நல்லவனாக இருக்க

389

பொதுவாகவே நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை நாம் ஐந்து வகைகளாக பிரிச்சுக்கறோம்.

1. நம்ம அன்பு, பாசம் இவற்றிற்கு உரியவர்கள் (நம்ம குழந்தைகள், நண்பர்கள் உறவினர்கள் (??)

இவங்களுக்கு நாம் நம் உளமார நன்மைகளைச் செய்கிறோம். நாம் இவங்களுக்காக இன்னது செய்யறோம் என்று அவர்கள் உணர்கிறார்களா என நாம் கவலைப் படுவது இல்லை. அவங்களுக்கு நல்லது செய்வது நம்ம கடமைன்னு நினைக்கிறோம். எந்த செயல் செய்யும் பொழுதும் இவங்களுக்கு நன்மை வரணும்னு ஒரு ரகசிய திட்டம் மனசில இருந்துகிட்டே இருக்கும்.

நம்மை முதல் வகை மக்கள் அண்ணா, தம்பி என உறவு முறை கொண்டாடிக் அழைக்கிறார்கள்.

2. நம் வாழ்க்கையில் பங்கு கொள்பவர்கள் (தூரத்து உறவினர்கள், தெரிந்தவர்கள், உடன் வேலை செய்பவர்கள்)

இவங்களுக்கு நாம அவர்கள் தெரிந்துகொள்ளுமாறு நன்மைகள் செய்யறோம். இவர்கள் நம்மளை நல்லவங்க அப்படின்னு நினைக்கணும்னு எப்பவுமே ஆசைப்படறோம். அதுக்காக நாங்க நல்லது பண்றோம் என்று அவர்கள் முன்னால் காட்டிக் கொள்கிறோம். இவங்களுக்கு நாம கெடுதல் செய்வதில்லை. அவங்க கண்டுக்காட்டி நாம கண்டுக்க மாட்டோம் அவ்வளவுதான். அவங்க எதிரில் அவங்களைப் பற்றிச் சிந்திப்போம். இவர்களுக்கு சின்ன பாதிப்பு ஏற்படும் செயல்களை இவர்கள் அருகில் இல்லாதப்ப செய்யத் துணிஞ்சாலும், பெரிய பாதிப்பு வரும் செயல்களைச் செய்ய மாட்டோம்.

நம்மை 2 வது வகை மக்கள் பொதுவாக நல்லவர் என்று சொல்கிறார்கள்

3. நமக்குச் சம்பந்தமே இல்லாதவர்கள்

இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நம்ம மனசு கவலைப் படறதில்லை. நாம எது நல்லதுன்னு நினைக்கிறோம் எது கெட்டதுன்னு நினைக்கிறோம் என்பதை உடைத்துச் சொல்ல தயாரா இருக்கோம். இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும்போது, ஒரு சாதாரண மனிதனாகத்தான் செயல்படுகிறோம். ஓவரா நடிப்பதில்லை. அவர்கள் மீது நமக்கு உண்டாகும் அபிப்பிராயம் அவர்களை இரண்டாவது வகையினராகவோ, நான்காவது வகையினராகவோ நமது மனதில் மாற்றிவிடுகிறது.

4. நாம் உள்ளூர வெறுப்பவர்கள் ( இவர்கள் இரண்டாம் வகையினரில் நமக்குப் பிடிக்காதவர்கள் )

இவங்களுக்கு கெட்டது நடக்கணும்னு இதயம் நினைக்கும். ஆனா, நான் நல்லவனாக்கும் என்கிற மாதிரி நடிக்கும். கெடுதலை என்னமோ நல்லது செய்யற மாதிரி வேசம் போட்டுகிட்டுச் செய்யும்.

நம்மை 4 வது வகை மக்கள் உணரும் வரை நல்லவர் என்றும், உணர்ந்த பின் நயவஞ்சகன், துரோகி என்றும் சொல்கிறார்கள்.

5. எதிரிகள்

அடிப்பேன், உதைப்பேன் என இவர்களுக்கு கெடுதல் நடப்பதை ரசிப்போம். வெளிப்படையாகவே கெடுதல் செய்வோம். சவால் விடுவோம். இவர்களின் தோல்விகளைக் கொண்டாடுவோம். வெற்றிகளைக் கண்டு பொறாமை, வயிற்றெரிச்சல் படுவோம்.

நம்மை 5 வது வகை மக்கள் கெட்டவர் என்று உடனே சொல்லி விடுகிறார்கள்..

இவை ஐந்துமே நம்ம மனசோட இயல்புகள்தான்.

நம் மனதிற்கு எப்படிப் பட்ட உறவு கொண்டவர்கள் அதிகமாக இருக்காங்களோ, அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம இயல்பு இருக்கு. இவர்கள் எல்லோரையுமே சமமாக பாவிக்க முடியவே முடியாது.

இதைப் புரிஞ்சிகிட்டவங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. புரியாதவர்கள்தான், அவனை நல்லவன்னு நினைச்சேன் எல்லாம் நாடகம் என்று சொல்லுவாங்க.. ஏனென்றால் அவர்களின் இடம் அவங்களுக்குச் சரியா தெரியலை.

ஏறக்குறைய எல்லோருக்குமே இது இயல்பாக இருப்பதால், இதை தவறாக நினைக்க வேண்டாம்..

மற்றவர்கள் நம்மை 4 வது அல்லது 5 வது பட்டியலில் வைத்திருந்தாலும் அவரை நாம் 3 வது பட்டியலில் வைப்பது நல்லது.

ஆகவே நம்மனம், 4 வது மற்றும் 5 வது பட்டியலை முடிந்த வரை வெறுமையாக வைத்துக் கொள்வதும், அந்தப் பட்டியலில் இருப்போரை 3 வது பட்டியலில் சேர்ப்பதும், நல்லவனாக இருக்க உண்மையாக முயற்சித்தல் ஆகும்.