ஈழத்துப்பூராடனார்

586

என்னுடைய நண்பர் ஒருவரின் அனுபவக்குறிப்பிலிருந்து…  – வயவன்-

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், ‘பஸ் வரும், ஆனால் வராது’ என்று. அதுதான் நினைவுக்கு வந்தது, நேற்று ஈழத்துப் பூராடனாருடன் பேசிக்கொண்டிருந்தபோது. அவர் 1965ல் ஒரு புத்தகம் எழுதினார், தலைப்பு ‘யாரிந்த வேடர்’. இவர், தான் வெளியிடும் புத்தகங்களை அளவாகவே அச்சிடுவார். வீணாக தொகையாக அச்சடித்து வீட்டில் அடுக்கி வைத்திருப்பதில்லை. ஒரேயொரு கொப்பியை தனக்கு வைத்துக்கொண்டு மீதியை நூலகங்களுக்கும், புத்தக விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பிவிடுவார். வாசகர்கள் யாராவது முன்கூட்டியே சொல்லிவைத்து வாங்கினால் ஒழிய ஒருமுறை தவறவிட்டால் பின்னர் புத்தகத்தை பார்க்க முடியாது.

அதிசயத்திலும் அதிசயமாக இலங்கை அரசாங்கம் ஒரு கொப்பியை வாங்கிவிட்டது. வாங்கியதோடு நிறுத்தாமல் அதை படித்தும் விட்டது. அவர்களுக்கு புத்தகத்தின் தோற்றம் பிடிக்கவில்லை. அதன் இரண்டு தடித்த மட்டைகளுக்கு இடையில் இருந்த விசயமும் பிடிக்கவில்லை. ஆசிரியரைப் பிடித்து அடைத்துவிட்டது.

அவர் அப்படி என்ன புத்தகத்தில் எழுதியிருந்தார்.மகாவம்சம் சொன்னதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். வனத்தில் வாழ்ந்த ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலாகிய விஜயன் 700 பேருடன் கப்பலில் வந்து இலங்கையில் இறங்கியபோது அங்கே யட்சர்களும் யட்சணிகளும் இருந்தார்கள். விஜயன் குவேனி என்ற யட்சணியை மணமுடித்து அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். சிறிது காலத்தில் அவன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் காட்டுக்குத் துரத்திவிட்டு இந்தியாவிலிருந்து வருவித்த பாண்டிய ராசகுமாரியை மணமுடித்தான். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. 38 ஆண்டுகள் ராச்சியத்தை ஆண்டபின் இறந்துபோனான். அவனுடைய சகோதரன் இந்தியாவிலிருந்து வந்து ராச்சியத்தை தன் சொந்தமாக்கி ஆண்டான். அவன் மூலம் சந்ததி உண்டாகியது. இலங்கையின் ஆதிபிதா விஜயன் அல்ல; அவன் வரும்போது ஏற்கெனவே அங்கே இருந்த யட்சர்கள்தான் ஆதிகுடிகள். அவர்கள் நாகரிகமானவர்கள். விஜயன் குவேனியை சந்தித்தபோது அவள் தாமரைத் தண்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள்.அவர்கள்தான் நாட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள்.

ஈழத்துப் பூராடனார் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.அவருடைய வழக்கறிஞர் சுந்தரலிங்கம் இடது கையில் மகாவம்சத்தையும், வலது கையில் பூராடனார் எழுதிய ‘யாரிந்த வேடர்’புத்தகத்தையும் வைத்துக்கொண்டு வாதாடினார். ‘கனம் நீதிபதி அவர்களே, மகாவம்சம் சொன்னதையே என் கட்சிக்காரரும் சொன்னார். அவர் தேசத்துரோகி என்றால் மகாவம்சத்தை எழுதிய வண. மகாநாம மஹாதேரோவும் ஒரு தேசத்துரோகியே.’ நீதிபதிகள் ஆசிரியரில் குற்றமில்லை என்று தீர்ப்புக்கூறி அவரை விடுதலை செய்தார்கள். ஆனால் அவர் எழுதிய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் குற்றம் செய்யவில்லை என்றால் அவர் எழுதிய புத்தகங்களை ஏன் பறித்தார்கள். ‘குற்றம், ஆனால் குற்றமில்லை.’

கடந்த திங்கள்கிழமை பின்மதியம் மணிவேலுப்பிள்ளையும், செல்வமும், நானும் பல மாதங்களாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்த சந்திப்புக்காக ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து கலாநிதி ஈழத்துப் பூராடனார் இருக்கும் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம். அவர் கனடாவில் குடியேறி 25 வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் நாங்கள் அவரை சந்தித்தது கிடையாது. அவர் வீட்டு நிலவறையில் ஒரு சுழல் கதிரையில், 20ம் நூற்றாண்டு கம்புயூட்டருக்கு முன், எங்களை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார். கம்புயூட்டருக்கு பக்கத்தில் ரேடியோ, டிவி, ஓர் அச்சடிக்கும் யந்திரம். சுவரோடு படுக்கை. மற்ற இரண்டு சுவர்களிலும் காணப்பட்ட புத்தகத் தட்டுகளில் நிறைய புத்தகங்கள் ஒழுங்கோடு அடுக்கி வைக்கப்படிருந்தன. நாங்கள் போனபோது அவர் கம்புயூட்டரில் வேலை செய்ததை நிறுத்திவிட்டு தொலைபேசியில் யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தார்.

வாசலில் தயங்கி நின்றோம். எங்கள் நிழல் உள்ளே புகுந்துவிட்டது. கோடுபோட்ட நீலக்கலர் சாரத்தை நெஞ்சிலே கட்டியிருந்தார். நீளக்கை சேர்ட், அதற்கு மேலே கைவெட்டிய ஸ்வெட்டர். பேசுவதை நிறுத்திவிட்டு ‘வாருங்கள், வாருங்கள்’ என்று வரவேற்றார். ஒவ்வொருவராகக் கைகொடுத்தோம்.அவர் கைகள் நாலு மேல்மடல்களை நீக்கிய வாழைப்பூபோல குவிந்துபோய் வெள்ளையாக குளிர்ந்தது. கம்புயூட்டரில் பாதிவேலை காத்து நின்றது.

தமிழில் கணினியில் அச்சடித்து முதலில் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் ‘பெத்தலேகம் கலம்பகம்’. அது வெளிவந்த வருடம் 1986. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை உருவாக்கியது கூட அவர் முயற்சியில்தான் நடந்தது. இதுதவிர முதன்முதல் மின்கணினி அமைப்பில் ‘நிழல்’ என்ற மாதப் பத்திரிகையை 1987ல் இருந்து தொடர்ந்து வெளியிட்டதும் அவர்தான். இன்று நூற்றுக்கணக்கான புது எழுத்துருக்கள் தமிழில் தோன்றிவிட்டாலும் அவர்,தான் உருவாக்கிய எழுத்துருவையே இன்றைக்கும் பயன்படுத்துகிறார்.அந்த எழுத்துருவிலேயே அவர் புத்தகங்கள் அச்சாகின்றன.அவருடைய எழுத்துருவுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். அவர் பெயர் வைக்கவில்லை என்றார். பத்தாவதாகவோ, இருபதாவதாகவோ அவருடைய எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு பெயர் வைத்திருப்பார்.அது முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ஒரு பெயரும் சூட்டவில்லை. உலகத்தில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணினி தமிழ் எழுத்துருவை இன்று பயன்படுத்துவது ஒரேயொருவர். அது அவர்தான்.

‘எப்படி ஈழத்துப் பூராடனார் என்ற புனைபெயர் வந்தது? சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஈழத்து பூதந்தேவனார் என்று வருகிறது. அப்படியா?’ என்று கேட்டோம். இவருடைய இயற்பெயர் க.தா.செல்வராசகோபால்.இவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால் அந்தப் பெயரில் எழுதினால் சிக்கல் வரும் என்று புனைபெயரில் எழுத ஆரம்பித்தார். ஆனால் அங்கேயும் சிக்கல் இருந்தது. அவருடைய நட்சத்திரம் பூராடம் என்பதால் ‘பூராடனார்’ என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் எழுத முடியவில்லை. இந்தியாவில் ஏற்கனவே ஒருத்தர் அதே பெயரில் எழுதிக்கொண்டிருந்தார்.ஆகவே ‘ஈழத்துப் பூராடனார்’ என்று மாற்ற வேண்டியதாகிவிட்டது.

இவருடைய பாட்டன் வல்வெட்டித்துறையில் கப்பல் ஓட்டியவர். அதனால்தானோ என்னவோ இவருக்கு கடல் வாழ்க்கையும், கடற்கரை சார்ந்த மக்களும், கடல் பயணமும் பிடிக்கும். கடலைப் பற்றிய பெரும் ஈர்ப்பு சிறுவயது தொடங்கியே இவருக்குள் இருந்தது. தமிழில் கடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு காவியம்கூட இல்லாதது அவருக்கு குறையாகப்பட்டது.அந்த நேரம் அவர் ஆதி கிரேக்கக் காவியமான ஒடிசியை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துக்கொண்டிருந்தார். அதை தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. இதய அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்த நேரம் அது. நாளுக்கு 18 மணிநேரம் வேலைசெய்து மொழியாக்கத்தை முடித்தார். ஆறே ஆறு மாதத்தில் இந்தப் பெரிய பணியை ஒப்பேற்றினார். அதைத் தொடர்ந்து இலியட் காவியத்தையும் மொழியாக்கம் செய்தார்.முதன்முதலில் ஹோமருடைய இரண்டு காவியங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்தது இவருடைய பெரும் சாதனை.ஒருவருடைய வாழ்நாள் முழுவதையும் உறிஞ்சிவிடும் இந்தப் பணியை தனியொருவராக நின்று சாதித்ததை அவர் பெரிய விசயமாக நினைக்கவே இல்லை.

தட்டில் பிஸ்கட்டும் குளிர்பானமும் வந்து, நாங்கள் சாப்பிட்டோம். அவரும் சாப்பிட்டுவிட்டு ஒரு விரலால் வாய் ஓரத்தை துடைத்தார். ‘ஒடிசி காவியத்தில் உங்களுக்குப் பிடித்த பாத்திரம் என்ன?’நான் பெனிலோப்பேயை சொல்வார் என்று நினைத்தேன். அவர் சொன்னது ஆர்கொஸ் என்ற ஒடிசியசின் வளர்ப்பு நாயை.ஒடிசியஸ் தன் மனைவியை விட்டுப்பிரிந்து போருக்கு புறப்பட்டுப் போகிறான். இருபது வருடங்களுக்குப் பிறகு அவன் மாறு வேடத்தில் திரும்பி வந்தபோது ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் நாய் மாத்திரம் அவனை துள்ளித் துள்ளி வரவேற்றது. அடுத்தகணம் நிலத்தில் விழுந்து இறந்துபோனது.

கலாநிதி ஈழத்துப் பூராடனாரைப் பார்க்க நாங்கள் வந்தது ஓர் ஆர்வத்தினால்தான். இவருடைய ஒரு புத்தகத்தையேனும் நாங்கள் ஒருவரும் படித்ததில்லை. கண்ணால் பார்த்ததும் கிடையாது. கனடாவில் ஒரு கடையிலும் வாங்க முடியாது. பெரிய நூலகங்கள் அவருடைய நூல்களை பாதுகாக்கின்றன. அவர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை படித்திருந்தோம். தன்னலம் கருதாது தமிழுக்காக 60 வருடங்கள் தொடர்ந்து உழைத்த ஒரு பெரியவரை நேரில் ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்தான் எங்களை அங்கே கொண்டு சேர்த்திருந்தது. அவரை ஒருமுறை தொடவேண்டும், அவர் புத்தகத்தைத் தொடவேண்டும். அதுதான் நாங்கள் அவரை பார்க்கப்போன காரணம். ‘ஐயா உங்கள் புத்தகங்களை ஒருமுறை பார்க்கலாமா?’ தயங்கிக்கொண்டு கேட்கிறோம். ‘இது என்ன கேள்வி. நல்லாய்ப் பாருங்கள்.’

கடைகளில் வாங்கக் கிடைக்காத அந்த நூல்களை நாங்கள் ஆர்வமாக ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டுப் பார்க்கிறோம். அனைத்தும் தடித்த அட்டைகளுடன் நன்கு பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள். அழகான ஒழுங்குடன் நூலகத்தில் வைத்திருப்பதுபோல அடுக்கப்பட்டிருந்தன. சில நூல்களை நான் விரித்துப்பார்க்கிறேன். ஹோமரின் இலியட், ஒடிசி இரண்டு நூல்களின் மொழியாக்கங்களும் இருக்கின்றன. ஹோமரின் ஒடிசி காவியம் (508 பக்கம்) 2089 செய்யுள்களைக் கொண்டிருக்கிறது; 8360 பாவரிகள். இலியட் காவியம் (602 பக்கம்) 2775 செய்யுள்களைக் கொண்டிருக்கிறது; பாவரிகள் 11,100. பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. ஒடிசி காவியத்தை முடித்ததும் இலியட்டின் மொழியாக்கத்தை தொடங்கியதாகக் கூறினார். அதற்கு இன்னொரு ஆறு மாதம்.

இரண்டு காவியங்களையும் மொழியாக்கம் செய்த பின்னர்கூட அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆதி கிரேக்க நாடகங்களைத் தேடி மொழியாக்கம் செய்யத் தொடங்குகிறார். 48 நாடகங்கள், துன்பியல் 32, இன்பியல் 16. இவை 46,657 பாவரிகளில் 14 புத்தகங்களாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகின்றன. ஒரு பல்கலைக் கழகம் பல அறிஞர்களைச் சேர்த்து கூட்டாகச் செய்யவேண்டிய வேலையை தனியொருவராக செய்து முடிக்கிறார். அன்ரிகோன் நாடகத்தில் ஒரு காட்சியின் தமிழாக்கத்தை பார்த்தோம். மூல நூல்களின் கருத்தில் இருந்து நழுவாமல் யாப்பமைதி கொண்ட பாவரிகளில் நாடகமாகத் தந்திருக்கிறார்.

சகோதரிகள் அன்ரிகோனும் இஸ்மினும் பேசுகிறார்கள்:

இஸ்மின்: தந்தை போயினன் தனியர் ஆயினம், இந்த வுலகில் எங்கு போகுவம்

பந்த மிருந்தும் பாவமுற்ற சொந்த மற்றும் சோர்ந்து போயினம்.

பாடகர்:நொந்து போவதேன் நொடிந்து வீழ்வதேன்

தந்தை போலத் தாங்கும் கைகள்

உந்தன் அருகில் உதவ இருக்க

வெந்து கண்ணீர் விடுதல் வீணே.

அன்ரிகோன்: அக்கா நாமே செல்வோம் வாராய்.

காவியத்துக்கு ஏற்ற செய்யுள் வடிவமெனினும் படித்தவுடன் புரியக்கூடிய விதமான அமைப்பு.

இரண்டாவது புத்தகத் தட்டை பார்வையிடுகிறோம்.கிறிஸ்தவ இலக்கியங்கள் 19; சைவ இலக்கியங்கள் 10. இவர்தான் இவற்றையும் படைத்திருக்கிறார். இலக்கியம், வரலாறு, சுயசரிதம் என்று இன்னும் பல நூல்கள் அடுக்கில் இருக்கின்றன. நாடகத் தமிழ் நூல்கள் நாலு. 35 வருடகால ஆராய்ச்சியில் திரட்டி செய்யுள் வடிவில் தயாரித்த நீரரர் நிகண்டு. ஒன்பது காண்டங்கள் கொண்ட தமிழழகி காப்பியம். அவருடைய பன்முக ஆளுமைக்கு சாட்சியாக 60 தொகுதிகளில் அவர் படைத்த தமிழ்த் திரைப்படக் களஞ்சியம்.

எழுத்துச் சீர்திருத்தம் என்றதும் உணர்ச்சி வசமாகிறார். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வற்புறுத்தி வருகிறார். இதுபற்றி எட்டு நூல்கள் எழுதியிருக்கிறார், அதில் முதல் நூல் 1977ல் வெளியானது. தற்பொழுது யூனிகோட் தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டுமென்று ஆழமான ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். ‘மாற்றம் என்பது கம்புயூட்டர் வசதிக்காக மாத்திரமல்ல. எழுதுவதில் நேரம் மிச்சப்படவேண்டும். அச்சடிப்பதில் பக்கம் மிச்சமாகவேண்டும். 20 பக்கத்தில் வரவேண்டிய கருத்து 19பக்கத்தில் வரவேண்டும். அப்பொழுதுதான் எழுத்துச் சீர்திருத்தம் முழுமையாகும்.’ எவ்வளவு பாடுபட்டாலும் தமிழ்நாடு என்ற மகா உருவம் அசைந்து கொடுத்தால்தான் முடியும். ஈசலின் பறப்பு தவளையின் வாய் தூரம் மட்டும்தான்.

இத்தனை நூல்களை எழுதியவர் பார்ப்பதற்கு குழந்தைப்பிள்ளை போலவே இருக்கிறார். ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரர் இவரை காணி வழக்கு ஒன்றுக்கு சாட்சியாக கூப்பிட்டார். இவரும் சம்மதித்து போனார். வழக்கு விவரங்களை இவர் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை. அங்கே நீதிபதி கேட்ட கேள்விக்கு உண்மையான பதில் அளித்தார். வழக்கு தோற்றுவிட்டது. நண்பரிடம் தன்னை ஏன் கூட்டிவந்தார், தான் உண்மை பேசுவது தெரியும்தானே என்றார். அது தெரிந்திருந்தால் வழக்குக்கு போகாமலே இருந்திருக்கலாம். நண்பரும் வேறு யாரையாவது கூட்டி வந்திருப்பார்; அவருடைய வழக்கும் வென்றிருக்கும் என்றார்.

இளவயதில் இவருக்கு வேலை பலவிதமான சோதனைகளுக்கு படிப்பது. அச்சுக்கலை பற்றிய பரீட்சைகூட எழுதி தராதரப் பத்திரம் பெற்றிருக்கிறார். ஒரு முறை இவர் சைவப் புலவர் சோதனைக்குப் படித்து பரீட்சையிலும் பாசாகிவிட்டார். திருநெல்வேலியில் சைவ சித்தாந்தக் கழகம் நடத்திய பரீட்சை இது.ஆனால் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இவர் கிறிஸ்துவர், எப்படி சைவப் புலவர் ஆகலாம்? சைவதீட்சை பெற்றவர்கள்தான் அதற்கு தகுதியுள்ளவர்கள் என்று சொல்லி அவருக்கு சான்றிதழ் கொடுக்கவில்லை. இவர் அதனால் ஒன்றும் மனம் உடைந்துவிடவில்லை. பாடுபட்டு படித்து சேகரித்த சைவ அறிவை அவர்கள் ஒன்றும் திரும்பக் கைப்பற்ற முடியாது அல்லவா?

இவரைப் பார்க்க வருவதற்கு முன்னரே இவர் நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார் என அறிந்திருந்தோம். ஆனால் ஒரு மனிதர் தன் வாழ்நாளில் இத்தனை நூல்களைப் படைத்து சாதனை படைக்கமுடியும் என்பது நம்புவதற்கு கடினமாகத்தான் இருந்தது. ஓர் எறும்பு தன் எடையிலும் பார்க்க பத்து மடங்கு பாரமான உணவுப்பொருளை தூக்கிச்செல்லும் என்பது தெரிந்ததுதான். ஆனால் ஒருத்தர் தன் எடையைப் போல பத்துமடங்கு எடைகொண்ட நூல்களைப் படைக்கமுடியும் என்பதை அன்றுதான் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டோம்.

நாங்கள் புறப்பட்டோம். ‘நீங்கள் இப்போது என்ன எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டேன்.அவர் ‘இந்த வருடம் திமிலைத் துமிலன் பற்றி எழுதிவிட்டேன். வருடம் முடிவதற்குள் நான் இன்னும் மூன்று புத்தகங்கள் எழுதவேண்டும்’ என்றார். அவர் ஏற்கெனவே 250 நூல்களுக்கு மேல் எழுதிவிட்டார். இந்த 82 வயதிலும் இப்படி ஓர் உழைப்பா என எனக்கு திகைப்பாக இருந்தது. இவருக்கு விழித்திருப்பது, தூங்குவது என்ற நேரப் பாகுபாடே கிடையாது.இரவு மூன்று மணிக்கு விழிப்பு ஏற்பட்டாலும் எழுந்து எழுதுவார்.தூங்கும் நேரம் தவிர மீதி நேரம் எல்லாம் எழுத்துத்தான்.நாளுக்கு எட்டுப் பக்கத்துக்கு குறையாத எழுத்து. இசைமேதை பீதோவனிடம், அவர் நாலு பேர் சேர்ந்து வாசிக்கும் ஒன்பதாவது இசைக்கோவையை எழுதி முடித்த பின்னர் அவரைச் சந்தித்த இன்னொரு இசைமேதையான ஃபிரான்ஸ் ஸ்கூபெர்ட் இப்படிச் சொன்னாராம். ‘ஐயா, நீங்களே எல்லாவற்றையும் எழுதித் தள்ளிவிட்டிர்களே. எங்களுக்கு என்ன மிச்சம் வைத்தீர்கள்.’ எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. தமிழில் சகல துறைகளிலும் ஆழமாக தன் கருத்தைப் பதிவு செய்திருப்பவருக்கு செம்மொழி மாநாட்டில் பங்குபெறும்படி அழைப்பு வரவில்லை. நம்பமுடியாமல் இருக்கிறது.

ஒவ்வொருவராக அவருக்கு கைகொடுத்து விடை பெற்றோம்.சுழல் கதிரையில் உட்கார்ந்தவாறே கைநீட்டினார்.அவருடைய நின்ற உருவத்தை நாங்கள் ஒருவருமே காணவில்லை. இத்தனை தூரம் பயணம் செய்து இனிமேல் இவரை வந்து நாங்கள் பார்க்கப்போவதில்லை. தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்த இந்தப் பெரிய ஆளுமை, பன்முக ஆய்வாளர், தமிழ் விற்பன்னர் முன் நின்றபோது எகிப்து பிரமிட் முன் நின்ற சின்னப் பிராணிபோல என்னை உணர்ந்தேன். தெருவில் கிடைத்த விலைமதிக்கமுடியாத நாணயத்தை கால்சட்டைப் பையிலிட்டு விரல்களினால் உருட்டியபடி நடப்பதுபோல என் மீதி வாழ்நாளில் இந்த நினைவை உருட்டிக்கொண்டிருப்பேன். நாங்கள் அவரைச் சந்திப்பது அதுவே கடைசி என்று எங்களுக்குத் தெரியும்; அவருக்கும் தெரியும். எதிர் சுவரில் நாலு அடுக்குகளில் காலிகோ சீலை தடித்த அட்டைப் புத்தகங்கள் கீழே இருந்து கூரைமட்டும் ஒழுங்காக, நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அவர் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார். அவை எல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள்