பரவசநதி பரபரத்தோடிய அந்தக் கணங்களை திரும்பிப் பார்க்கிறேன்.
வீதி உலாவரும் சாமியை பக்திப் பரவசத்தோடு பகதர்கள் கும்பிடுவது போல பலர் எழுந்து நின்று ஒரு மனிதரைப் பார்த்துக் கும்பிட்டார்கள் கூச்சலிட்டார்கள்.
எங்களின் எட்டாவது மாவட்டம் எனவும் எட்டாமலே போய்விடுமோ எனவும் நாங்கள் ஏங்கும் அம்பாறை மாவட்டத்தில்தான் இந்த பரவச நதி பரபரத்து பாய்ந்தோடியது.
திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட விநாயகபுரத்திலும் காயத்திரி கிராமத்திலும் பின்னர் கோமாரி, கஞ்சி குடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய தமிழர்தம் தொல்லூர்களில் அந்தக் காட்சிகளை யான் பார்த்தேன்.
அந்த ஊர்களில் மட்டுமல்ல தமிழர்களும் இசுலாமிய மக்களும் நெருக்கமாக வாழும் அக்கரைப்பற்று பிரதேசத்திலும் தமிழர்களுடன் இசுலாமிய மக்களும் அதேயளவு வரவேற்பை கொடுத்தனர்.
அங்கே குழுமி இருந்த விசேட அதிரடிப் படையினர் சற்றே வெட்கப்பட்டு விலத்திச் செல்லும் அளவுக்கு அந்த வரவேற்பு இருந்தது.
அந்த வரவேற்புக்குரியவர் அல்லது வரவேற்பை பெற்றவர் எங்கள் விடுதலை வென்றெடுக்க உள்ளன்புடன் போராடிய விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினர் திருமிகு பசீர் காக்கா அவர்கள்தான்.
கடலன்னையும் சீற்றம் கொண்டெமை தாக்கியழிப்பதற்கு இரண்டரை தசாப்தங்களுக்கு முன்னர் அந்த மண்ணில் ஓர் அதியுன்னத போராளியாக உலா வந்தவரை நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் கண்ட போது மக்கள் உணர்ச்சிப்பிழம்பாகி நின்றனர்.
ஆழிப்பேரலையில் தாம் அடைந்த துன்பத்தையும் துயரத்தையும் ஒரு கணம் அம்பாறை மக்கள் மறந்தே போயினர்.
அத்தகைய ஒருவர் என்றுமே எங்கள் செம்மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரனே!
இவர் என்றென்றும் எம் மக்களால் துதிக்கப்படுவார்!
இவர் என்றென்றும் பெரு மரியாதைக்குரியராக தமிழ்பேசும் அனைத்து மக்களாலும் போற்றப்படுவார்!
இவர் என்றென்றும் எல்லோராலும்
நெஞ்சம் நிறைய வாழ்த்தப்படுவார்! ☀️
– வயவையூர் அறத்தலைவன்-