சிரிப்பே சீவியம்

 

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை உறுதியாக நின்று மானுடவலிகளை வென்றமைக்கு (Conquer the human pain) வெகுமதியாக Dr.சத்தியமூர்த்தி,Dr.வரதராஜா, Dr.சிவபாலன்,Dr.சண்முகராஜா ஆகியோர் போருக்குப் பின்னர் தென்னிலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் வீரமும் தியாகமும் விசாரணைக்கு உட்பட்டிருந்த அந்த இக்கட்டான பொழுதில் Dr.சிவபாலன் அவர்கள் எமது சிறை அறையிலேயே வாடினார்.

இலட்சிய வாழ்வின் உச்சமான பல பணிகளை செய்த “பாலன்டொக்ரர்” என அழைப்படும் Dr.சிவபலான் தனது அரச உத்தியோகத்தையும் முற்றுமுழுதாகவே தூக்கி எறிந்தவர்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் இழப்பை தோல்வியை சீ(ஜீ)ரணிக்கவோ கவலைகளை தணிக்கவோ முடியாமல் அவரும் சொல்லொண துயரத்திலேயே கம்பிகளுக்கு பின்னால் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த பல கைதிகளின் முகம்களை பார்த்த போது பதறிப்போய் தன்னாலான பரிகாரங்களை தேட வேண்டும் என்பதை உய்த்துணர்ந்தார்.

எங்களை சிரிக்க வைப்பதன் மூலம் ஆற்றுப்படுத்த திருவுளம் கொண்டார்.

அவர் தனது சின்னஞ் சிறிய பருவத்தில் அரிவரி படித்த ஆரம்பப்பாடசாலைக் காலத்து விகடங்கள், பகிடிகளை சொல்லத் தொடங்கி பல்கலைக்கழக காலத்து மெடிக்கோஷ் நைற்றில்(Medicos Nite) நடந்து பகிடிகள் சொன்னார்.

நடைப்பிணமாய் சிறையில் வாழ்ந்த எமை சிரிக்க வைத்து இளையோர் எமக்கு புத்துணர்வு அளித்து புத்துயிர் அளித்தார்.

ஒரு கட்டத்தில் அவரது நினைவுப் பெட்டகத்திலும் நெஞ்சத்திலும் தேக்கி வைக்கப்பட்ட பகிடிகள் தீர்ந்துவிட எங்களை அர்த்தம் நிறைந்த தனது புன்னகையை தவழவிட்டபடி அந்த பொறுப்பினை எங்களிடம் ஒப்படைத்தார்.

முதலாவதாக கவிஞர் தூயவன் தனது பகிடிகளை கவிதை வடிவிலேயே சொன்னார்.

“சொல்கவிதை”வடிவில் கவிஞரின் பகிடிகள் அனைத்தும் இருந்தன.

இரண்டாவதாக இடம்பிடித்த நண்பர் வாமனின் பகிடிகளில் நவரசம் ததும்பும்!

நண்பர் அமுதனின் பகிடிகள் கடுகளவாய் அமைந்தாலும் அதிகம் சிந்திக்க வைக்கும்!

பகிடி சொல்லும் பொறுப்பு ஈற்றில் அடியேனிடம் வந்த போது யான் தொடர்ந்தேன்.

சின்னஞ் சிறிய எனது மொக்கைப் பகிடிகளுக்கும் எல்லோரும் வயிறு குலுங்கச் (Deep Belly Laughter) சிரித்த போது யான் ஒரு புதுமனிதனாக மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தேன்.

அந்த நேரம்தான் ஒரு ஆழமான பார்வையை அர்த்தப் புன்னகை என் மீது வீசியபடி டொக்ரர் சிவபாலன் பார்த்தார்.

தனது பெற்றோர் காலத்துப் பகிடிகளை எல்லாம் யார் உங்களுக்கு சொன்னதெனக் கேட்டார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் அந்த பகிடிகளை எனது அம்மா சொன்னார் என்றேன்.

Yes! My Mum also had high sense of humour! ❤️