அழுக்காறு அகற்றுவோம்

காலங்காலமாக நாம் பயங்கரமான பொறாமையினால் நீர்த்துப் போயிருக்கின்றோம். எப்போதும் மற்றவர்கள் மீது பொறாமைப் பட்டபடியே இருக்கின்றோம். “இந்த மனிதனுக்கு என்ன முக்கியத்துவம்; எமக்கு ஏன் இல்லை” என்றே மனம் குமைகின்றோம். பொறாமைப் படாமல் இருக்க நாம் எப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகின்றோமோ?

பொறாமை, பகை என்பவற்றை நாம் வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் நம்மிடமே வந்து சேரும். வேறு எந்தச் சக்தியாலும் அதனைத் தடுக்க முடியாது. ஒரு முறை நாம் அவற்றை இயங்கும்படி செய்திவிட்டால், அவை தரும் விளைவுகளையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இதை நாம் நினைவில் நிறுத்தினால் தீய செயல்களைச் செய்ய எமது மனம் ஏவாது.

பொறாமைதான் அழிவுகள் பலவுக்குக் காரணமாகின. ஒரு நண்பன் இன்னொரு நண்பனை தனிமையில் தூற்றுகிறான் எனில் அவன் பொறாமையில் வேகுகிறான் எனப்பொருள். எனவே அவன் தூற்றலுக்குக் காது கொடாதிருப்போம்.

எப்போதும் எங்களிடம் இருக்கும் பொறாமையை விலக்குவோம். பொறாமைக் குணம் கொண்டோரை விட்டு விலகுவோம். இதன் பலனாக மகத்தான சாதனைகளை செய்யு முடிக்கும் திறன் எமக்குக் கிட்டும்.

எனவே ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாது, ஒருவரை ஒருவர் மதித்து அனைவரும் மேன்மை கொள்வோம்.