செந்தமிழ் வீரர்களின் செங்குருதியால் புனிதம் அடைந்த கோட்டைகள்!

ஒல்லாந்தர்கள் தங்கள் காலத்தில் கோட்டைகளை அமைத்த காரைநகர்,பூநகரி, ஆனையிறவு,இயக்கச்சி, வெற்றிலைக்கேணி ஆகிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலேயே யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் தமது பாரிய தளங்களை அமைத்தார்கள்.

எங்கள் தமிழீழ, தமிழக மண்ணின் ஆழத்திலிருக்கும் “தொல்லியல் மூலாதாரங்கள்” வரலாற்று நிகழ்வுகளின் சமகாலத்தவை ஆகும்.

“இலக்கிய மூலாதாரங்கள்” மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களில் இலக்கிய நயம் பேணப்ப்பட்டதால் அவை சற்று
மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன.

தொல்லியல் மூலதாரமும் இலக்கிய மூலதாரமும் சரியான முறையில் ஆராயப்பட்டு எங்கள் வரலாற்றினை நாங்கள் மிகைப்படுத்தல்கள் இன்றி நேர்மையான முறையில் பதிவு செய்திடல் வேண்டும்.

ஒல்லாந்தர்கள் தங்கள் காலத்தில் கோட்டைகளை அமைத்த காரைநகர்,பூநகரி,
ஆனையிறவு,இயக்கச்சி, வெற்றிலைக்கேணி ஆகிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலேயே யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் தமது பாரிய தளங்களை அமைத்தார்கள்.

தொடராக எழுதி சரியான முறையிலே பாதுகாக்கப்படாத அல்லது பாதுகாக்கப்பட்டும் கடல்கோள்களாலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாலும் அழித்தொழிக்கப்பட்ட எங்கள் வரலாற்றின் வளமான தடங்களை தேடி இளைய தலைமுறையிடம் கொடுக்க வேண்டியது எங்களது அத்தியாவசிய கடமை ஆகும்.

01.) ஈழத்தாழிகள்
02.) செப்பேடுகள்
03.) சுடுமணல் கிணறுகள்
04.) செப்பு நாணயங்கள்
05.) மட்கலப் பாத்திரங்கள்

மூலமும் எங்கள் தொன்மைகளை தேடித் தேடி தோண்டியே வருகின்றோம்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமத்தாழிகள் யாழ்ப்பாணம்
ஆனைக்கோட்டையிலும்,கிளிநொச்சி குஞ்சுப்பரந்தனிலும் கண்டெடுக்கப்பட்டது.

குஞ்சுப்பரந்தன் ஈமத்தாழியே தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி எனும் தனித்துவத்தை பெறுகின்றது.

செப்பேடுகள் எனும் போது வடமராட்சியின் வல்லிபுரத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்பேடுகள் காத்திரமாக மாங்கனித்தீவில் தமிழரின் தொன்மையை செப்புகின்றது.

அஃதே,

250 ஆண்டுகளுக்கு முந்தைய எங்கள் வரலாற்றை இடிந்த கோட்டைகளின் இடுக்குகளிலும் தேட வேண்டியே உள்ளது.

‘#ஆக்கிரமிப்புச்_சின்னம்’ அல்லது ‘#அடிமைச்_சின்னம்’ என இந்தக் கோட்டைகள் சம்பந்தமான கதைகள் எம்மவரால் பேசப்பட்டாலும் சில கோட்டைகள் தமிழ் வீரர்களின் செங்குருதிபட்டு புனிதம் அடைந்தும் உள்ளது.

மேற்குறித்த விடையத்தை வாசித்த உடனேயே ‘யாழ் கோட்டை’யே உங்கள் மனதில் மழையாகும் அல்லது தீமூட்டும்.

ஆனால்,

அண்ணளவாக யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கும் வன்னி வளநாடு எனப்
போற்றப்பட்ட எங்கள் பெருநிலப்பரப்புக்கும் இடையே உள்ள நான்கு கோட்டைகள் பலருக்கும் இலகுவில் நினைவில் வருவதில்லை.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தரால் வளமும் பலமும் கொழித்த
வன்னிவள நாட்டினைக் கைப்பற்ற முடியவில்லை.

பாயும் புலி பண்டார வன்னியன் வன்னியில் இருந்து படையெடுத்து வந்து தங்களை தாக்காமல் தடுப்பதை பிரதான நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணத்தின் தென் எல்லையில் ஏறத்தாழ ஒரே நேர் கோட்டில் இந்த நான்கு கோட்டைகளும் கட்டப்பட்டுள்ளன.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் கட்டப்பட்ட
அந்தக் கோட்டைகளாவன மேற்கிலிருந்து கிழக்காக பின்வரும் எம் தொல்லூர்களில் உள்ளன.

(01.)பூநகரிக் கோட்டை
(Pooneryn Fort)

(02.)ஆனையிறவுக் கோட்டை
(Fort Beschutter)

(03.) இயக்கச்சி கோட்டை

(04.)வெற்றிலைக்கேணி கோட்டை
(Fort Pyl)

ஆகியன ஆகும்.

வெற்றிலைக் கேணியிலுள்ள கோட்டையின் பெயர் #பைல் கோட்டை ஆகும்.

இயக்கச்சி கோட்டைக்கும் வெற்றிலைக்கேணி கோட்டைக்கும் ஆங்கில அல்லது ஒல்லாந்தப் பெயர்களில் சிறிது குழப்பம் உண்டு. ஆதலால் எங்கள் ஊர்களின் பெயராலேயே அந்த கோட்டைகளையும் நாம் அழைக்கலாம்.

யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையே உள்ள நுழை வாயில்களாக இந்த திருவூர்கள் அமைந்திருப்பதாலும் இதன் கேந்திரமுக்கியத்துவங்களையும் கருதியுமே இங்கே கோட்டை கொத்தளங்களை அமைத்தார்கள்.

இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில்(Map) #சிவப்பு_நிறத்தினால் குறிக்கப்பட்ட வெற்றிலைக்கேணி கோட்டையிலும் #எம்மவர்தம்_சிவந்த குருதி காலத்துக்கு காலம் படிந்து புனிதம் அடைந்தது.

ஆக்கிரமிப்பாளர்களால் கட்டப்பட்டாலும் அன்பாளர்களின் குருதியால் நனைந்த
ஒரு ஞாபகச் சின்னமேதான்.

புத்தாயிரம் ஆண்டாகிய Y2K பிறந்த பின்னர் வந்த மாதங்களில் இந்த இடத்தின் சுடுமணலில் எம் மண்ணின் புனிதர்களோடு
ஆனையிறவை மீட்பதற்காய் யானும் கால் புதைத்து நடந்த நாட்கள் அடியேனால் இலகுவில் மறந்துவிட முடியாதவை ஆகும்.

முல்லைத்தீவில் அமைந்திருந்த ஒல்லாந்தர் கோட்டையை பாயும் புலி பண்டார வன்னியன் தாக்கி பீரங்கி ஒன்றினை கைப்பற்றிய வரலாறு உண்டு.

அதே போல கண்டாவளை ஊடாக படையெடுத்து வந்த #பண்டாரவன்னியன்_படைகள் இந்த பைல் கோட்டையை தாக்கி கைப்பற்றி அழித்தனர்.

இச் சமரிலும் எம் முந்தையரின் குருதி படிந்திருக்குமாயின் இக்கோட்டையும் புனிதம் அடைந்துவிட்டதாகவே கருதலாம்.

இன்று சிதைவடைந்து பெருபாலும் மணலில் புதைந்து போயுள்ள இக் கோட்டையில் காவல் கோபுரம் அல்லது வெளிச்சவீடு போன்ற ஒரே ஒரு கட்டடமும் ஒரு கிணறும் அழிவடையாமல் உள்ளது.

எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த எங்கள் யாழ் கோட்டையை போல ஐங்கோணக் கோட்டையாக இல்லாமல் “சதுரவடிவம்” கொண்ட கோட்டையாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனித்துவம் ஆகும்.

மாங்கனித்தீவில் அக்காலத்தில் நிலைகொண்டிருந்த ஒல்லாந்தர்கள் தங்கள் படையினருக்கு இங்கே பயிற்சிகள் கொடுத்தார்கள் எனவும் சொல்கின்றார்கள்.

இச் சின்னஞ் சிறிய கோட்டையை “பயிற்சிக்கோட்டை” எனவும் இலங்கை தொல்லியல் திணைக்களம் பதிவு செய்துள்ளது.

இரண்டு சிதைவடைந்த கொத்தளங்களுடன் ஒரு கிணறுமாக சின்னஞ் சிறிய பரப்பிலேயே இக் கோட்டை அமைக்கப்பட்டிருப்பதால் இதை எமது மக்கள் பொதுவாக இதனை கோட்டை என்றே சொல்வதில்லை.

இக் கோட்டையை அண்டிய மக்களும் அயலூரில் உள்ளவர்களும் இதனை வெளிச்சவீடு என்றே அழைக்கின்றனர்.

ஊசாத்துணை
*************
An Historical,Political and
Statistical Account of Ceylon and its Dependencies.

தொடரும்…

– வயவையூர் அறத்தலைவன்-