தமிழில் சந்தி இலக்கணம் – 04

1341

4.2. நிலைமொழியின் ஈற்றில் உயிரும் வருமொழி முதலில் மெய்யும்(அதாவது உயிர்மெய்யும்) வருதல். [உயிர் முன் மெய் புணர்தல், அதாவது உயிர் + மெய்]

4.2.1. நிலைமொழியின் ஈற்றில் அ

1. அ, இ எனும் சுட்டெழுத்துக்களின் பின்னும் எ என்னும் வினா எழுத்தின் பின்னும் அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயரடைகளின் பின்னும், எந்த என்னும் வினாப்பெயரடையின் பின்னும், வல்லினம் (ஒற்று) மிகும்.

எடுத்துக்காட்டு:
அ + காடு = அக்காடு
இ + சோதனை = இச்சோதனை
எ + தோட்டம் = எத்தோட்டம்?
அந்த + பெயர் = அந்தப்பெயர்
இந்த + திருடன்= இந்தத்திருடன்
எந்த + பாடம் = எந்தப்பாடம்?

2. போக, வர, படிக்க(செய) என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.
எ – டு
போக + கண்டேன் = போகக் கண்டேன்
வர + சொல் = வரச்சொல்
படிக்க + படிக்க = படிக்கப் படிக்க

3. நல்ல, இன்ன, இன்றைய போன்ற பெயரடைகளின் பின்னும் படித்த, எழுதாத போன்ற பெயரெச்சங்களின் பின்னும் வல்லினம் மிகாது.
எ – டு:
நல்ல + கதை = நல்ல கதை
இன்ன + பெயர் = இன்ன பெயர்
இன்றைய + தமிழ் = இன்றைய தமிழ்
படித்த + புத்தகம் = படித்த புத்தகம்
எழுதாத + கவிதை = எழுதாத கவிதை

4.2.2. நிலைமொழியின் ஈற்றில் ஆ

1. சில தொகைச் சொற்களில் வல்லின ஒற்று மிகும் (தொகைச் சொற்கள் பற்றி இங்கு விளக்கப்படவில்லை)
எ-டு:
பலா + கொட்டை = பலாக் கொட்டை
பாப்பா + பாட்டு = பாப்பாப் பாட்டு
திருவிழா + கூட்டம் = திருவிழாக் கூட்டம்
ஊதா + பூ = ஊதாப் பூ

2. சில பெயர்-வினை கூட்டுச் சொற்களில் வல்லின ஒற்று மிகும். -கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது சில இடங்களில் ஒற்று மிகும்; சில இடங்களில் மிகாது.

எ-டு:
கனா + கண்டு = கனாக் கண்டு
விலா + புடைக்க = விலாப் புடைக்க
புறா + கள் = புறாக்கள்
வெண்பா + கள் = வெண்பாக்கள்
ஆனால் வீடு + கள் = வீடுகள் என்றே வரும்.

காடுகள், புலவர்கள், பெட்டிகள், பெண்கள், பாடல்கள் ஆகியவற்றிலும் ஒற்று
மிகுவதில்லை.

4.2.3. நிலைமொழி ஈற்றில் இ
1. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையிலும்,
பெயர்ச்சொல் அடை போன்றவற்றின் பின்னும் வல்லின ஒற்று மிகும்.
எ-டு :
துணியை விற்கும் கடை என்னும் பொருளில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாக துணி + கடை = துணிக்கடை என வரும்.
வண்டி + காளை = வண்டிக்காளை
எலி + பொறி = எலிப்பொறி
குட்டி + பையன் = குட்டிப் பையன் (குட்டி என்பது பெயரடை)

2. வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
எ-டு:
தேடி + சென்றான் = தேடிச் சென்றான்
ஆடி + களித்தான் = ஆடிக் களித்தான்
ஓடி + களைத்தான் = ஓடிக் களைத்தான்
நாடி + போனான் = நாடிப் போனான்

3. உம்மைத் தொகையில், முதற் சொல் வினையடியாக இருக்கையில் (வினைத்தொகையில்), -கள் பன்மை விகுதி சேர்கையில் வல்லின ஒற்று மிகாது.
எ-டு:
செடி + கொடி = செடி கொடி (செடியும் கொடியும் எனும் சொற்களில் உம்
விகுதி தொக்கி/ மறைந்து வருவது உம்மைத் தொகை).
பொரி + கடலை = பொரி கடலை
வெடி + குண்டு = வெடி குண்டு
குடி + தண்ணீர் = குடி தண்ணீர்
செடி + கள் = செடிகள்
கல்லூரி + கள் = கல்லூரிகள்

4.2.4. நிலைமொழி ஈற்றில் ஈ
1. ஈ, தீ, போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பின்னும் -கள் என்னும் பன்மை விகுதியிலும் வல்லின ஒற்று மிகும்.
எ – டு:
ஈ + கடி = ஈக்கடி
தீ + சுடர் = தீச்சுடர்
தீ + பிடித்தது = தீப்பிடித்தது
ஈ + கள் = ஈக்கள்

4.2.5. நிலைமொழி ஈற்றில் உ
1. கு, சு, டு, ணு, பு, து, று, ரு, ழு, வு கிய எழுத்துக்களில் முடியும் பெயர்ச் சொற்களின் பின்னர் வல்லின ஒற்று மிகும்.
எ-டு
தேக்கு + கட்டை = தேக்குக் கட்டை
பஞ்சு + பொதி = பஞ்சுப் பொதி
துண்டு + தாள் = துண்டுத் தாள்
அணு + திரள் = அணுத் திரள்
மருந்து + பை = மருந்துப் பை
வம்பு + சண்டை = வம்புச் சண்டை
மாற்று + தொழில் = மாற்றுத் தொழில்
தெரு + சண்டை = தெருச் சண்டை
முழு + பொறுப்பு = முழுப் பொறுப்பு
நெசவு + தொழில் = நெசவுத் தொழில்

2. டு, று என்பதில் முடியும் பெயர்ச்சொற்களின் இறுதி இரட்டித்து வல்லின ஒற்று மிகும். -ட்டு, -த்து, -ற்று என முடியும் வினையெச்சங்களின் பின்னும் வல்லினம் மிகும்.
எ – டு :
ஆடு + தலை = ஆட்டுத் தலை
சோறு + பானை = சோற்றுப் பானை
கேட்டு + சொல் = கேட்டுச் சொல்
விற்று + கொடு = விற்றுக் கொடு
செத்து + பிழைத்தான் = செத்துப் பிழைத்தான்

3. கூட்டுச் சொற்களில் முதல் சொல் வினையடியாக இருந்தால் (வினைத் தொகையில்)வல்லின ஒற்று மிகாது.
எ – டு :
சுடு + சோறு = சுடு சோறு
ஆடு + களம் = ஆடு களம்
தேடு + பொறி = தேடு பொறி

4. -ண்டு, -ந்து, -ய்து, -ன்று என முடியும் வினையெச்சங்களின் பின் வல்லின ஒற்று மிகாது.
எ – டு:
கண்டு + திகைத்தான் = கண்டு திகைத்தான்
செய்து +பார்த்தனர் = செய்து பார்த்தனர்
வந்து + காத்திரு = வந்து காத்திரு
மென்று + சாப்பிடு = மென்று சாப்பிடு

5.சு, ணு, ரு, ழு, னு ஆகியவற்றில் முடியும் ஈரசை சொற்களின் முதலெழுத்து உயிர்க்குறிலாக இருந்தால் கள் விகுதி சேரும் போது வல்லின ஒற்று மிகும்.
எ – டு :
கொசு + கள் = கொசுக்கள்
அணு + கள் = அணுக்கள்
தெரு + கள் = தெருக்கள்
குழு + கள் = குழுக்கள்
மனு + கள் = மனுக்கள்

ஈரசைச் சொற்களின் முதலெழுத்து உயிர் நெடிலாக இருப்பின் ஒற்று மிகாது.
எ – டு :
காசு + கள் = காசுகள்

6. மூவசைச் சொற்களின் பின்னும், வு என்பதில் முடியும் பெயர்ச்சொற்களின் பின்னும் ஒற்று மிகாது.
எ – டு:
கொலுசு + கள் = கொலுசுகள்
தராசு + கள் = தராசுகள்
ஆய்வு + கள் =ஆய்வுகள்

7. -ட்டு, -த்து கியவற்றின் பின் -கள் சேரும் போது வல்லின ஒற்று மிகலாம், மிகாமலும் இருக்கலாம்.
எ- டு :
பாட்டு + கள் = பாட்டுக்கள்/பாட்டுகள்
வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்
எழுத்து + கள் = எழுத்துக்கள் (letters) /எழுத்துகள் (writings)

8. அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்களின் பின் வல்லினம் மிகுவது தற்காலத்தமிழில் இல்லை.
எ – டு :
அங்கு + கண்டேன் = அங்கு கண்டேன்
இங்கு + பார் = இங்கு பார்
எங்கு + செல்வது = எங்கு செல்வது?

4.2.6. நிலைமொழி ஈற்றில் ஊ
1. பூ போன்ற ஓரெழுத்துச் சொல்லின் பின்னர் வல்லின ஒற்று மிகும்
எ – டு :
பூ + செடி = பூச்செடி
பூ + போல = பூப்போல
வாழைப்பூ + பொரியல் = வாழைப்பூப் பொரியல்

2. க், ச், த், ப் என்பவற்றின் இன எழுத்துக்களான ங், ஞ், ந், ம் தோன்றுவதும் உண்டு.
எ – டு :
பூ + கொடி = பூங்கொடி
பூ + செடி = பூஞ்செடி
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பூ + பாவை = பூம்பாவை

4.2.7. நிலைமொழி ஈற்றில் ஏ
1. வல்லின ஒற்று மிகுவதில்லை
எ – டு:
அங்கே + கண்டேன் = அங்கே கண்டேன்
இங்கே + பார் = இங்கே பார்
உள்ளே + செல் = உள்ளே செல்
வெளியே + துரத்து = வெளியே துரத்து
எங்கே + போகிறாய் = எங்கே போகிறாய்?

4.2.8. நிலை மொழி ஈற்றில் ஐ
1. கை, தை போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பி வல்லின ஒற்று மிகும்.
எ – டு :
கை + துண்டு = கைத்துண்டு
தை + பொங்கல் = தைப்பொங்கல்

2. இரு பெயர்கள் இணைந்து வரும்போது முதல் பெயர் சிறப்புப் பெயராகவும், இரண்டாவது பொதுப் பெயராகவும் இருப்பின் வல்லின ஒற்று மிகும்.
எ – டு :
பச்சை + கிளி = பச்சைக்கிளி
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ,
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
சித்திரை + திங்கள் = சித்திரைத்திங்கள்

3. இடப்பெயர்கள், திசைகள் ஆகியவற்றின் பின்பு பெயர்ச் சொற்கள் வந்தால் வல்லின ஒற்று மிகும்.
எ – டு: மதுரை + கல்லூரி = மதுரைக் கல்லூரி
கீழை + தெரு = கீழைத் தெரு
மேலை + சேரி = மேலைச் சேரி

4. சில வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகும்.
எ – டு:
குதிரை + குளம்பு = குதிரைக் குளம்பு
கை + தொழில் = கைத் தொழில்
மண்பானை + சமையல் = மண்பானைச் சமையல்
அவை + தலைவர் = அவைத் தலைவர்

5. இரண்டாம் வேற்றுமை உருபு ஐ மறையாமல் வந்தால், அதாவது இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லின ஒற்று மிகும்.
எ – டு:
கையை + பிடி = கையைப் பிடி
பழத்தை + கடி = பழத்தைக் கடி
பணத்தை + செலுத்து = பணத்தைச் செலுத்து
கதவை + தட்டு = கதவைத் தட்டு

ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகாது.
எ-டு:
மோர் + குடி = மோர் குடி

6. உம்மைத் தொகையில் வல்லின ஒற்று மிகாது.
எ – டு:
கை + கால் = கை கால்
இலை + தழை = இலை தழை
சண்டை + சச்சரவு = சண்டை சச்சரவு
நிலை மொழி ஈற்றில் ஏ, ஒ என்னும் உயிரெழுத்துக்கள் வருவதில்லை; ஓ ஆகியன வருவதும் மிக மிகக் குறைவு.]