கவிதை பிறந்த நேரம்

165

நெடுநாட்களின் பின்
காகிதத்தை விரித்து
கவிதையெழுத
ஆயத்தமாகின்றேன்.

உலகை வாசித்து
இதயச்சுவரில் வரைந்து வைத்த
ஓவியங்களை கரைத்தாயிற்று.
பேனாவிலும் நிரப்பியாயிற்று.

காகிதத்தில் வழியவிட முனைய
திரண்டு வந்து
முட்டுக்கட்டை போடுகின்றன
புத்தகப் பரத்தைகளை
புரட்டிப்பார்த்த நேரங்கள்.

சமரும் சமரசமுமாய்
அவைகளை சமாளித்து
விட்டதை தொடர முயல
பின்னால் வந்து
கழுத்தில் தொங்குகின்றன
முன் பிறந்த என் கவிக்குழந்தைகள்.

மீண்டும் மீண்டும்
முயன்றும் முடியாத போதிலும்
கவிஞனென இறுமாற
எனக்காக தலைகுனியும் பேனா
சிந்துகிற துளிகளால்
உயிர்பெறுகிறது காகிதம்.