வாசிப்பு – ஓர் அனுபவக் குரல்

683
Books HD

தமிழ் மன்றம்.. பெயர்தான் தமிழ் மன்றம். உண்மையில் தமிழில் அனைத்தையும் அலசும் மன்றம். முதன்மை இடத்தை கவிதை பிடித்துக் கொண்டாலும் கதை, நகைச்சுவை, இலக்கியம், சினிமா, தொழில்நுட்பம் என்று எல்லாம் தமிழில் கிடைக்கக் கூடிய தளம். அங்கே பாலகனாகப் புகுந்தேன்.

நாளொன்றில் கிடைக்கும் ஒய்வு நேரங்கள் அனைத்திலும் தமிழ்மன்றம் போய் வாசிக்கத் தொடங்கினேன். பற்பல துறைகளில் அங்கே பட்டறை இருந்தாலும் சமூகப் பார்வையில் பட்டை தீட்டப்படுவது அதிஉயர் சிறப்பம்சம்.

அடுத்ததாக மேலோட்டமாக வாசித்தல் எங்கே கிடையவே கிடையாது. கருத்தூன்றி வாசித்து கருவைப் பிடித்து அதன் கூறாய்வது எங்கும் கற்கக் கிடைக்காத ஒன்று. அது மன்றத்தில் கிடைத்தது.

அடுத்த சிறப்பு நொடியில் கவிதை பிடிக்கும் கலை. அந்தாதிக் கவிதை.. ஒருவர் முடிக்கும் சொல்லில் மற்றவர் கவிதை படிக்க வேண்டும். நொடி பிந்தினாலும் இன்னொருவர் முந்திக் கொண்டு விடுவார். அப்படி ஒரு சவால் நிறைந்த கவிச்சமர். அதை வாசித்தால் இப்பவும் பட்டை தீட்டப்படுவர்.

வாசிப்பின் அடுத்தபடி அறிமுகமானதும் மன்றத்தில்தான். மின்னூல்கள்.. புத்தகங்களைக் காவிச் சென்று கஷ்டப்படத் தேவை இல்லை. மின்னூல்களைப் பதிவிறக்கி, அலைபேசியிலோ, மடிக்கணினியிலோ, டப்லெட்டுகளிலோ, மின்னூல் வாசிப்பிகளிலோ (கிண்டில்) வாசிக்கலாம். அவ்வகை மின்னூல் வரங்கள் வாசிப்பை இலகுவாக்கி விட்டன.

இவ்வாறு வாசிப்பு இலகுவாகிவிட்ட காலத்திலேனும் நாங்கள் வாசிக்கத் தொடங்க வேண்டும். வானோலி, தொலைக்காட்சி வரிசையில் என்றும் முன்னணியில் நிற்பது வாசிப்பே. உலக அறிவு, சிந்தனையாற்றல், செயலாளுமை எல்லாம் மேம்பட வாசிப்பு இன்றி அமையாதது.

வாசிக்கும் பழக்கம் உடையோர் தொடர்வோம். இல்லாதவர்கள் தொடங்குவோம்.. வாசிக்கும் போது மற்றவர்கள் கண்ணுக்கு சோம்பேறிகளாகத் தெரிவோம். வாசித்து முடித்ததும் மனதில் அமைதி நிலவி மூளை சுறு சுறுப்படையும். எனவே எதைப் பற்றியும் கணக்கில் எடாது வாசிப்போம்.