காகங்களே காகங்களே காட்டுக்கு வெளியே போறீங்களா?

 

தூதாக வந்த காக்கைகளை கனத்த மனத்துடன் கலைக்க வேண்டிய கட்டாயம். தேசம் காக்க கானகத்தில் காவலர்கள் மனவலைச் சுனாமி கூட அமைதியாகத்தான் அடிக்கும்.

மணலாறு காட்டுக்குள்ளே அமைக்கப்பட்டிருந்த “மைக்கல்பேஷ்” என்ற அந்த முகாம் அழிவடைந்திருந்தாலும் அழகாய் இருந்தது.

“மின்னல் சண்டை” நடைபெற்ற காலத்தில் அந்த முகாம் வரை ஶ்ரீலங்கா இராணுவம் வந்து போயிருந்தது.

விமானத் தாக்குதலும் பலமாக “மைக்கல் முகாம்” மீது நடைபெற்ற காரணத்தால் அந்தப் பகுதியில் மரங்கள் பல அழிவடைந்ததால் ஒரு சின்னஞ் சிறிய வெட்டையும் ஆங்கு காணப்பட்டது.

வானுயர்ந்த பென்னம் பெரிய ஓரிரு பாலைமரங்கள் உட்பட பல மரங்களும் பட்டுப் போயிருந்தது.

மரங்கள் பட்டுப் போயிருந்தாலும் அந்த மரங்களின் கிளைகளின் மீதிலே காலையில் காகங்களும் மாலையில் மயில்களும் வந்து மகிழ்ந்து உட்காருவதுண்டு.

மாலையில் உட்காரும் மயில்கள் இரவு முழுக்கத் தங்கி காலையில் பறந்து காட்டுக்கு வெளியே உள்ள ஆண்டாங்குளத்து வெட்டை, நிசாம் வெட்டை போன்ற பெரிய வெட்டைகளில் மேய்ந்து திரியும்.

“பசுமரத்தில் தமை உருமறைத்து (Camouflage) உட்காராமல் பட்டமரத்தில் ஏன் மயில்கள் உட்காருகின்றன? என காட்டுக்குப் புதியவனான யான் கேட்டேன்.”

அடியேனுக்கு கிடைத்த பதிலை உங்களுக்கும் கூறுகின்றேன் கவனமாய்க் கேளுங்கள்.

நிலத்திலிருந்து மரத்தின் மேலே ஏறி வந்து மயிலை வேட்டையாடும் விலங்குகள் (Predators) பசுமரத்தில் ஏறும் போது எந்தவித சத்தமும் நள்ளிரவில் நடுக்காட்டில் தூக்கத்திலிருக்கும் மயிலுக்குக் கேட்காது.

ஆனால், பட்டமரமோ மயில்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும்!

மயிலை வேட்டையாடும் இரவு விலங்குகள் ஏதாவது ‘பட்டமரத்தில் ஏறினால்’ அதன் காய்ந்து உக்கிய பட்டைகள் முறிந்தோ அல்லது கழன்று சத்தம் உண்டாகும்!

அந்தச் சிறிய சத்தத்தினை வாய்ப்பாக வைத்து மயில் பறந்து தப்பிக் கொள்ளும் என்றார் மருத்துவப் போராளி லோலோ!

அஃதே,

காலையில் வந்து கரைந்து கரைந்து மரங்களில் உட்காரும் காகங்களையும் கண்டேன்!

“காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீர்களா..?

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களைக் கண்டு களிப்பீர்களா…?

என அமைதி காக்கவென வந்த ஹிந்திப்படைகள் ஊரில் அட்டூழியங்கள் செய்த காலத்தில் ஊரிலுள்ள சிறுவர்கள் காட்டுக்குத் தூதனுப்பிய காகங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

“1989 ஆம் ஆண்டுகளில் நாங்கள் காட்டுக்கு அனுப்பிய காகங்கள் இப்போதும் இங்கு தங்கி இருக்கின்றதோ!” என அகம் மிக மகிழ்ந்தேன்!

ஆனால்,

என்னுடன் வந்த மூத்த போராளிகள் காகங்களைக் கண்டு கலக்கமும் ஒரு வகைப் பதட்டமும் அடைந்தனர்.

“காகங்கள்குடியிருப்புப் பகுதிகள் அல்லது  மனித நடமாட்டம்உள்ள  பிரதேசங்களில்தான் வாழும்” தன்மை உடையவவை.

ஆதலினால்,

எதிரி வேவு விமானங்களின் கழுகுக் கண்களில் (High resolution cameras) கூட்டம் கூட்டமாய் மரக்கிளைகளில் உட்காந்திருக்கும் காகங்கள் தென்பட்டால் எதிரி இந்த இடத்திற்கு நாங்கள் மீண்டும் வந்திருப்பதை இலகுவில் புரிந்து கொள்வான்.

ஆம், நட்ட நடுக்காட்டுக்குள்ளே காகங்கள் பெரிய தடையம் ஆகிவிடும்.

இந்த இடத்தில் இன்று எமது இருப்பு உறுதிப்படுத்தப்பட்டால் நாளையே விமானத் தாக்குதல் இடம்பெறலாம் எனக் கூறிய மூத்த தோழர்கள் காகங்களை விரட்டினர்.

தொடரும்… 🌳🌳🌳🌳