைத்த சம்பலும்”

“எனக்கு வேண்டாம்.. எனக்குத் தந்ததுனாலதானே உங்க ஆத்தா உன்னை வெஞ்சுது. என்னையும் அடிச்சிச்சு”

“ஆத்தா எப்பவும் அப்பிடித்தானே.. அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே.. இந்தா இதை தின்னு…. அட.. பிகு பண்ணாமல் தின்னு…” 

அமைதி நிலவியது…

“எனக்கும் அப்பன் ஆத்தா இருந்திருந்தா உங்க தோட்டத்துல வேலைக்காரனா இருந்திருக்க மாட்டேன்ல.. தினப்படிக்கு வேண்டியதை சாப்பிட்டிருப்பேன்ல.. நீயும் ஆத்தாக்கிட்ட ஏச்சு வாங்கிருக்க மாட்டேல்லா.. ….. ….. ….. ….. ஏன் சின்னம்மா? எங்கப்பன் ஆத்தா எங்கேன்னு உனக்காச்சும் தெரியுமா?”

“என்னைய விட ஒருவயசு கூடின உனக்கே தெரியாதபோது எனக்கெப்படிடா தெரியும்.. சை… அதை விடுடா.. உனக்கு எத்தனை தரம் சொல்லிருக்கேன்.. என்னைய சின்னம்மான்னு கூப்பிடாதன்னு. வித்யான்னு கூப்பிடுன்னு. இனிமே என்னைய சின்னம்மான்னு கூப்பிட்டா, உங்கூடப் பேசமாட்டேன்”

எனக்கு எல்லாம் புரிந்தது.. சிறுதூரத்தில் இருந்த மரவள்ளித் தோட்டக்காரன் வீட்டுப்பொண்ணும் எடுபிடிவேலை செய்யும் சின்ராசுவும், அப்பழுக்கற்ற சினேகத்தைப் பரிமாறிக்கொள்ள ஒதுங்கி உள்ளார்கள்.. 

சே… இந்தப் பாழாய்ப்போன உலகத்தில் பாசப்பிரிவினைக்குத்தான் எத்தனை காரணங்கள். பாசப்பறவைகளைக் கலைக்க எத்தனை ஆயுதங்கள்.. 

இதுவரை, வாழைக்குலைக் கள்வர்கள் வரவேண்டும் என்று வேண்டியமனது, அவர்கள் வரக்கூடாதென்று வேண்டத் தொடங்கியது.