வாழ்க்கையில் திட்டமிடத் தவறாதே.
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே..
நிறுவனம் ஒன்றில் மனித வள மேலாளாராக இருந்து, தொழில்பயிற்சி நிலையங்களுக்கும், தொழில்வாய்ப்பு நிறுவனங்களுக்கும் உரிமையாளரான நண்பர் ஒருவர் சொன்னது, மேலே உள்ளது.
இதையே எங்கள் மூதாதையர் பழமொழியாம் “அரங்கில் ஆடி அம்பலத்தில் ஆடு” இயம்பி நிற்கிறது. இதைச் சிலர் “ஒத்திகை பார்த்தல் அவசியம்” எனும் பொருள்படச் சொல்வார்கள். அதை விட “திட்டமிடல்” அவசியம் என்ற பொருளே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
திட்டமிட்டு வாழ் என்று சொன்னவர்கள் “திட்டமிட்டபடி நடக்காவிட்டால் என்ன செய்வது” என்றும் சொல்லி உள்ளார்கள். “திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், பதறாமல், நிதானமாக இரு. காரியம் சிதறாமல் இருக்கும்” என்று “பதறாத காரியம் சிதறாது” என்ற பழமொழியில் கூறியுள்ளனர்.
இதுபோல பல மொழிகளை முன்னவர்கள் எங்களுக்குத் தந்துள்ளார்கள். அவற்றின் உட்பொருள் உணர்ந்து நடந்தால் இனிக்கும்.