“பகிரப்படாத பக்கங்கள்” குறித்து வைத்தியக் கலாநிதி து. வரதராஜா…

451

கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எம் தமிழ்க்குடி”
என்ற பெருமையோடு மறத்தமிழர்களாக வாழ்ந்த இனம் எம் தமிழினம்.

தாயகத்தின் கனவுகளோடு   தரணி எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சுக்குள்ளும் ‘நீறுபூத்த நெருப்பாக’ எம் ஈழ தேசத்தில் நடந்த கொடிய யுத்தத்தின் வடுக்கள் இன்னும் எரிந்துகொண்டேயிருக்கிறது.

காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்து சென்றாலும் யுத்தம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படட கொடூரங்களை உடலிலும் உள்ளத்திலும் சுமந்தவண்ணம் எம்மினம் இன்றும் தவித்துக்கொண்டிருக்கிறது.

போராடடத்தின் கோர விளைவுகளை நாம் அறிந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு சுதந்திரமான ஒரு விடிவை பெற்றுக்கொடுக்கவென்று தங்களை இரவு பகலாக உருக்கி
போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் உன்னதமான போராடட வீர வரலாறுகளை நாங்கள் அறிந்திருந்தாலும், போராட்டத்திற்கு அப்பால் அவர்களின்  மனிதாபிமான  அறியாமலே எங்கள் வரலாற்றின் பாகங்கள் நகர்ந்து செல்கிறது.

தமிழீழ போராடட வரலாற்றிலே தமிழீழ மருத்துவ பிரிவினர் வழங்கிய மகத்தான சேவைகளும் தியாகங்கள் நிறைந்த அர்பணிப்புக்களும் என்றுமே மறக்கமுடியாதவை.

போர்காலத்திலே எவ்வளவு கடுமையான யுத்தம் நடக்கின்ற போதிலும் தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் காயமடைந்த போராளிகளுக்கு முதலுதவி மற்றும் பாரிய சாத்திரசிகிற்சைகளை கூட மிகவும் சொற்ப வசதிகளுடன் செய்து பல ஆயிரக்கணக்கான போராளிகளை காப்பாற்றியவர்கள் இவர்கள். பல சந்தர்ப்பங்களில் தங்களின் குருதியை கூட வழங்கி பலரின் உயிரை காப்பாற்றிய உத்தமர்கள்.

அதுமட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கத்தின் கொடூரமான மருத்துதடைகளால் வன்னி மண் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கென தங்கள் சேவைகளை வழங்கி வந்தார்கள்.

நான் வாகரை/ மாவிலாறு பகுதியில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய காலத்திலும் முல்லைத்தீவு மாவடட சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய காலத்திலும் இவர்கள் பல பிரதேசங்களில் மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்ததை நான் அறிவேன். எவ்வளவு ஆபத்தான வேலைகளிலும் காயமடைந்த போராளிகளுக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் செய்த அதியுயர் மானுட சேவைக்கு இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே நிகராகாது.

ஆனால் இவர்களது தியாகங்களையும் திறமைகளையும் ஒருசிலர் அறிந்திருந்தாலும் உலகமே அறியும் வகையில் “பகிரப்படாத பக்கங்கள்” நூலின் மூலம் நூலாசிரியர் கவிமகன் களமருத்துவ போராளிகளின் பலர் அறிந்திராத பக்கங்களை கதையும் கதாபாத்திரங்கள் எம்கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்.

நூலாசியர் கவிமகனின் எழுத்து வடிவமும் கதைகளை அவர் கையாண்ட விதமும் மீண்டும் எங்களை போர் தின்ற எம் ஈழதேசம் நோக்கி  அழைத்துச்செல்கிறது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் வரை பல ஆயிரம் மக்களை காப்பாற்றுவதில் இருந்த மருத்துவ போராளிகளின் பங்களிப்புகளை நேரில் பார்த்தவன் என்ற வகையில் அவர்களின் மகத்தான சேவைக்கு மகுடமாக இந்நூல் திகழ்வதையிட்டு பெருமிதம் அடைகிறேன்.

அத்துடன் போர்க்குணத்துடன் மட்டும் வாழ்ந்தவர்கள் இல்லை போராளிகள் என்பதை ” பகிரப்படாத பக்கங்கள்’ ஊடாக கோடிட்டு காட்டியுள்ளார் நூலாசிரியர். இதுவே இந்நூலின் தனிச்சிறப்பு. நூலாசிரியர் கவிமகனின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிப்பதோடு, அவரின் முயற்சியில் மேலும் பல நூல்கள் வெளிவரவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

நன்றி

வைத்தியகலாநிதி. து. வரதராஜா
அமெரிக்கா