மீளும் ரசனை.. வயவை லம்போவின் கவிதைகளுடன்

1148

முன்பொரு நேரம் புத்தகங்களுக்குள் புதைந்திருந்தேன். பின்னர் அது இணைய வெளியில் இலத்திரன் இறகு கொண்டு பறப்பதாய் மாறிப்போனது. ஆனால் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக வேகமெடுத்த என் உலகத்தில் நான் காணாமல் போய் விட்டேன். நின்று நிதானிக்க நேரமில்லாவிட்டாலும் பழைய பக்கங்களை புரட்டிப்பார்க்க முடிகிறது இப்போது. கவிதைகள் என்னைச் சூழ்ந்திருந்த காலம் அது. கட்டிலில், சாப்பாட்டு மேசையில், கழிவறையில், பயணத்தில், பணி இடத்தில் என எங்கேயும் என்னோடு கவிதைகள் கதைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தக்காலத்தை மீட்டு வர முடியுமோ தெரியவில்லை. ஆனால் கொஞ்சமேனும் மீண்டு வர முயல்கிறேன்.

அதற்காக நான் பெரிய கவிஞன் அல்ல. நல்லதொரு ரசிகன். என் மீளும் ரசனையை மீட்ட நான் முயலும் போது, முதலில் கண்ணில் பட்டது என்னூர்க் கவிஞன் வயவை லம்போவின் கவிதை. அவருடைய சில கவிதைகளும் அவை மீட்டெடுத்த என் ரசனைகளும்..

விழிகளில் இரத்தம் வழிந்தோடி
வழியில் கைகால் தளர்ந்து முடமாகி
வலியுடன் என் வாழ்க்கை கரைந்தோடி
பலியாகும் நிலைக்கு நான் புண்ணாகி
மலிவாக்கி என்னை மண்டியிட வைத்து
இழிவாக்கி இரையின்றி சிறைசெய்து
குழிதன்னில் பசியோடு வதைத்தாலும் -என்
மொழியே உனை உரைக்க மறப்பேனோ?

பண்பட்ட மொழி உனை வாழ்த்துவேன்
கண்கெட்டாலும் தழுவிக் காண்பேன்
புண்பட என் நாவை வெட்டிப் போட்டாலும்
மண்பட்டு என் உடலம் உக்கிப் போனாலும்
விண்தொட்ட உன் புகழைப் பாடுவேன்
உண்டெனிலும் உணவு இல்லையெனிலும்
வண்டாடும் தேன்சுவை உனை உரைக்காது
கொண்டாடுமோ? என்னுயிர் மண் ஆளுமோ?

எம்மொழியே கம்பனவன் காதலியே -என்
அம்மையே முற்சங்கத்தின் சத்தியமே
இம்மையில் கிழப்பருவம் எய்தி – என்
சம்மதமின்றி நோய் நொடி பிடித்தாலும்
நம்முறவை துயரம் வந்து வாட்டினாலும்
அம்பலத்தில் உனை அரங்கேற்றுவேன்
அம்பிகையின் மகளே தமிழே நீ என்வசம்
அம்மா உனை மறவாது என் சுவாசம்

இந்தக் கவியையை படித்து முடித்த கணத்தில் என்னுள் வெட்டிய மின்னல் “பட்டினி கிடந்து பசியால் மெலிந்து”. அந்த உணர்ச்சிக் கவிக்கு இணையாக எழுதபட்ட கவிதையாகக் காண்கிறேன் இதை.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன். தமிழ் எங்கள் உயிருக்கு நிகர் என்றான் இன்னொருவன். தமிழ் எந்தன் உயிருக்கு மேல் என்று இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறார் கவிஞர் லம்போ.

என்னைக் குருடாக்கி, முடமாக்கி தற்கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு இழிவு படுத்தினாலும் தற்கொலை செய்ய மாட்டேன். அதையும் மீறி என்னைச் சிறையில் அடைத்து பட்டினி போட்டு கொல்ல நினைத்தாலும் சாக மாட்டேன். தமிழை உண்டு உயிர்வாழ்வேன்.. ஏனெனில் உன்னை நான் பாட வேண்டும். என்னை நீ ஆள வேண்டும். இவ்வாறு தன் தமிழ்மீதான அப்பழுக்கற்ற காதலை வெளிப்படுத்தும் கவிஞரின் இன்னொரு கவிதை மண்ணை முத்தமிடுகிறது. இனத்தின் வலியைப் பிரதிபலிக்கிறது..

இரண்டாம் பதிப்பு

நந்திக் கடலோரம்
நிகழ்ந்தது உயிர்ச்சேதம்
நீந்திய மீன்களுடன்
தமிழர்களின் பிரேதம்

புகை அப்பிய வானம்
பகை சூழ்ந்த தேசம்
இது என்ன கொடூரம்
திசை எங்கும் மரணம்

போர்பல வென்ற நாடு
பார் இன்று சுடுகாடு
கூர் கொண்ட கத்தியோடு
கூட்டுச் சேர்ந்தது உலகநாடு

மீட்டுச் செல்ல மீதமில்லை
நாய்கள் கூட தப்பவில்லை
கொத்தடிமைகள் ஆனநிலை
கொடியூண்டி ஆண்ட பரம்பரை

ஐ.நா முன்றலில் நின்றோம்
அகிம்சைப் போர் செய்தோம்
உலகச்சட்டம் பக்கம் புரட்டி
சதிகாரப் பக்கமே சரியென்றது

அந்த ஆடிமாதக் கறுப்பு
இன்னும் ஈரமாயிருக்கு
இந்த வைகாசி மாதக் கறுப்பு – தமிழின
அழிப்பின் இரண்டாம் பதிப்பு

அன்பாக அடிப்பது கவிகளுக்குக் கைவந்த கலை.இங்கே அழகியல் பேனாவில் அன்பை நிரப்பி, அதை கண்ணீராய் பதிவு செய்யும் வித்தையை செய்திருக்கிறார் கவிஞர். சொல்ல வேண்டியதை இலாவகமாகச் சுமந்து வந்து, படித்தவர் மனங்களில் இறக்கி விட்டு, சலனமின்றிக் கவிதை சென்று விட, படித்தவர்கள் மனங்களில் சலனப் பாம்புகள் நெளியத் தொடங்கிவிடும். அதன் பின் தூங்கார இரவுகள் துளிர்க்கும். இதை விட வேறென்ன வேண்டும் ஒரு கவிஞனைக் கொண்ட்டாட.