“அறிவியல் கழகம் இணுவிலில் இருந்தது. எங்கள் பரிசோதனைகளின் களமாக அது விளங்கியது.
அப்போது எங்கள் ஆராய்ச்சி சாம்பலிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பதாக இருந்தது.
ஆண்டு பத்து விஞ்ஞான புத்தக அறிவுடன் யாழ்ப்பாணத்துக்கே சாம்பலிலிருந்து மின்சாரம் வழங்கும் பரிசோதனையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.
சாம்பலுக்குள் இரு பக்கமும் ஈயத்தகடை வைத்தபோது வோல்டோ மீற்றர் அசைவை காட்டியது.
‘உரேக்கா’ எண்டு கத்த இருந்த நேரத்திலைதான் அந்த ஐந்து சியாமாச் செற்றிகளும் வந்து தாங்கள் கொண்டுவந்த சாமான்களை எறிந்து போட்டு ஓடின.
சாமான்கள் பெருஞ்சத்தத்துடன் வெடித்தன. எங்கையோ கிட்டடியிலை விழுந்திருக்கோணும். காற்றின் அமுக்கம் அறிவியல் கழகம் வரை வந்து போனது.” ….
என “அங்கதச்சுவை”யுடன் கடந்த காலத்தை மீட்டியவன் அடியேன் அல்ல.
தனது வலைத்தளத்தில் இதை எழுத்தியவர் Dr. கிருஷ்ணபிள்ளை குருபரன் ஆவார்.
அது சரி மேலே உள்ள கதைக்கும் ஒளிப்படத்திற்கும் என்ன தொடர்பென நீங்கள் கேட்பது புரிகின்றது.
ஆம், அறிவியல் கழகத்தினை நிறுவி திறம்பட ஆளுகை செய்த மருத்துவர் சத்தியா அவர்கள்தான் படத்தில் உள்ளார்.
எங்கள் யாழ் இடப்பெயர்வு கொஞ்ச நாட்கள் கிளிநொச்சியில் தரித்து நின்றே மல்லாவிக்கும் வவுனியாவுக்கும் சென்றது.
மூன்று மாதமாக வைத்தியசாலைகளை நகர்த்துவதும் இரவு பகலாக காயமடைந்தவர்களின் அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அம்மா, அப்பா, அக்கா அண்ணன்களின் தொடர்பில்லை.
அப்போதுதான் ஒரு நாள் நண்பர் சத்தியா பெருங்குரலெடுத்து கத்திக் கொண்டு ஓடிவந்தார்.
கொஞ்சம் பதட்டத்துடன் என்ன எனக் கேட்டேன்?
அம்மாவும் அண்ணன்மாரும் கிளிநொச்சி திருநகரில் ஒரு வீட்டில் இருப்பதாகச் சொன்னார். தனது தாயையும் சகோதாரங்களையும் கண்டது போல என் நண்பர் மகிழ்வில் திளைத்தார்.
ஈற்றில் யான் மகிழ்வோடு குடும்பத்தைக் கண்டடைந்தேன்.
கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு காலங்கள் உருண்டோடி புலத்தில் கால் பதித்த ஆரம்பத்தில் ஒரு நாள் சத்தியாவின் இளைய சகோதரியை எனது பெறாமகளின் ரீயூட்டரியில் (Tuitary) கண்டேன்.
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கொண்ட சத்தியாவின் வீட்டில் அவள்தான் கடைக்குட்டி. அவள் தனது மூத்த அண்ணன் சத்தியாவின் மீது உயிரையே வைத்திருதாள்.
“அண்ணாக் குட்டி எங்கே? என சத்தியாவின் சகோதரி கேட்டாள்?
யான் வாயிருந்தும் ஊமையானேன்!
அவள் தலையில் அடித்து பெருங்குரலெடுத்து அழுதாள்!……
விடையில்லாமால் விண்ணிலும் மண்ணிலும் விசரராகி தேடும் தமிழருக்கு ஆண்டவன் தானும் பதிலுரைப்பானா?
காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்