கத்தரிக்காயிலும் நீர் இருப்பீர் காவிய நாயகரே!

“ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர்

உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்!”……

முல்லைத்தீவில் எதிரியின் விலா ஒடித்து தமிழன் விழா எடுத்த போது வெளிவந்த ஒரு விடுதலைப்பாடலின் அர்த்தம் பொருந்திய வரிகள் இவை!

முல்லைச்சமரில் வீரச்சாவு அடைந்த
மாவீரர்கள் குறித்து எம் தேசக் கவிஞரின் மனதில் எழுந்த கவிதைகளே இசைவார்ப்புச் செய்யப்பட்டு விடுதலைப் பாடலாக வெளிவந்தது.

அழகழகாய் சின்னஞ் சிறிய மின்குமிழ்களாய் உலுவிந்தம் பழம் பழுத்துக் குலுங்கும் மாதத்தில் முல்லைச்சமர் நடை பெற்றதால் முத்தான இந்த முதல் வரிகள் எழுந்தது.

வற்றாத ஊற்றாய் நீர் பெருகும் ஊற்றங்கரைக்கு அருகே உள்ள முல்லை நகரில் இந்த வீரர்கள் களத்திடை வீழ்ந்ததால் இரண்டாவது வரியும் கவிஞரின் உள்ளத்தில் கிளர்ந்தெழுதது.

எனைப் பொறுத்தவரையில்,

“கத்தரிக்காயிலும் நீர் இருப்பீர்
காவிய நாயகரே!….”எனும் வரிகளையும் சேர்த்துக் கொள்ளவேன்.

காரணம்,

கடினமிகு காலத்தில் காடுகளில் வாழ்ந்த எங்கள் வீரர்கள் பெரும்பாலான நாட்கள்
“பருப்பும் சோறும்” உண்டார்கள். குறிப்பாகச் சொல்வதானால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலைக் காடுகளில் வாழ்ந்த போராளிகள் பருப்பும் சோறும் கூடக் கிடைக்காமல் இலைகளை அவித்து உண்ட நாட்களும் இருந்தது.

ஜெயசிக்குறுய், சத்ஜெய போன்ற வன்னிச் சமர்கள் நடந்த நாட்களில் “கத்தரிகாயும் சோறும்” உண்டே களமாடி தாங்கள் தங்கள் உயிரிலும் மேலாக நேசித்த மக்களுக்காய் மடிந்தார்கள்!

ஒரு முறை தலைவர் களமாடும் புலிவீரர்களை சந்தித்து அவர்கள் நாளும் சந்திக்கும் சவால்கள், சிக்கல் நிலைகள் மற்றும் மனக்குறைகளை கேட்டு அறிந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு போராளி சட்டென எழுந்து “அண்ணை எங்களின் களமுனைக்கு நெடுகலும் கத்தரிக்காயும் சோறுமே வருகின்றது” என்றார்.

தலைவருக்கு அந்த விடையம் மிகுந்த கவலையைக் கொடுத்தது. உணவு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்.

அதே நேரம் அந்த இடத்தில் வைத்து “கத்தரிக்காய்” தமிழரின் பன்னெடுங்கால உணவு என்பதையும் சொன்னார்.

மேலும்,

“வரகரிசிச் சோற்றையும், வழுதுணங்காய் வதக்கலையும், முரமுரென்று புளித்திருந்த மோரையும், புல்வேளுர்ப் பூதனின் ஔவையார் விருந்தாக கேட்ட காதையையும் சொன்னார்.

அருமையான அந்தக் காதையின் மூலம் அதிக ஊட்டச் சத்துக் கொண்ட
கத்தரிக்காய் தமிழர்தம் உணவில் பன்னெடுங்காலாய் இருந்து வருவதையும் தலைவர் போராளிகளுக்கு விளக்கினார்.

மேலும் கத்தரிக்காயினை எந்தையர் வழுதுணங்காய் என அழைத்ததையும் பல போராளிகள் அறிந்து கொள்ளவும் செய்தார்.