ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர்.
ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும்.
எம் வேட்கையை எம்மவரிடம் தக்க வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும்.
இவரின் முழுமையான பெயர் H.M.சமன் புஷ்பகுமார ஆகும்! பதவி நிலை லான்ஷ் கோப்ரல் ஆகும். போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட இடம் கிளிநொச்சி முரசுமோட்டை ஆகும்!
மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை எல்லாச் சமூகத்தினருக்கும் எடுத்தியம்ப வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
அதைச் செய்ய வேண்டியதுதான் எமது வேலையுமாகும். அந்த வகையில் மாந்த நேசத்தை வெளிப்படுத்திய எண்ணிலடங்கா நிகழ்வுகளில் ஒன்றை உங்களுடன் பகிர்கின்றோம்.
இதனை வெறுமனே வாசித்து விட்டகலாது, வேற்று மொழிகளில் பெயர்த்து பலருடன் பகிர்வதும், இது போன்ற வெளிப்படுத்தப்பட வேண்டிய அம்சங்களை வெளிப்படுத்துவதும் நாம் ஆற்ற வேண்டிய கடமையாகும்.
“வடபோர்முனை” என அழைக்கப்பட்ட
களமுனையில் ஶ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இவர் படுகாயடைந்தார்.
2009ஆம் ஆண்டு தைத் திங்கள் நடைபெற்ற மிக உக்கிரமான சமரில்
தமிழர்சேனையால் செங்களத்திடை மீட்கப்பட்டார்.
படோரியாய் வந்தது எதிரிதான் என்றாலும் பரோபகாரியாய் மாறுவது தமிழனின் குணம். தமிழனின் மரபணுவில் இது எழுதப்பட்டே உள்ளது.
ஆம்!
களமுனையில் கடமையில் இருந்த தமிழர் சேனையின் இராணுவ வைத்தியர்களால் துரித சிகிச்சை வழங்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இடம்பெயர்ந்து தருமபுரத்தில் இயங்கிய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையிலும் அன்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழர் மனங்களில் நிரந்தர இடம்பிடித்து நிற்கும் Dr.த.சத்தியமூர்த்தி அவர்களின் மானுடநேயமும் இவரின் விடுதலைக்கு காத்திரமான பங்காய் அமைந்தது.
மிக நல்ல முறையில் பராமரிப்பும் வழங்கப்பட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக மேலதிக சிகிச்சைக்காக
பத்திரமாக அனுப்பட்டார்.
யுத்தக் கைதிகளை எவ்வாறு
பராமரிக்கப்பட வேண்டுமென அண்டைய இரு நாடுகள் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் என் நினைவில் மலர்ந்தவை.
“எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு” ….
என கவிஞர் காசியானந்தன் எழுதி எம்மரும் பாடகர் மானமிகு தேனிசை செல்லப்பா பாடிய பாடல் வரிகளும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.