உதவி செய்வோம் ; மகிழ்வாய் வாழ்வோம்.

519

முன்பொரு காலத்தில் ஒரு குருவும் அவருடைய சீடர்களும் சிறியதொரு காட்டுக்கு அண்மையில் வசித்து வந்தார்கள். குரு அவருடைய சீடர்களுக்கு ஒரு தேர்வு வைப்பதற்கு விரும்பினார். அவர் சீடர்களுக்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். குருவே எமக்கு விருந்து வைக்கிறாரே என்று எண்ணி சீடர்கள் மகிழ்ந்தார்கள். வாழை இலை முன் அமர்ந்து, இந்த வேளை உணவை தமக்களித்த இறைவனுக்கு நன்றி கூறி வழிபாடு செய்தனர். அவர்கள் தங்களது உணவை உண்ண ஆயத்தமான போது குரு இவ்வாறு சொன்னார்.

“சீடர்களே! உங்களுக்கு ஒரு பரீட்சை வைக்க எண்ணுகிறேன். நீங்கள் உணவு உண்ணும் போது உங்கள் கைகளை மடிக்கக் கூடாது. இப்போ நீங்கள் உணவு உண்ணத் தொடங்கலாம்” என்று கூறிவிட்டு குரு வழிபாட்டுக்குச் சென்றுவிட்டார். சீடர்களுக்குக் குழப்பமாக இருந்தது. சிலருக்குக் கோபமும் வந்தது. குரு எம்மை எல்லாம் ஏமாற்றுகிறாரோ? என்று கூட எண்ணினார்கள்.

உடனே ஒரு புத்திசாலிச் சீடன் எழுந்து இவ்வாறு கூறினான். “நண்பர்களே! நாம் எமது உணவை எமக்கு முன்னால் உள்ளவர்களுக்கு ஊட்டி விடுவோம். இவ்விதம் செய்தால் எங்கள் கைகள் மடியாது”

அவனுடைய ஆலோசனையை மற்றவர்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்கள். திரும்பி அவ்விடம் வந்த குரு சீடர்கள் அனைவரும் விருந்துண்டு மகிழ்வதைக் கண்டார். ஒவ்வொரு சீடனும் தனுக்கு முன்னால் உள்ள சீடனுக்கு ஊட்டி விடுவதைக் கண்டார். அவர்களின் புத்திசாலித்தனத்தை எண்ணித் தானும் மகிழ்ந்தார்.

நாம் ஒருவருக்கு ஒருவர் செய்யும் உதவி, நம்மையும் நம்மைச் சூழ இருப்போரையும் மகிழ்விக்கும் என்பதை இக்கதை எங்களுக்கு ஊட்டுகிறதல்லவா? எனவே நாமும் ஒருவருக்கொருவர் உதவி செய்து எல்லோரும் மகிழ்வுறும் வண்ணம் வாழ்வோம்.

-மலர் கணேசலிங்கம்