Decentralized Web – இணையத்தின் புதுப்பரிணாமம்

386

பாகம் -01

`திரும்பவும் இன்டர்நெட்டை மாத்திக் காட்றேன்!’ – 1


பாகம் – 02

டிம் கண்ட கனவு இதுவல்ல

இந்த Decentralized Web குறித்த விவாதங்கள் நேற்றோ இன்றோ எழுந்ததல்ல; கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குச் சிறிய அளவில் செயல்வடிவம் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். உதாரணம், Decentralized யூடியூப்பான peertube. ஆனால், இணையம் முழுமைக்கும் யாரும் செயல்படுத்தியதில்லை. அதைத் தற்போது மாற்றியிருக்கிறார் டிம். முழு Decentralized Web- ஐ உருவாக்குவதற்காக Solid எனும் பிளாட்ஃபார்மை உருவாக்கியிருக்கிறார்.

தற்போது இயக்கத்தில் இருக்கும் Web மூலமாகவேதான் இதுவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முழுக்க முழுக்க Decentralized ஆக இயங்கும். இந்த solid என்பது ஒரு பிளாட்ஃபார்ம். இதை அடிப்படையாக வைத்து ஆப்ஸ், இணையதளம், வாய்ஸ் அசிஸ்டன்ட் என எதைவேண்டுமானாலும் உருவாக்கலாம். தற்போது கூகுள், அமேசானின் கிளவுடில் நம் தகவல்கள் பதிவாவது போல, இனி Solid-ன் சர்வர்களில் நம் டேட்டா பதிவாகும்.

ஆனால், அவற்றை ஆப்களில் பயன்படுத்தும்போது எந்த டேட்டாவை எந்த ஆப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த இணையதளங்கள் எல்லாம் நம் டேட்டாவைப் பயன்படுத்தலாம் போன்ற அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

டிம் பெர்னர்ஸ் லீ

நம்முடைய Solid கிளவுடில் இருக்கும் எல்லா டேட்டாவும் நம்மால் முழுதாகக் கட்டுப்படுத்தமுடியும். எனவே, எந்த நிறுவனங்களுக்கும் நாம் நம்முடைய புதிதாகத் தரவேண்டியதில்லை. இந்த கிளவுடிலிருந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி மட்டும் தந்தால் போதும். நம் டேட்டா எதுவும் நிறுவனங்களிடம் இருக்காது; அனைத்தும் நம் கிளவுடில் மட்டும்தான். இப்போது எப்படி நிறுவனங்களின் கிளவுடில் இருப்பதை, ஆப்ஸ் மூலம் நாம் பயன்படுத்துகிறோமோ அதேபோல நம் கிளவுடில் இருக்கும் டேட்டாவை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான அனுமதியை மட்டும் நாம் தரவேண்டும்.

உதாரணமாக ஃபேஸ்புக் இந்த Decentralized Web-ல் இயங்குகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கவேண்டுமேன்றால் ஃபேஸ்புக் உங்களிடம் படிவம் கொடுத்து பூர்த்தி செய்யச்சொல்லாது. மாறாக, ஏற்கெனவே உங்களின் தகவல்கள் அடங்கியிருக்கும் கிளவுடிற்கு அனுமதி கேட்கும். இதேபோல இன்ஸ்டாகிராம், ட்விட்டர், அமேசான் அக்கவுன்ட் என எது தொடங்கினாலும் இந்த கிளவுடோடு அவற்றை இணைத்துவிட்டால் போதும். Decentralized Web இப்படித்தான் இயங்கும். இதில் நாம்தான் நம் டேட்டாவுக்கு உரிமையாளர்; தற்போது கூகுள் முதல் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை அனைத்துமே Centralized Web-ல்தான் இயங்குகின்றன. இவையனைத்தும் Decentralized Web-ற்கு எப்படி மாறும், இதற்காகத்தான் உலகம் முழுவதும் பேசிவருகிறார் டிம்.

புதிய டெவலப்பர்கள், புதிய நிறுவனங்கள், புதிய வசதிகள் என அனைத்துமே புதிதாக இந்த Solid-க்கு தேவை. இதில் முதல் அடியாக Inrupt என்னும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் டிம். Solid-க்குத் தேவையான உதவிகளை அளிப்பதுதான் இந்நிறுவனத்தின் பணி. இதேபோல இன்னும் எண்ணற்ற நிறுவனங்கள் உருவாக வேண்டும்; இணையம் மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பவேண்டும் என்பதுதான் இவரின் கனவு. ஆனால், 1991-ல் டிம் செய்ததுபோல, மிக எளிதாக இந்தப் புதிய இணையத்தை உருவாக்கிட முடியாது. காரணம், அப்போது இவர் உருவாக்கிய இணையத்தைத் தடுக்க யாருமே இல்லை. ஆனால், இன்று இதை எதிர்க்கும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களின் வருமானத்தில் நேரடியாகவே கைவைக்கும் இந்த முடிவை அவர்கள் எப்படி அனுமதிப்பார்கள்? இத்தனை தடைகளையும் தாண்டிதான் டிம்மின் கனவு நனவாக வேண்டும்.

விகடன் இணையத்திலிருந்து