கதை கேளு பாப்பா – செய்வன செவ்வனே செய்

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தார்கள். இருவரும் பலசாலிகள்; புத்திசாலிகள். ஒரு முறை தங்களில் யார் புத்திசாலி என்று இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. விடயம் முனிவரிடம் கொண்டு வரப்பட்டது. முனிவர் இருவரிடமும் ”சீடர்களே..! எனக்குப் பசியாக உள்ளது. அதோ அந்த மரத்தில் இருக்கும் கனிகளைப் பறித்து வாருங்கள” என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்தச் சீடர்கள், மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்குவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மரத்தைச் சுற்றி முட்செடிகளும் பதர்களும் இருந்தன. சீடர்களில் ஒருவன் பின்னால் சிறிது நகர்ந்து, ஓடி வந்து எத்திப் பாய்த்தான். முட்செடிகளைக் கடந்து மரத்தினை அடைந்தான். பழங்களைப் பறித்து எத்திப் பாய்ந்து, முட்செடிகளைக் கடந்து குருவிடம் பழங்களைக் கொடுத்தான்.

மற்றச் சீடனோ கத்தி ஒன்றைக் கொண்டு முட்செடிகளை வெட்டி அகற்றி மரத்தை அடைவதற்கான பாதை அமைத்தான். அவன் பாதை அமைத்ததும் அவ்வழியால் வந்த வழிப்போக்கர்களும் அவனோடு சேர்ந்து மரத்தை அடைந்தார்கள். கனிகளைப் பறித்து உண்டு பசியாறி மகிழ்ந்தனர். சீடனும் கனிகளைப் பறித்துக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தான்.

உடனே குரு “கடைசியாகப் பழங்களைக் கொண்டு வந்து தந்தவனே அதிபுத்திசாலி” என்றார். அதற்கு முதலாமவன் “எப்படிக் குருவே? இன்னும் போட்டியே வைக்கவில்லையே!” என்றான். உடனே குரு “பழம் பறித்தல்தான் போட்டி..” என்றார்.

முதலாமவன் குழப்பத்துடன் “அப்படி என்றால் நான் தானே தங்களுக்குக் கனிகளை முதலில் தந்தேன். அப்போ நான் தானே புத்திசாலி” என்றான். அதற்கு குரு “ தாவிக் குதித்து, விரைவாக ஓடி, பழங்களைப் பறித்துக் கொண்டு வந்து முதலாவதாக நீ தந்தாய். அதனால் நான் மட்டுமே பயன் அடைந்தேன். ஆனான் அவனோ மரத்தை அடையப் பாதை அமைத்தான். பலரும் பயனடைந்தனர். எவன் ஒருவன் பலர் பயனடையும்படியான செயலைச் செய்கிறானோ அவனே அதி புத்திசாலி” என்றார். 

செயல் ஒன்றுதான்.. செய்யும் விதமும் அடையும் பயனுமே வேறுபடுகிறது. எனவே செய்யும் விதத்தில் தூர நோக்கும் அடையும் பயனில் அதிக அக்கறையும் கொள்வோம்.