பாவேந்தருக்கும் கவியரசருக்கும் இடையில் நடந்த போர்

445

தமிழ்திரையுலகம் பாடலாசியர் பலரைக் கண்டாலும் அவர்களில் கண்ணதாசனை விஞ்சியவர் எவருமில்லை. கண்ணதாசனின் தாக்கமின்றி எவராலும் எழுத முடியவில்லை என்றாலும் அதில் மிகையில்லை. இவ்வாறு தமிழ்த்திரைத்துறையின் நிரந்தர முடிசூடா மன்னனாகக் கவியரசு திகழப் பல காரணங்கள் உண்டு.

மிகப்பெரும் கருத்துகளைக் கூட பாவனையில் உள்ள எதார்த்தமான சொற்களைக் கொண்டு இலகுவில் எவர் மனதிலும் நுழைந்திடுமாறு பாட்டெழுவது கவியரசின் தனித்துவம். இதனால்த்தானோ என்னவோ கவியசால் அனைவருடைய மனதையும் மண்டியிட செய்ய முடிந்தது.  ஆனால் இவருடைய இந்த பாடலெழுதும் முறையைக் கடைசி வரை அங்கீகரிக்காத ஒருவர் உண்டெனில் அவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களே.

தனித்தமிழ் விரும்பியான பாவேந்தரால் கவியரசின் கலப்புத்தமிழையும் இலக்கண நெறி பிறழ் பாடல்களையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது பலருடைய வாதமாக இருப்பினும் மீச்சிறு அளவினர் பாவேந்தரும் கவியரசும் முட்டிக்கொண்ட நிகழ்வொன்றைக் காரணாமாக்குவதும் உண்டு.

தமிழ்த்திரையுலகின் தலைநக்ராக சேலம் கோலோச்சிய காலத்தில், திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதற்கு முன், 1940 களில், MODERN THEATRES நிறுவனத்தில் பணியாற்றினார் கவியரசர். அப்போது 40000 ரூபாய் சம்பளத்தில் கதை, வசனம், பாடல் எழுத அமர்த்தப்பட்டார் பாவேந்தர். பாடலை எழுதி வாங்கும் வேலை கவியரசருக்கு வழங்கப்பட்டது.

பாடலின் ஓரிடத்தில் பாவேந்தர் கமழ்ந்தது என எழுதியதை மலர்ந்தது என மாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் கண்ணதாசன். பாவேந்தர் மறுத்து விட, மலர்ந்தது என்று மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. இதை அறிந்த பாவேந்தர் தனக்கு வழங்கப்பட்ட 40000 ரூபாய்களை இன்றைய மதிப்பில் 2.5 கோடியை துச்சமெனத் தூக்கி வீசிவிட்டுச் சென்றார். இந்த நிகழ்வே கவியரசர் மீதான பாவேந்தரின் கோபத்துக்குக் காரணம் என்பர் மீச்சிறு அளவினர்.

இன்னார் எழுதிய பாடலெனத் தெரியாமலே இப்பாடல் தமிழின் களங்கம் எனக் கோபத்துடன், படம் பார்ப்பதை விட்டு விட்டு திரை அரங்கை விட்டுப் பல முறை வெளியேறிவர் பாவேந்தர். தமிழின் பால் கொண்ட பற்றாலேயே கண்ணதாசனை திரையுலகில் எதிர்த்தார் என்று எதிர்வாதிடுவோரும் உண்டு. தம் கருத்தை வலுவாக்க இலக்கிய வட்டத்தில் கவியசரை பாவேந்தர் பதம் பார்த்ததில்லை என்பர்.

எது எப்படியோ தமிழின் தவப்புதல்வர்களான பாவேந்தருக்கும் கவியரசருக்கும் இடையிலான போர் இருவருடைய இறப்பு வரை முடிவுறவில்லை. முடிவுற்றிருந்தால் தமிழுக்கு இன்னும் பல இனிய காவியங்கள் கிடைத்திருக்க கூடும்.