காலம் தந்த காணரும் மாந்தரில் ஒருவர் கரிகாலன் அண்ணா

எங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரச உத்தியோகத்தினை தூக்கி எறிந்துவிட்டு போராட்டக்களத்தில் குதித்தவர்களில் திரு.கரிகாலன் அவர்களும் ஒருவர் ஆவார்!

மீனகங்களையும் தேனகங்களையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமாக இலங்கும் எங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் “களுவாஞ்சிக்குடி” எனும் தொல்லூரில் அவதரித்தவர்தான் இந்தக் கரிகாலன்.

தனது நீண்ட நெடிய போராட்ட வாழ்வில் அம்பாறை மாவட்டத்தின் அழிக்கம்பை முதல் அளவெட்டி வரை எமது மக்களுக்கு இந்த விடுதலை வீரன் செய்த உன்னத பணிகள் எண்ணில் அடங்காதவை.

அஃதே,

 

இளைய போராளிகளாகிய எங்களுக்கும் இவர் ஆற்றியவை அளப்பரியவை ஆகும்.

தமிழீழ விடுதலைப் போரின் முதுகெலுப்பாக விளங்கிய பல உன்னத வீரர்தமைச் செதுக்கியவர்.

அறநெறிகளுடன் கூடிய அறா தொடர்ச்சி உடைய அரிய பண்பாடு கொண்டவர்கள் நாங்கள் என்பதை பல மேடைதனில் இயல்பாய் இயம்பியவர்.

தமிழீழ உட்கட்டுமானம்தனை செவ்வனே செதுக்கியவர்.

இறுதிக்கட்ட போரில் பசியினாலும் நித்திரை இன்மையாலும் அளவுக்கு அதிகமான வேலைப்பளுவினாலும் எங்கள் உடல் சோர்ந்து கொண்டிருக்கும் போது அவர் எங்கள் கையில் உண்பதற்கு சாதம் தந்தார்!

அது பிரசாதமாய் இருந்தது!

அந்த நொடி வரை கோவிலில் தரப்படுவது மட்டும்தான் “பிரசாதம்” என்றிருந்த அடியேனுக்கு உண்மையான பிரசாதம் என்றால் என்ன என்பது கொஞ்சம் விளங்கியது.

இந்தியா, இலங்கை கடற்படைகளின் பல நூறு கடற்படைக்கலங்கள் சாலை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் தொடக்கம் புல்மோட்டை வரை வட்டமடித்து கொட்டமடித்து நின்ற போது அந்தக் நெய்தல் மண்ணில் மீன்பிடித் தொழில் கூட சாத்தியம் இல்லாமல் போனது.

ஏன் கரைவலை மீன்பிடித் தொழிலே இல்லை என்றான போது ஊரிலுள்ள சில நன்மாந்தரின் உதவியுடன் கரைவலை வீசி மீன் பிடித்துக் கொண்டு வந்து எங்கள் வைத்தியசாலையில் இருந்த நோயாளருக்கும் எமக்கும் பிரசாதம் தந்தார் கரிகாலன் அண்ணா! 🙏