வாங்காத சொல்லுக்கு பொங்காதே மனமே.

ஒரு முறை புத்த பெருமான் தியானத்தில் இருந்தார். அப்போது அங்கே வந்த ஒருவர் புத்தரின் தியானத்தைக் கலைத்தார். புத்தரை ஏசினார். புத்தரை வசை பாடினார். சொல்லத்தகாத கொல்லும் கொடுஞ்சொற்களால் சுட்டார். அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அடியார்களுக்கு ஆத்திரம் வந்தது. புத்தரோ புன்னகைத்தபடியே இருந்தார்.

அவர் போன பின்பு அடியார்கள் புத்தரைக் கேட்டார்கள். திருப்பி ஒரு சொல் கூட சொல்லாமல் இருந்தீர்களே.. உங்களுக்கு அவன் மீது கோபம் வரவில்லையா? உங்கள் மனசு புண்படவில்லையா என்று.

புத்தர் சொன்னார், “அவன் தன்னுடையதை எனக்குத் தந்தான். அதை நான் வாங்கவில்லை. நான் வாங்கினால்தான் அவை எனக்குச் சொந்தம். வாங்காதபடியால் அவை எதுவுமே எனக்குச் சொந்தம் இல்லை. பிறகு ஏன் என் மனம் நோக வேண்டும். கோபம் வர வேண்டும். இப்போ பாருங்கள்.. அவன் தந்தான்.. அவனிடம் இப்போ அவை இல்லை. நான் வாங்கவில்லை.. என்னிடமும் அவை இப்போ இல்லை.. நீங்கள் வாங்கி வைத்துள்ளீர்கள். அமைதி இழந்தீர்கள். அதை என்ன செய்யப் போகின்றீர்கள். யாருக்கும் கொடுத்தாலும் ஆபத்து. நீங்களே வைத்துக் கொண்டாலும் ஆபத்து. அவற்றை நீங்கள் அநாதையாகவே விட்டிருக்கலாம்.”

ஒருவர் எமக்குத் தரும் தீயவைகளை ஏற்றுக்கொள்ளாமல் விட்டால் மனதில் அமைதி நிலவி உலகம் சுபீட்சம் அடையும்.