குறும்புக்காரக் குரங்கு – 2

535

விவசாயி அன்றிரவு நிறைய பிளேடுகளை எடுத்துகிட்டு தோட்டத்துக்குப் போயி, முத்தின வெள்ளரிக்காயில எல்லாம் பிளேடுகளை சொறுகி வச்சிட்டான்.

அடுத்த நாள் மறுபடி குரங்கு வந்திச்சாம். அன்றும் வெள்ளரிப் பிஞ்சுகளை எல்லாம் தின்னுட்டு ஆய்போயிட்டு முத்தின காய்களில் போய் துடைக்க..

வாலு வெட்டுபட்டு போச்சாம்.

குரங்கு காய் மூய்ன்னு கத்திகிட்டு ஓடிச்சாம் ஒடிச்சாம் மலைக்கே ஓடிச்சாம்..

என்ன செய்யறதுன்னே தெரியலை. பின்னால ரத்தம் வருவதே நிக்கலை..

அங்க மலைமேல போய் ஒரு பாறைமேல காயத்தை அழுகி ஒக்காந்துகிச்சாம்.

கொஞ்சம் கொஞ்சமா இரத்தம் வழியறது நின்னது… வெயில் ஏற ஏற இரத்தம் காஞ்சு பாறையோட ஒட்டிகிச்சாம். சுடுதேன்னு குரங்கு எழுந்திருக்கப் பார்க்க எழுந்திருக்க முடியாம குரங்கோட பின்பக்கம் பாறையோட ஒட்டிகிச்சாம்.

குரங்கால சூடும் தாங்க முடியல.. வலியும் தாங்க முடியலை.. அழுதழுது கண்ணீர் கூட வத்திப்போச்சி..

கடைசில குரங்கு என்ன பண்ணிச்சு தெரியுமா?

திக்கத்தவங்களுக்கு தெய்வமே துணை அப்படின்னு சொல்லுவாங்க.. நம்ம குரங்கும் கடைசியா நாம தெய்வத்தை வேண்டறதைத் தவிர வேற வழியில்லை அப்படின்னு நினைச்சு, மாரியம்மனை பிரார்த்தனை பண்ண ஆரம்பிச்சது. இராமா என்னை இந்தக் கொடுமையில் இருந்து காப்பாத்து உனக்கு பொங்கல் வச்சி பூசை பண்ணறேன் அப்படின்னு…

குரங்கோட பிரார்த்தனையில கடவுள் மனசிரங்கானாரோ என்னமோ, வானம் இருட்டிகிட்டு வந்து “ஜோ”ன்னு மழை பெஞ்சது. பாறையோட சூடு தணிஞ்சு, காய்ந்த ரத்தம் கரைய குரங்கு பாறையில் இருந்து விடுபட்டது..

மறுபடி குரங்கு வெள்ளரித் தோட்டத்துக்கு வரவே இல்லைன்னாலும் மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கணுமே.. எப்படி செய்யறது என்ன செய்யறதுன்னே தெரியலை.

அதனால அந்தக் குரங்கு அந்த ஊரு மாரியாத்தா கோயிலுக்கு போச்சு. அங்கயோ சுத்திச் சுத்தி வர ஆரம்பிச்சது..

எப்பயாவது யாராவது பொங்கல் வைக்க வந்தா என்னென்ன செய்யறாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சுச்சி..

தேங்கா, பழம், வெத்திலை, பாக்கு எல்லாம் ஓக்கே, அரிசி, வெல்லம், முந்திரி திராட்சை, பாத்திரம் இதுக்கெல்லாம் எங்க போறது?

பழைய மாதிரி இருந்தா குரங்கு மளிகைக் கடையில பூந்து எல்லாத்தையும் அள்ளிகிட்டு வந்திருக்கும். இப்போதான் திருந்தி நல்ல குரங்கு ஆயிடுச்சே. அதனால் இதையெல்லாம் வாங்க காசு சம்பாதிக்கணும் அப்படின்னு அது யோசிச்சது..

அப்போ அந்த ஊருக்கு ஒரு வித்தைக்காரன் தன்னோட குரங்கோட வந்து வித்தைக் காட்டினான். எல்லாக் குழந்தைகளும் வித்தைகளைப் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர். காசு கொடுத்தனர்.

சுட்டிக்குரங்கும் சரி இதுதான் வழி அப்படின்னு நினைச்சு மாரியம்மன் கோவில் முன்னால கூட்டம் இருக்கும் இடத்தில் போய் வித்தை காட்ட ஆரம்பிச்சது. ஆனால் பாவம் எல்லோரும் பழம், தேங்கா, சாப்பாடு இப்படிக் குடுத்தாங்களே தவிர யாரும் காசே கொடுக்கலை. குரங்குக்கு காசு தேவைப்படும் அப்படின்னு யார்தான் யோசிப்பாங்க.?

குரங்கும் அடுத்தது என்ன செய்யலாம் அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சது..

தொடரும்