“கொலரா”என்பது மிகவும் பயங்கரமான கொள்ளை நோய்.”
“மிக வேகமாகப் பரவி குறைந்த காலத்திலேயே பல உயிர்களைக் காவு கொள்ளக்கூடியது.”
ஆதலால்,
“விரையுங்கள்! விரையுங்கள்!!”என மூத்தவைத்தியர் எமை விரட்டிட …., விரட்டிட…நாங்கள் விடத்தல்தீவுக்கு
விரைந்தோம்!
“பூனை குறுக்கே போவதை”அபசகுனமாக
(Bad omen)பார்க்கும் எம் தமிழ்ச்சமூகம் அந்த
ஐந்தறிவு சீவனிடமிருந்தும் கற்றுக் கொள்ள ஒரு பாடம் இருந்தது!
நாங்கள் இரவிரவாய் கொலராத் தடுப்பு மாத்திரைகளை கொடுத்த கதையை முந்தைய எந்தன் வயவன் பதிவில் வாசித்திருப்பீர்கள் என எண்ணியவாறு தொடர்கிறேன்.
இரவு பகலாய் நாங்கள்
“கொலரா” எனும் வாந்திபேதி
நோய்க்கான தடுப்பு மாத்திரைகள் கொடுத்து முடித்த பின்னரும் பல வகையான நோய்த்தடுப்புப் பணிகள் எமக்காய் காத்துக் கிடந்தது.
ஆம்,
வெண் முத்துக்களுடன் கடலட்டையும் நிறைவாய் விளையும் எங்கள் மன்னாரின் நீள(ல)க்கடல் போலவே எம் முன்னே பற்பல பணிகள் பரந்து விரிந்து கொண்டேயிருந்தது.
அடுத்த பணி மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வினை (Health Awareness among our People) வினைத்திறன் மிக்க முறையில் ஏற்படுத்தும் பணி ஆகும்.
(01.)தனிநபர் சுகாதாரம்
(Personal Hygiene)
(02.) சுற்றுச்சூழல் சுகாதாரம்
(Environmental Hygiene)
மேற்குறித்த இரண்டு விடையங்கள் பொதுவாகவே எந்தவொரு தொற்று நோய்த்தடுப்புக்கும் முக்கியமானவை ஆகும்.
சுற்றுச்சூழல் சுகாதாரத்தினை கவனிக்கும் பொறுப்பை பொதுச் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் தனிநபர் சுகாதாரம் (Personal Hygiene)
தொடர்பில் அதிகம் கதைக்க வேண்டியிருந்தது.
பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் எளிய முறையில் நோய்த்தடுப்புத் தொடர்பில் கதைக்க வேண்டும். ஏலவே பயத்தில் உறைந்து போயிருக்கும் மக்கள் மத்தியில் அவர்களை மேலும் பீதியடையச் செய்யாமல் கதைக்க வேண்டும்.
எந்த நேரமும் எள்ளலுடன் சிரித்துக் கொண்டே கதைக்கும் நண்பன் யாழ்வேளுக்கும் அடியேனுக்கும் மூத்த வைத்தியரால் வழங்கப்பட்டது.
பணி சற்று கடினமானதாக இருந்தது
ஆனாலும் மூத்த வைத்தியரின் சொல்லைத் தட்டிக் கழிக்க முடியாததால் பணியை ஏற்றுக்கொண்டோம்.
முதலில் ஆரம்பப் பாடசாலை(Primary School) மாணவர்கள் மத்தியில் சுகாதார விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அந்தப் பணி ஆகும்.
குழப்படி செய்தாலும் அதிகம் கண்டிக்காமல் வகுப்பைவிட்டே விரட்டாமல் பிஞ்சுகளுக்கு ஆடிப்பாடிப் படிப்பிக்க வேண்டும்.
நாங்கள் இருவரும் பிரிஷ்டல் போட்டில் (Bristol board)சில படங்களைக் கீறிக் கொண்டு மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட ஒரு கடலோரக் குக்கிராமத்துப் பாடசாலைக்கே முதன் முதலில் போனோம்.
அந்தப் பாடசாலை அடிப்படை வசதிகள் ஏதுமே அற்ற கிராமத்து மாணவச் செல்வங்களை கொண்ட பாடசாலை ஆகும்.
ஒருவேளை அந்தப் பிஞ்சுகளின் வீட்டில் மலசலகூடம் இருந்தாலும் யாழ்ப்பாண இடப்பெயர்வினால் ஊதிப் பருத்திருந்த மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மலசலகூடங்கள் அவ்வூரில் இல்லை என்பதை அறிந்து கொண்டோம்.
ஆதலினால் மலசலகூடத்திற்கு வெளியே நீங்கள் மலம் கழித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கதைத்தோம்.
அதிர்ச்சியான அயர்ச்சியான அந்த நேரத்திலும் முகத்தில் மலர்ச்சிதனை வலிந்து வரவழைத்தபடி எங்கள் பாலகர்கள் மத்தியில் கதைக்கத் தொடங்கினோம்!…..
“வெட்டையான இடங்களில் நீங்கள் மலம் கழித்தால் மலத்தை ஆழமாக வெட்டிப் புதைக்க வேண்டும்….!”
“சின்னஞ் சிறியவர்வர்களாகி நீங்கள் அப்பா,அம்மாவிடம் சொல்லி கட்டாயம் மலத்தைப் புதைக்க வேண்டும்…!”
இந்த அறிவுரைகளை நண்பன் யாழ்வேள் பாலகர்களுக்குச் சொல்லும் போதுதான் அவனுக்கு பூனையாரின் ஞாபகம் வந்தது.
எனவே….
“பூனையார் காக்கா இருப்பதை பார்த்தீர்களா பிள்ளைகளே? “எனக் கேட்டான்.
சில பிஞ்சுகள் முகத்தைச் சுழித்தார்கள்.
சில பிஞ்சுகள் கலகலவெனச் சிரித்தார்கள்.
சில பிஞ்சுகள் ‘ஓம் ஓம்’ என ஒரே குரலில் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தனர்.
சில பிஞ்சுகள் பதிலுரைக்க
கைகளை உயர்த்தினார்கள்.
இப்போது பூனையாரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஒவ்வொன்றாய் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்ட போது அவர்களே சொல்லத் தொடங்கினார்கள்.
பூனை….
“முதலில் கிடங்கு கிண்டும்”
பிறகு, என்ன செய்யும்?….?
“கக்கா இருக்கும்”
பிறகு,என்ன செய்யும்?……..?
“முன்னாங்கால்களால் மண்ணை விறாண்டி கிடங்கை மூடிவிட்டுச் சொல்லும்”… என பிள்ளைகள் முடித்தனர்.
இப்போது நண்பன் யாழ்வேள் உண்மையாகவே சிரித்தபடி பேசத் தொடங்கினான்….
பிள்ளைகளே பூனையார் செய்வதைப் போல நீங்களும் மண்ணைத் தோண்டிவிட்டு மலம் கழிக்க வேண்டும்!
ஆனால் நீங்கள் கால்களால் கிடங்கு தோண்ட வேண்டியதில்லை,
மண்வெட்டியால் கிடங்கு வெட்டலாம்!
வெட்டிய அந்த சிறிய கிடங்கிலேயே மலம் கழிக்க வேண்டும்.
அதன் பின்னர் சரியான முறையில் அப்பா, அம்மா உதவியுடன் மலத்தைப் புதைக்க வேண்டும்…………….!😀
கதை சொல்லி முடித்த பின்னரும் அப் பிஞ்சுகள் கலகலவெனச் சிரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
அந்த வெள்ளை உள்ளத்து முத்துச் சிரிப்புகளை பார்த்த எங்கள் மன வானில் நம்பிக்கைப் பறவை சிறகடித்தது!
“கொலரா”எனும் கொடிய அரக்கனை பாதி வழிக்கு மேல் அடித்துவிரட்டிய உள்ளுணர்வு உண்டானது!
– வயவையூர் அறத்தலைவன் –