நெடும்பயணத்தில் ஒரு நாள் நெடுங்கேணியில்!

 

“குரங்குகளுக்கு ஒன்றிரண்டு அல்ல நிறையவே மானுட இயல்புகள் உண்டு.”

பெரும் குண்டுகளின் பேரொலியினால் பயப்பீதி ஏற்படும் இக்கட்டான தருணங்களில் மனித சஞ்சாரம் உள்ள இடங்களில் ஒன்று கூடும்” என்றார்.😍

அற்புதமான இந்த பாசப்பிணைப்பு என் நினைவுப் பெட்டகத்தை தட்டித் திறந்த போது கொட்டிய சில நினைவுகளை நண்பர்களின் பார்வைக்கு கீழே பரவுகின்றேன்!

தரணியில் தமிழனுக்கென ஒரு நாடு சமைக்கும் நெடும் பயணத்தில் பல தரிப்பிடங்களில் ஓய்வெடுத்தோம்.

அந்த நெடும் பயணத்தில் ஒரு நாள் நெடுங்கேணி பிரதேசத்தில் ஒரு நள்ளிரவு நண்பர்களுடன் சென்றோம்.

அடுத்த நாள் இடியும் மின்னலுமாக செயலாற்ற வேண்டும் ஆகவே எல்லோரும் படுத்துறங்குங்கள் எனும் கட்டளைக்கு இணங்க இரவு நேரகாவல் கடமைக்கு (Night Sentry) விழித்திருப்பவர்களை தவிர அனேகமாக எல்லோருமே படுத்து உறங்கிவிட்டோம்.

உறங்க முடியாத அளவு வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தாலும் உடல் களைப்பால் உறங்கிவிட்டோம்.

அதிகாலையில் செல்கூவி வீழ்ந்து வெடிக்கும் சத்தத்துடனேயே எழுந்தோம்.

அடர்ந்த அடவியால் சூழப்பட்ட அந்த இடத்தில் இருந்த ஒவ்வோர் மரத்திலும் பல பத்து குரங்குகள் வீதம் பல நூற்றுக் கணக்கான குரங்குகள் தங்கியிருந்தன.

சின்னனும் பெரிசும் ஆணும் பெண்ணுமாக எண்ணிறைந்த அந்த குரங்குகளை கூட்டம் கூட்டமாய் குடும்பம் குடும்பமாய் பார்ப்பதற்கு பெருவியப்பாக இருந்தது.

எனினும்,

அடுத்த வந்த நாட்களில் அந்தப் பிரதேசத்திலேயே குரங்குகளே
இருக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து ஓர் இரவில் காடே அதிரும் வண்ணம் அந்தப் பிரதேசத்தில் பல நூறு எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது.

அன்று அந்த எறிகணை வீச்சின் மத்தியிலும் கோடலிக்கல்குளம் பகுதியிலிருந்து “பாலப்பா” எனும் மூதாளர் பால் கொண்டு வந்திருந்தார்.

எம் முந்தையராகிய குரங்குகள் இன்றிரவு ஏன் எங்கள் இடத்தைச் சூழ்ந்த மரங்களில் கூடி மாநாடு போட்டுவிட்டு இன்னமும் கலைந்து செல்லாமல் இருப்பது குறித்து கேட்டேன்.

அப்போது ஏட்டறிவும் பட்டறிவும் காட்டறிவும் கொண்ட பாலப்பா பின்வருமாறு கூறினார்.

“குரங்குகளுக்கு ஒன்றிரண்டு அல்ல நிறையவே மானுட இயல்புகள் உண்டு.”

பெரும் குண்டுகளின் பேரொலியினால் பயப்பீதி ஏற்படும் இக்கட்டான தருணங்களில் மனித சஞ்சாரம் உள்ள இடங்களில் ஒன்று கூடும்” என்றார்.😍

ஆம்,

ஆட்லெறி எறிகணை எனும் வடிவில் பேரிடர் வந்த போது மானுடர் எம் துணை தேடி வந்த உறவுகள்தான் அந்த அன்பாளர்கள்.

குரங்குகள் எம் முந்தையர் என கூர்ப்புக்கொள்கையை இந்த உலகிற்கு வெளியிட்ட சால்ஷ் டார்வினும் எங்கள் அடவியில் மெல்ல மெல்ல நடந்து வருவது போன்ற பிரமை வந்தது.

மரங்களில் தாவித் திரியும் அந்த உறவுகளின் செயல்கள் எங்களுக்கு புரிந்த போது மனம் நெகிழ்ந்ததுடன் புரிந்து கொள்ள முடியாத பல உணர்வுகளுக்கு ஆட்பட்டோம்.

அலைவந்து தாலாட்டும் அழகிய மாங்கனித்தீவில் புத்தமதம் மதம் கொண்டெழுந்த போதெல்லாம் தமிழ்பேசும் மாந்தர்கள் மட்டுமல்ல எம்முடன் அந்த அழகிய தீவில் வாழவந்த அத்தனை உயிர்களும் பதை பதைப்பதை அன்று மட்டுமல்ல இன்றும் காண்கின்றோம்!