மழை தேடும் நதி

453

கலங்கரை விளக்குகள்
மின்னொளி பாய்ச்சிட
சங்கு நாதங்கள்
ஜீவன்களை மாய்த்தன..!

என்பு மச்சையில் குத்திய
ஊசிக்காற்று வாசல் பெருக்க
பூ வாளியால் நீர்தெளித்து
புள்ளிகள் வைத்தாள் தேவதை…!

தெளித்த தண்ணீர்
பிஞ்சுவிரல் ஓவியமாக
நாசியைத் துளைத்தது
கோலப்பொடி மணம்..!

நங்கூரமிட்ட துமிகளில்
தூரல்கள் தட்டமைக்க
அங்கே குடியேறின
மோதும் சங்கீதங்கள்…!

மழையில் மையலிலார்
யாருளர் வையகத்தில்..?
பன்னீரில் நீராடும்
ரோஜாக் கூட்டமானேன்..!

சீக்கான பட்டணத்தின்
சிங்காரப் பூங்காக்களில்
மறைந்திருந்து ரசித்தது
மோகத்துடன் தடவியது
அங்கமெல்லாம்…..!

அசையும் சொகுசு வீட்டின்
சன்னல்களில் கன்னம்வைத்து
ருசித்த சிலீர் உணர்வுகள்
வேகமாய் சரசம் புரிந்தன
நரம்புகளுடன் ..!

அரச மரங்களில்
ஈரஞ்சொட்டும் இலைகளின்
உரசல்களில் உருகுகையில்
குறுக்கிடும் அம்மா
இப்போதும் கறுப்புக் குடையுடன்…!

கள்வெறியில் வந்ததுளிகள்
மோதித் தமை அழிக்க
கம்பிகளில் சொட்டியது
செம்மை சிதைந்த குருதி..!

அன்பு விலங்குடன்
விட்டுப் பிரிகையில்
கலங்குவது புரிந்தது
வெள்ளத்து நிழல்…!

சிறைப்பிடித்த பெருமிதத்தில்
சரஞ்சரமாய் சிந்தியது கூரை..!
சிறைப்பட்ட எனை நினைத்து
அழுதது சுருங்கிய குடை…!

தலைதுவட்டும் அன்னையின்
சிலுப்பலில் சிதறியது
அடித்தோய்ந்த மழையின்
எஞ்சியிருந்த எச்சங்கள்..!

வெறுமையால் நிறைந்தாலும்
ஓடிய சுவடு மறையவில்லை.
மீண்டும் வரும் மழைக்காக
அண்ணாந்து பார்த்திருகிறது நதி…!