நாள் : 57
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் : 7
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பெண்ணியம் பற்றி என்னவோ போன நூற்றாண்டில் பேச ஆரம்பித்ததாக தமிழினத்தை புரிந்து கொள்ளாத, தாழ்த்த எண்ணிய பிறர் பேச்சை நம்பாதீர்கள். முப்பாட்டன் வள்ளுவன் சொல்வதைக் கவனியுங்கள்.
போன செய்யுளில் பெண் என்றால் யார் என்று சொன்ன வள்ளுவன்… இப்பொழுது பெண்களின் பெருமையை இன்னும் சொல்கிறார்..
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்… பாரதி போன நூற்றாண்டில் சொன்னது.
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கேட்டு விட்டார். பெண்களை பாதுகாக்கிறோம் பாதுகாக்கிறோம் என வீட்டில் சிறை வைத்து பூட்டாதீர்கள். அது காக்கும் வழியல்ல. அதனால் பெண்களை காக்க முடியாது போகும்.
மகளிர் நிறை காக்கும் காப்பே தலை.
பெண்களின் புகழை, அவர்களில் நிறைந்த அறிவை, திறமையை ஆகியவற்றை வளர்த்துக் காப்பதே சிறந்தது.
பெண்களை பூட்டி வைக்காதீர்கள், அது அவர்களுக்கு பாதுகாப்பானது அல்ல.
அவர்கள் வாழ்வில் அறிவில், திறமையில், வலிமையில் நிறைவை எட்டி, அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சுய பாதுகாப்புதான் சிறந்த பாதுகாப்பு.
பெண்களை ஆண்கள் காத்தார்கள், காக்கிறார்கள், காப்பார்கள் என்ற கூற்றின் மேல் ஒரு சம்மட்டியால் அடிக்கிறார் வள்ளுவர்.
முழுமை பெற்ற ஒரு பெண்ணே அனைத்தையும் காக்கிறாள் என்பதையும் சூசகமாகச் சொல்கிறார்.
தமிழன் அன்றே சிறந்த சமத்துவ சமுதாயம் கொண்டவனாக விளங்கும் கொள்கைகள் கொண்டவன் என்பதற்கு இன்னுமா அத்தாட்சி தேவை?