போரியலில் தந்திரோபாயமும் (Tactics) மூலோபாயமும் (Strategy) எவ்வளவு முக்கியமோ அதேயளவு உருமறைப்பும் முக்கியமானது ஆகும்

உருமறைப்பு (camouflage) என்பதும் உயிர்களிடமிருந்து மாந்தர் யாம் கற்றுக் கொண்ட புதுக்கலை!

ஒளிவு மறைவின்றிப் பார்க்கவும் பேசவும் தெரிந்த இந்தச் சின்னஞ் சிறுவர்களின் ஒளிகொண்ட இப்படத்தைப் பார்த்ததும்,..

எங்கள் அம்மா கோழிக்கு ‘அடைவைப்பதும்’ குஞ்சு பொரித்து வெளியே வந்து கீச்சு கீச்செனக் கீச்சுடுவதும் பொரிக்காத கூழ் முட்டைகளை மிதக்கவிட்டுப் பரிசோதிப்பதும் எந்தன் நினைவில் மலர்ந்து பல கதைகளைச் சொல்கின்றது.

சிறுகால் கொண்ட மஞ்சள் நிற பஞ்சாய் தெரியும் குஞ்சுகளின் கீதம் எமை மகிழ்விக்கும்.

ஆம், வானத்தில் சத்தமின்றி வட்டமிடும் வல்லூறுகள், பாவ புண்ணியம் பார்க்காத பருந்துகள் போன்ற பறவைகளிடமிருந்து பாதுகாக்க அம்மா “கோழிச்சாயம்” பூசுவது எங்கள் மகிழ்வினை இரட்டிப்பாக்கும்!

குதூகலித்துக் குலுங்கிய குழந்தைப் பருவம் நிறைவடைந்து தமிழ்மண்ணில் வாலிப்பரும் எய்திய போது தமிழீழ நாடு போரியலையும் படி என்று உரைத்தது.

போரியலில் தந்திரோபாயமும் (Tactics) மூலோபாயமும் (Strategy) எவ்வளவு முக்கியமோ அதேயளவு உருமறைப்பும் முக்கியமானது ஆகும்.

தொண்ணூறுகளின் மதியத்தில் உருமறைப்பு தொடர்பான தொடக்க
வகுப்பில் உருமறைப்பு (camouflage) தொடர்பில் உங்களுக்கு என்ன தெரியுமென எங்கள் போர்ப்பயிற்சி ஆசிரியர் மேஜர் அன்பு கேட்டார்.

உருமறைப்புத் தொடர்பில் அம்மா தந்த/சொன்ன “அரிச்சுவடி” சொன்னேன் ஆசிரியர் அசந்து போனார்.

– வயவையூர் அறத்தலைவன் –