சிறியோர் சொற் கேட்பதுவும் நன்றே.

466

ஒரு குடியானவன் வயலில் விதைத்த விதைகளை பறவைகள் தின்று வந்தன. அவன் விதைத்து விட்டு மறுநாள் வந்து பார்த்தால் ஒரு விதை கூட இராது. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

வயலின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் விதையை விதைத்து விட்டு  அதன் மேல் வலையை விரித்தான். நாளைக்கு எப்படியும் விதைகளைத் தின்னும் பறவைகளைப் பிடித்துக் கொன்று விடலாம் என்று எண்ணினான்.

குடியானவன் போன சற்று நேரத்தில் பறவைகள் வந்தன. விதைகளைத் தேடின. ஒரு இடத்தில் நிறைய விதைகள் இருப்பதைக் கண்டன. மகிழ்ந்தன. அப்போது ஒரு சிறு பறவை “வழக்கமாக எல்லா இடத்திலும் இருக்கும் விதைகள் இன்று ஒரு இடத்தில் மட்டும் இருக்கிறது. இதற்குப் பின்னால் ஏதோ ஆபத்து உள்ளது” என்றது.

அதைக் கேட்டதும் மற்றப் பறவைகள் எல்லாம் ஏளனமாகச் சிரித்தன. “நீ சின்னவன்; எங்களை விட அனுபவம் குறைந்தவன்; நீ சொல்லுவது போல ஒருக்காலும் இருக்காது” என்றன.

சின்னப் பறவை எவ்வளவோ தடுத்தும் காதில் போடாமல் விதைகளை தின்ன நிலத்துக்கு வயலில் இறங்கின. குடியானவன் விரித்த வலையில் சிக்கின.

இவற்றை எல்லாம் ஒளிந்திருந்து கண்ட குடியானவன் பறவைகளைப் பிடித்துக் கொல்ல வந்தான். பறவைகள் பதட்டத்துடன்  எவ்வளவு முயன்றும் வலையை அறுக்க முடியவில்லை. அப்போது சின்னப் பறவை எல்லாரும் ஒன்றாகப் பறக்க முயலுங்கள் என்றது.

இம்முறை மற்றப் பறவைகள் சின்னப் பறவை சொன்னதைக் கேட்டன. ஒன்றாகப் பறந்தன. பாரமான வலையுடன் பறந்து தப்பித்தன.