நாள் : 41
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :1
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
அறம் என்றவுடனே முதலில் வருவது இல்வாழ்க்கை. இல்வாழ்க்கையே மிகச் சிறந்த அறம் என்கிறது தமிழர் பண்பாடு. அனைத்து அறங்களும் பிறக்குமிடம் இல்வாழ்வே.
பிறவியின் பயன் என்ன என்ற கேள்விக்கு தமிழ் பண்பாடு சொல்லும் பதில் – பிறவற்றிற்கு உதவத்தான்.
தான் மட்டுமே உதவாமல், காலா காலத்திற்கும் பூமியில் உள்ள அனைத்திற்கும் உதவ வகை செய்வது இல்வாழ்க்கை மட்டுமே.
இயல்புடைய மூவர் என்போர் யார்?
இல்வாழ்க்கை தவிர இன்னும் மூன்று வகை வாழ்க்கை முறைகள் உண்டு
1. பிரம்மச்சர்யம் – திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்வது
2. சன்னியாசம் – திருமணத்திற்கு பின் குடும்பம் விட்டு பிரிந்து அனைத்தையும் விட்டு வாழ்பவர்கள்
3. வானப்பிரஸ்தம் – வயதான போது இயற்கைச் சூழலில் தனிமையில் வசிக்கும் முதியோர்
இம்மூவருமே பொருளீட்ட மாட்டார்கள். இவர்களுக்கான பொருளையும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டோரே ஈட்டிக் கொடுத்து காக்கின்றனர்.
இதில் அழகான ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார் வள்ளுவர். நல்லாற்றின் நின்ற துணை.
இந்த மூன்று வகையினரும் நல்வழியில் ஒழுக வேண்டும் எனில் இல்வாழ்வோன் துணையாக வேண்டும்.
இல்லறத்தானின் துணை இல்லை என்றால் இவர்கள் என்றும் நல்வழியில் செல்ல முடியாது.
ஆக இல்லறம் என்று பெயர் வரக்காரணமே அது இல்லாவிடில் அறம் இல்லை என்பதால்தான்.
அதிலேயே அறமின்றி இருக்கலாமா?
இல்லறத்தின் அறம் பற்றி இன்னும் என்ன சொல்கிறார் என மேலும் பின் வரும் செய்யுளில் பார்ப்போம்.