முரளி உனக்காகவும் நாங்கள் அறச்சீற்றம் கொண்டோம்

முரளி உனக்காகவும் நாங்கள் அறச்சீற்றம் கொண்டோம்.

கொச்சைத் தமிழ் கதைக்கும் உனக்கு “அறச்சீற்றம்” எனும் வார்த்தையின் கனபரிமாணம் தெரியுமோ தெரியவில்லை.

பச்சைத் தமிழ் பேசும் எனக்கு இந்த வார்த்தையையும் வாதத்தையும் நீ நேசிக்கும் உன் எசமானாரின் சிங்களமொழியில் சொல்லத் தெரிவில்லை.

ஆங்கில மொழியில் வேண்டுமெனில் சொல்லலாம் ஆனாலும் என் இனமானம் அந்த முயற்சியையும் தடுக்கின்றது.

மாவீரர்களையும் மாமனிதர்களையும் மாமேதைகளையும் எழுதிய வன்னிப் பெருநிலப்பரப்பின் அன்றைய தினசரி பத்திரிகைகளில் உனக்காகவும் ஆசிரியர் தலையங்கங்கள் தீட்டப்பட்டன.

நீ அறிந்தாயோ தெரியாது ஆனால் யான் வாசித்தேன்.

உன் சாதனைகளை சோதனைகளுக்கு உட்படுத்தினான் அவுஷ்ரேலியன்.

வேதனையில் வெந்து அந்த அவுஷ்ரேலிய நாட்டு வெள்ளைக்காரனுடன் நாங்கள் கோபித்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு.

“நீ சும்மா பந்தை எறிகிறாய் எறிகிறாய்”

என அவுஷ்ரேலியன் சொல்லச் சொல்ல உன் அம்மா, அப்பாவைவிடவும் வடகிழக்கில் பல தமிழ் அம்மாக்கள் அவுஷ்ரேலிக்காரன் மீது கோபித்துக் கொண்டது உண்டு.

அதே அம்மக்கள்தான் வடக்கிலும் கிழக்கிலும் ஊண் உறக்கம் ஏதும் இன்றி இன்றும் தெருவோரங்களில் தவம் கிடக்கின்றனர்.

ஆனால் நீயோ ஏளனம் செய்கின்றாய்!

அந்தக் காலத்திலே அவுஷ்ரேலியாவுக்கு வெள்ளையனை அனுப்பிய இங்கிலாந்து வெள்ளையனின் வாரிசாகிய டேவிட் கமரூனிடம் எங்கள் அன்னையர்கள் நடிப்பதாகச் சொன்னாய்.

தமிழர்களின் போராட்டம் குறித்து நீ சொன்னவை என் நெஞ்சில் முள்ளாய் குத்துகின்றது.

ஐய்யகோ!

ஆட்லெறியையும் அஞ்சிஞ்சியையும்
ஆயிரம்கிலோ நிறைகொண்ட ஆகாயவிமானக் குண்டையும் தாங்கிய எங்கள் நெஞ்சம் உன் ஏளனப்பேச்சால் காயமடைந்து உள்ளதே.