நாளொரு குறள் – 39

நாள் : 39
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :9

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறம் செய்வதால் வருவதே இன்பம் ஆகும்.

அறம் அறிந்து அதனால் இன்பம் என்பது என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறம் அறியாதவர்கள்.. பலவற்றை இன்பம் என்று கருதிக் கொள்கிறார்கள். இலட்டுச் சுவை, மல்லிகை வாசம் இன்பம் பெண்ணின் மென்னுடல் தீண்டல், இனிய கானம், அழகிய காட்சிகள் இவை எல்லாம் இன்பம் என்று கருதுகிறோம். புறப் புலன்கள் கொடுக்கும் இந்த இன்பங்கள் நமக்கு வெளியே உள்ளவே. அவை இன்பங்கள் அல்ல. காரணங்கக் உண்டு.

இவை திகட்டி விடும்.. அலுத்து விடும்… சலிப்பைத் தரும்…

உண்மையான இன்பம் உள்ளிருந்தே தோன்றும் ஆறாம் புலனாகிய மனதிலிருந்து உண்டாகும் இன்பமே நிலைத்திருக்கும். சலிக்காது. அதௌ உண்டாக வேண்டும் என்றால் அறம் செய்து அறம் செய்து மனதை தூய்மையாய், இலேசாய் வைத்துக் கொள்ள வேண்டும்.

புற இன்பங்கள் புகழற்றவை. அவை தேன்சுவைப்பதால் ஒருவனுக்கு புகழுண்டாகாது. பொறாமை, ஏக்கம் இன்னபிற உணர்வுகள் பிறர் மனதில் உண்டாகலாம். ஆனால் அறம் மட்டுமே நிலைத்த புகழைத் தரும் இன்பத்தைத் தரவல்லது.

அறம் பயிலாமல் அந்த இன்பம் புரியாது. அப்போது ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தரின் மொழி உண்மையாகும். புற இன்பங்களுக்கான ஆசைகள் அனைத்து துன்பங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.