தமிழ்த் தேசிய ஆன்மீகர்களும் இறை நம்பிக்கையும்.

தமிழர்களின் நிழலரசோ அல்லது அந்த அரசைக் கட்டியமைத்து ஆளுகை செய்த விடுதலைப் புலிகள் அமைப்போ எந்த ஒரு மதத்துக்கும் சார்பானது அல்ல!

அதே நேரம் தனிப்பட்ட ரீதியாக புலி உறுப்பினர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைக்கைகளை ஒரு போதும் இடையூறு செய்யவோ அல்லது தகர்க்கவோ இல்லை!

யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே குருநகர் எனும் தமிழர்தம் தொல்லூரின் கடலோரம் அருளாட்சி புரியும் வேளாங்கன்னி மாதா ஆலயம் மிகவும் அற்புதமானதும் அழகானதும் ஆகும்.

நீண்ட காலத்தின் பின்னர் அன்னையின் தேவாலயம் விழிகளின் வழி நுழைந்த போது எந்தன் நினைவுப் பெட்டகம் மெல்ல திறந்து கொள்கின்றது.

ஆம்,

1995 ஆம் ஆண்டும் அதன் இறுதி மாதங்களில்தான் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒட்டுமொத்த வலிகாமமும் எழுந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்தது.

தமிழர் நிலத்தினை கைப்பற்றி ஆக்கிரமிக்க வேண்டும் என்ற போர் வெறி கொண்ட இராணுவத்துடன் தமிழர்படையானது மக்களையும் மண்ணையும் காத்திட தனது வலுவனைத்தையும் ஒருங்கிணைத்துப் போராடிக் கொண்டிருந்தது.

பிராந்திய வல்லரசுகள் கொடுத்த போரியல் பேராதரவினால் போரில் சிங்களப்படையின் கை செங்களத்திடை ஓங்கி இருந்தது.

ஐப்பசி கடந்து கார்த்திகை மலர்ந்துவிட்டால் பருவமழை வழமை போலவே கனமாக பெய்யும் ஆதலினால் நவீன காலத்தின் ஆனைப்படையாகிய “யுத்தராங்கிகள்” சகிதம் முன்னேறிவரும் இராணுவ நகர்வு தடைப்படும் அல்லது தாமதிக்கலாம் என்றே நினைத்திருந்தோம்.

யாமெல்லாம் நினைத்ததிற்கு மாறாக அந்த ஆண்டு கார்த்திகையும் மார்கழியும் பொழியும் மழையும் பொய்த்தேவிட்டது.

பாரினில் பாதகச் செயலுக்காய் பெயர் பெற்ற ஶ்ரீலங்காப் படையினருக்கு கோதாரி விழுந்த பருவகாலமும் சாதகமாகவே இருந்தது.

போரிடர் பேரிடர் தந்த இக் காலகட்டத்தில்தான் தமிழர்தம் போராளிகளின் களமருத்துவர்களான நாங்களும் களமுனையிலும் சில வேளைகளில் களமுனைக்குச் சற்றுப் பின்னேயும் தவம் இருந்தோம்.

ஆழியின் அலைகள் மெல்லன வந்து வந்து மோதும் குருநகர்க் கடற்கரையில் சில்லென குளிரும் காரிருளில் கரையோரம் அருந்தவம் இருந்தோம்.

கோப்பாய்,கோண்டாவில் திருநெல்வேலி ஆகிய ஊர்கள் எதிரியின் கரங்களில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது.

எதிரி எமை கிட்ட நெருங்கிய பின்னரும் யாழ் நகரை காக்க இரவு, பகல் என எல்லாப் பொழுதுகளிலும் தொடர்ச்சியாகக் களமாடிய வீரர்கள் விழுப்புண் தாங்கி வீழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

உயிர்காக்கும் உன்னத பணியைச் செவ்வனே செய்திருட களத்துக்கு நெருக்கமாகவே நாமும் இருந்தோம்.

தமிழர்தம் பெருமை மிக்க யாழ்ப்பாண நகருக்குள் மிக மிக நெருக்கமாக களமுனை வைத்திய நிலையத்தை அமைத்திருந்தோம்.

அனேகமாக பத்தே நிமிடத்தில் எமது கரங்களுக்கு விழுப்புண் அடைந்த வீரர்கள் கொண்டு வரப்பட்டுவிடுவார்கள்.

சின்னஞ் சிறிய சிகிச்சைகளைச் செய்துவிட்டு பின்னணி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்க இருள் கவிந்த பின்னர் நிலாமகள் வானவூர்வலம் வரும் வரை காத்திருப்போம்.

என்பு முறிவுக் காயக்காரர்கள்தான் அதிகம் அதிகம் வலியால் துடி துடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு வலியினை விரட்ட இரண்டொரு சொசிகன் (நோ நிவாரணி மருந்து) கொடுத்துவிட்டு கதை சொல்லியும் தலையினை நீவிவிட்டபடியும் எந்த நேரமும் குண்டுகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் பாதுகாப்பு நிலைகள் அமைத்துப் பாதுகாத்துக் கொண்டிருப்போம்.

அந்த காலகட்டத்தில் தரைப்பாதை எதிரி கைக்கு போனதால் கடல்வேங்கைகளே காயமடைந்தவர்களை வலிகாமத்திலிருந்து தென்மராட்சிக்கும் பின்னர் வன்னிக்கும் எடுத்துச் செல்வார்கள்.

தமிழர்களின் கடற்படையான கடல்வேங்கைகள் பகலில் எமை நெருங்காமல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான போர் விமானங்களும் மணியந்தோட்டம் மற்றும் மண்டைதீவு படையினரும் தடுத்த வண்ணம் இருப்பார்கள்.

தமிழர் தேசத்திற்கான கடமையை நாங்கள் செய்வது போலவே சிங்கள தேசத்திற்கான தமது கடமையை செவ்வனே செய்து கொண்டிருப்பார்கள்.

இரவில் அவர்களுக்கெல்லாம் கண்ணாமூச்சி காட்டியபடி கடற்புலிகளின் படகுகள் வருவதுண்டு.

தன்னினம் வாழ உடலில் விழுப்புண் தாங்கி
வலியால் முனகும் தோழர்களை படகில் ஏற்றிய பின்னரே நிம்மதி அடைவோம்.

நாங்கள் பாதுகாப்பாக படகில் ஏற்றி அனுப்பினாலும் கடலில் இலங்கை கடற்படையிடமோ அல்லது விமானபடையிடமோ அடிவாங்காமல் அக்கரையை அவர்கள் அடைய இக்கரையிலிருந்தபடி கடவுளை வேண்டுவோம்.

“ஞானவைரவரே” என என் குலதெய்வத்தை வாய் முணுமுணுத்தாலும் கண் எதிரே இந்த மாதா கோவிலே தெரிவதுண்டு.

 

ஆதாலால் வேளாங்கன்னி மாதாவுக்கு ஒரு நேர்த்தி வைத்தே அனுப்புவது வழமை.

இன்றும் உயிரோடு உலகப் பரப்பெங்கும் உலாவிடும் எந்தனது நோயாளர்களை காணும் போதும் கதைக்கும் போதும் எந்தனது பிரார்த்தனையும் வழிபாடும் நேர்த்தியும் பலித்ததாக ஆழமாக நம்புகின்றேன்.

அதன் பின் வந்த காலத்தில் “எனைப் போலவே இயக்க உறுப்பினர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?” என சிந்திப்பதும் உண்டு.

எங்கள் மூத்த வைத்தியர் தர்மேந்திரா அவர்கள் தனது முழங்காவில் வைத்தியசாலை வளாகத்தில் ஒரு கிறிஷ்தவ தேவாலயமும் பிள்ளையார் ஆலயமும் அமைத்தது தனது நோயாளர் நலனில் அதிக அக்கறை காட்டியதுடன் அவரும் வழிப்பாடு செய்வதைப் பார்த்த போது கடவுளை உணர்ந்திருக்கின்றேன்.

நம்பிக்கைகளோடு எமை வருத்தி யாமெல்லாம் விடியலுக்காய் ஒன்றுபட்டு உழைத்தோம்.

அந்த உழைப்புக்கும் விரைவில் உண்டெனவே ஊதியம் உண்டு! ✊

– நம்பிக்கையோடு அறத்தலைவன் –