நவீன நாரதர் – 3

720

நாரதா அனைத்து வேலைகளும் முடிந்ததா? இன்றாவது முழுமையாய் பேச முடியுமா?

நிச்சயமாக.

சரி ஆரம்பி…

ஆரம்பதிலிருந்தே வருகிறேன்…

மறுபடியும் ஆரம்பமா..

இல்லை இல்லை.. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே.. இந்த முதல் கோணல் எங்கே இருக்கிறது என்று சொல்கிறேன்..

சொல் சொல்… நேராக்கி விடலாம்..

இன்று எத்தனையோ மணமக்கள், அவர்களைப் பெற்றவர் மற்றும் உறவினர்கள் தம் தகுதி (உடல் நிலை, உள்ள நிலை) போன்றவற்றைப் பற்றி கவலையே படாமல் இருப்பதிலே சிறந்தது எனக்கு என்ற நோக்கிலே மணத்திற்கு இணை தேடுகிறார்கள்.. மணந்த பின்னே இணை தமக்கு இசைந்து வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

புரியவில்லை..

எடுத்துக்காட்டாய் ஒரு பெண்ணை எடுத்துக் கொள்வோம்.. சிறிது பணக்கார வீட்டுப் பெண்…அழகான பெண்..

வரன் தேடுவது கஷ்டமில்லையே..

தேடுவதில் கஷ்டமில்லை தேவனே… இவர்களின் பெற்றோர்களின் கனவு தன் பெண் இதை விட வசதியான இடத்தில் வாழ வேண்டும். அதற்காக விலை கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்…

விலை கொடுப்பதா?

ஆமாம் இறைவா.. தன் மகளின் ஆர்வம் என்ன? அவள் என்ன சாதிக்க விருப்பப் படுகிறாள்.. அதற்கான வாய்ப்பு இத்திருமணத்தினால் தடைபடுமா இல்லை கிடைக்குமா என்று ஆராய்வதே இல்லை.. நல்ல வருமானம் உள்ள ஒரு ஆண், அழகானவன், சராசரியாய் நல்லவன்.. சாதனை செய்யும் நிலையில் அல்லது சாதிக்கிறவன் வேண்டும் என்று தேடுகிறார்கள்…

இருவரும் சாதிக்க வேண்டுமென்றால் அதற்கு குடும்ப பலம் பக்கத்துணை வேண்டுமே.. இல்லையென்றால் நாளைய வாரிசுகள் நசுங்கிப் போகுமே…

அதேதான் இறைவா.. இவர்களுக்கு கூட்டுக்குடும்பமும் கூடாது, பெண்ணுடைய கணவனும் சாதிக்க வேண்டும், பெண்ணும் அவளது சாதனைகளை செய்ய வேண்டும்..

வீட்டை பந்தய மைதானமாக்கி விடுகிறார்கள் என்று சொல்…

ஆமாம், சாதிக்க துடிக்கும் சாதனையில் விளிம்பில் இருக்கும் இருவரை சேர்த்து வைத்து ஒருவர் விட்டுக் கொடுங்கள் என்று சொல்லி இருவரையும் கீழேதள்ளி குழிபறித்து விடுகிறார்கள்…

இது இப்படி என்றால்… இதற்கு எதிர்புறம் ஒன்று இருக்க வேண்டுமே!..

ஆமாம்.. அன்பானவள், இல்லத்தை நடத்துவதில் சாமர்த்தியசாலி, பொறுமையானவள், குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்க நினைப்பவளை சராசரி மாத வருமானம் உடையவர்கள் தேரிந்தெடுக்கிறார்கள்… வலுக்கட்டாயமாய் நீ சம்பாதித்து வரவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். அவளுக்கு பிடித்தமானதை அவள் செய்ய முடியாது..

ஜோடி மாறி இருந்திருந்தால்…

கணவன் சாதிக்க, குடும்பத்தை மனைவி நிர்வகிக்க ஒரு நல்ல குடும்பமும்,

கணவனும் மனைவியும் சம்பாதிக்க, குடும்ப பாரத்தை கூட்டுக் குடும்பத்தில் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான இன்னொரு குடும்பமும் இருந்திருக்கும்…

அதாவது!..

ஆம் இறைவா.. இங்கேதான் முதல் மனத் திடம் தேவைப்படுகிறது..

தனது வாழ்க்கை கனவை அறிந்து, தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத் துணையின் கனவை அறிந்து இரண்டையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்…

இது சாத்தியம் போலத் தெரியவில்லையே!!!

சாத்தியமில்லை என்று முயற்சிக்காமலேயே சொல்வது தவறு என்று நீங்கள் அறியாததா? கட்டம் கட்டமாய் போட்டு செவ்வாய் லக்கினத்தை பார்க்கிறான், குரு கேதுவைப் பார்க்கிறான் என்று விவரமாய் ஆராய சமயமிருக்கிறது.. பையனுக்கு எவ்வலவு சொத்து தேறும் .. எவ்வளவு வருமானம் என்று தகவல் சேகரிக்கிறார்கள்.. பொண்ணுக்கு எவ்வள்வு நகை போடுவார்கள், என்ன வருமானம், எங்கு படித்தாள், யார் தோழிகள் என்று அணுஅணுவாக விசாரிக்க முடிகிறது.. எதிர்காலக் கனவு என்ன என்று அறிந்து கொள்ளக் கூடாதா?

அறிந்து கொண்டால் என்ன பலன் நாரதா?

உன் கனவு நிறைவேற வேண்டும் என்று நீ எண்ணுவதைப் போல் உன் துணையின் கனவும் நிறைவேற வேண்டும் என ஆசைப்படு.. இதை தொடக்கத்திலேயே செய்ய ஆரம்பித்தால் ஒருவர் மீதான இன்னொருவரின் நம்பிக்கை திருமணத்திற்கு முன்பே ஆரம்பித்து விடுகிறது…

சில சமயம் நமக்கு பிடித்த பெண் நம்முடைய இலட்சியதிற்கு சரிவராமல் போகலாமே..

அவனது இலட்சியத்தை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு, அதாவது அவன் இலட்சியமே அவளுக்கு கணவனாய் வாழுவதே என்னும் அளவிற்கு அவன் இதயத்தில் மாற்றம் செய்கிறவள் என்றாள் தவறே இல்லை.. ஏனென்றால் அவனது இலட்சியம் தான் மாறிவிட்டதே

இதில் குணத்திற்கு என்ன மதிப்பு நாரதா!

இறைவா, குணம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று.. நான் நானாகத்தான் இருப்பேன்.. வருகிறவர் தான் சரி சரியென்று போக வேண்டும் என்று எண்ணுபவர்களைத் தள்ளி வைக்க வேண்டும்..

என்ன நாரதா குண்டு போடுகிறாய்..

ஆம் இறைவா, தன்னை சிறிதும் விட்டுகொடுக்க நினையாதவனுக்கு துணையாகப் செல்பவருக்கு, வாழ்க்கையில் துன்பமே வரும்…

முன்பு நீ சொன்ன மாதிரி ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலுமா?

ஆம் இறைவா!, துணைக்காய் சிறிதும் விட்டுக்கொடுக்காதவனுக்கு துணை எதற்கு… இரண்டு வேலைக்காரர்கள் போதுமே!.. எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது என்பது சங்கார மூர்த்தி தாங்கள் அறியாததா?

அதாவது, திருமணம் என்று சொல் வரும்பொழுதே விட்டுக்கொடுத்தல் என்ற சொல் பின்னாலேயே வந்து விடுகிறது இல்லையா?

ஆம் இறைவா, ஒற்றைக் குழந்தைகள் கொண்ட வீடுகளில் இப்பண்பு பெரும்பாலும் பயிற்றுவிக்கப் படுவதில்லை.. போட்டிகள் நிறைந்த உலகத்திலே விட்டுக் கொடுக்கும் பண்பு பலவீனமாக கருதப் படுகிறது.. ஆனால் குடும்ப வாழ்விற்கு விட்டுக் கொடுத்தலே பலம்..

அதாவது

ஒரு நண்பனுக்கு விட்டுக் கொடுப்பதை யாரும் பலவீனமாக எண்ணுவதில்லை, ஒரு தாய்க்காகவோ, தந்தைக்காகவோ விட்டுக் கொடுப்பதை யாரும் பலவீனமாகக் எண்னுவதில்லை அதே போல் மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.

ம்ம்ம்ம்… முதலில் விட்டுக் கொடுக்கும் அவசியத்தை குறைக்க வேண்டும் என்றாய்.. இப்போது விட்டுக் கொடுக்க வேண்டுமென்கிறாய்…

காலத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி ஆடும் காலபைரவா!, முயற்சி நம் கையில் முடிவு ஆண்டவன் கையில் … என்னதான் திட்டமிட்டாலும் காலம் செய்யும் கோலத்தில் நொடிக்கு நொடி மாற்றம் வந்து விடுகிறதே!. நான் சொன்னது இதுதான்.. உன் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது இருவரின் ஆசையையும் அறிந்து ஆராய்ந்து மனவுறுதியுடன் இருவரும் இன்பமாய் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்த பின் தேர்ந்தெடு.. தேர்ந்தெடுத்த பின் சில பல மாற்றங்கள் வந்தாலும் காலத்திற்கேற்ப மாறிக்கொள்.. இருவருமே இதைச் செய்யும்பொழுது குடும்பம் என்ற நதி அன்பு நீர் பெருகி அமைதியாய் ஓடும்.. பலப் பல பாசப்பயிர்கள் வளம் பெறும்…

நீ பேசும் தொனியைப் பார்த்தால் இப்போதைக்கு இவ்வளவுதானா..

ஆம் இறைவா! மற்ற பணிகளையும் கவனிக்க வேண்டாமா.. மீண்டும் பிறகு பேசுவோம்..