பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 7
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்
எழிலி என்கிறார் மேகத்தை. மேகம் என்பது அழகி. மேகம் அழகாய் இருப்பதால் அல்ல. தன்னைச் சார்த்த அனைத்தையும் அழகாக்கிவிடுகிறது அது. அதனால் கருத்த மழைமேகத்தை எழிலி என்கிறார்.
அது தடிந்து அதாவது கடினமான மனம் கொண்டு கொடுக்கும் தன்மையில்லாத்தாக ஆகி விட்டால், மிகப்பெரிய கடலும் தன்னுடைய நீர்மைத்தன்மையை இழந்து விடுமாம்.
நீரை இழந்து விடும் எனச் சொல்லாமல் நீர்மைத்தன்மை எனச் சொல்லியதைக் கவனிக்க வேண்டும்.
வள்ளுவர் பல விசயங்களை ஒரு வார்த்தையில் அடக்குவதில் வல்லவர். கடல் நீரை இழந்துவிடும் என்பது வேறு. நீர்த்தன்மையை இழந்துவிடும் என்பது வேறு.
கடல் நீர் ஆவியாக மாறி பிற பொருள்களுடன் வினை புரிந்து ஆக்சைடுகளாக படிந்து விடலாம். கடல் நீர் நிலத்தில் முற்றிலும் இறங்கி சகதியாக இறுகிவிடலாம். நிலாவில் நீர் இருக்கிறது. செவ்வாயில் நீர் இருக்கிறது என நாசா இன்று சொன்னாலும் அவற்றின் நிலைமை, அவை நீர்மைத் தன்மையுடன் இல்லை என்பதே உண்மை. அதனாலேயே அங்கே உயிரின்ங்கள் இல்லை.
நீரின் பண்புகளை இழந்த நீராகிவிடும் கடல் நீர்.
இதையே மனித வாழ்க்கையிலும் காணலாம். மனிதர்கள் பிறக்கிறார்கள் வாழ்கிறார்கள் இறக்கிறார்கள். காலம் செல்லச் செல்ல மனிதர்கள் தங்கள் சுய நலம் பெருகி, தம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் கொடுமை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அப்பொழுது மகான்கள் பிறந்து மனிதர்களின் மனதை சுத்தமாக்கி மனித்த் தன்மையை மீட்டெடுக்கிறார்கள்.
மனிதத் தன்மையை மனிதர்கள் இழந்துவிடாமலிருக்க தோன்றும் மகான்கள் போல், வையத்து நீரெல்லாம் நீர்த்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றால் மழை என்னும் மகான் காலம் தவறாமல் பிறத்தல் மிக முக்கியமானது.