ஒரு நள்ளிரவு நேரம்(1998இல்) மன்னார் மாவட்டத்தின்
மாந்தை மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட
பகுதிகளுக்கு சென்றோம்.
குறிப்பாகச் சொல்வதானால் இரவோடு இரவாக விடத்தல்தீவு,பள்ளமடு,பலகைமுனை,
இலுப்பைக்கடவை,படகுதுறை, அந்தோனியார்புரம், கள்ளியடி,தேவன்பிட்டி,மூன்றாம்பிட்டி போன்ற எங்கள் தொல்லூர்களில் கால் பதித்தோம்.
“எத்தனை மணியானாலும் பரவாயில்லை!,
எத்தனை வீடுகளானாலும் பரவாயில்லை!,
வீட்டின் படலையத்தட்டி, கதவைத்தட்டி சனத்தை எழுப்பி அத்தனை பேருக்கும் கொலரா தடுப்புக் குளிசைகளைக் கொடுங்கள்.” ….என்ற
மூத்தவைத்தியரின் பணிப்புக்கு ஏற்ப அங்கே
உள்ள அனேக வீடுகளுக்குச் சென்றோம்.
ஆனால் அங்கே படலைகளைத் தட்டமுடியவில்லை!
காரணம் அங்கே படலைகளே இருக்கவில்லை!
ஏன் அனேக வீடுகளுக்கு கதவுகள் கூட இருக்கவில்லை.
தரப்பாள் கொட்டில்களுக்கு கதவு இருக்கமுடியுமா..?
மரத்தின் கீழ் உறங்குபவர்களுக்கு கதவு இருக்க முடியுமா…?
யாழ்ப்பாண இடப்பெயர்வினால் பாசையூர்,குருநகர்,நாவந்துறைப் பகுதியிலிருந்து பெருமளவு மக்கள் அப்பகுதிக்கு வந்திருந்தனர்.
அம் மக்களில் ஒரு பகுதியினர் உறவினர் வீட்டின் தலைவாசலிலும், தாழ்வாரத்திலும், முற்றத்திலும் படுத்திருந்தனர்.
எம் மக்களில் சிலர் பெரிய மரங்களின் கீழும் படுத்திருந்தனர்.
கனத்த நெஞ்சுடன் அவர்களை எழுப்பி தடுப்பு மாத்திரைகளை விழுங்கக் கொடுத்து உறுதிப்படுத்திவிட்டு அறிக்கையும் எழுதி வந்தோம்!
(Coronavirus 🦠 மீட்டிய Cholera நினைவுகள்)