நாளொரு குறள் – 58

நாள் : 58
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் : 8

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

பெண்களைப் பற்றிச் சொல்லுவதை இத்தோடு நிறுத்தவில்லை வள்ளுவர்.. இன்னும் சொல்கிறார்.

பெண்களின் இயல்பு யாது? அவர்கள் பேணுபவர்கள். நலம் பேணுபவர்கள்.

பெண்களுக்கு அவர்களுக்கு மட்டுமே சுகம், செல்வம் என அனைத்து போகங்களும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. இருக்கக் கூடாது.

பெண்டிருக்கு எப்பொழுது மகிழ்ச்சியும், இன்பமும் கிடைக்கும் தெரியுமா?

பெற்றார் பெறின் – அவர்களைப் பெற்றவர்கள், கைபிடிக்கும் பேறு பெற்ற கணவர் மகிழ்ச்சியும் இன்பமும் புகழும் பெற்றால் பெண்கள் அவற்றைத் தாம் பெற்றதாகக் கருதுவர் மகிழ்வார்கள்.

பெற்றார் பெறின் பெறுவர் என்பது மிக நுணுக்கமான சொல்லாடல்.

பெற்றவர் பெற்றால் பெறுவர் என்பது மேற் சொன்ன கருத்து.

இதுவே பெற்றவர்களை பெற்றால் பெறுவார் என்றும் கொள்ளலாம்.

அதாவது நற்குணங்களை, செல்வங்களை இன்னும் புகழத்தக்க அனைத்தையும் பெற்ற நல்ல கணவனைப் பெற்றால் பெண்கள் அவற்றை தமக்கும் அடையப் பெறுவார்கள். அவர்களின் இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

இன்னொரு வகையிலும் கொள்ளலாம்.

ஒரு பெண்ணின் குண நலன் அவர்களைப் பெற்றோரிடமிருந்தே வருகின்றன.

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை, தாயைத் தண்ணீர் துறையில் பார்த்தால் மகளை வீட்டில் போயா பார்க்க வேண்டும் என பெற்றவருக்கும் மகளுக்கும் உள்ள குண ஒற்றுமைகளைச் சொல்வார்கள். (அந்தக் காலத்திலேயே குழாயடிச் சண்டை இருந்திருக்கும் போல… தாயின் வாய் குழாயடியில் தெரியும். அங்கேயே தெறிச்சு ஓடிடு அப்படின்னு சொல்றாங்களோ என்னவோ??)

எனவே பெற்றோர்கள் நற்குணம் பெற்றிருந்தால் அவர்களால் வளர்க்கப்பட்ட பெண்ணும் நற்குணங்கள் பெற்றிருப்பாள், அதனால் உலகே புது அழகு பெறும் என்கிறாரோ?

இருக்கலாம்.

மூன்றுமே கூடி இருந்தால் இன்னும் சிறப்பு அல்லவா?

1. கை பிடித்த கணவர் பெரும் புகழ், சிறப்பு, இன்பம், உயர்வு ஆகியவற்றை தாம் பெற்றதாக பெண்கள் எண்ணி மகிழ்வர் – பெண்களின் இயல்பு
2. எல்லா சுகங்களும், சிறப்புகளும் பெற்ற கணவரை கை பிடிக்கும் பெண்டிரே பேறு பெற்றவராவர். அவர்கள் குடும்பம் புத்தெழில் மிக்கதாக இருக்கும். – பெண்களின் பேறு
3. பெண்ணைப் பெற்றவர்களைப் பொறுத்தே பெண்களின் குண நலன்களும் அமைகின்றன. – பெண்களின் குடி பிறப்பு

இப்படி மூன்று அர்த்தங்கள் கொண்டதாக ஒரே செய்யுளில் பெற்றார் பெறின் பெறுவர் எனச் சொல்லி அடக்குகிறார் வள்ளுவர், மூன்று பொருளுமே சரிதான்.