குடாரப்பு மாமுனை – செம்பியன்பற்று (30-31 மார்ச் 2000)

(05 ஆம் 06 ஆம் நாட்கள்)

19 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதம் “புலிகளின்குரல்” வானொலிப் பணிப்பாளர் திருமிகு தமிழன்பன் அவர்கள் எழுதுமட்டுவாள் பகுதியில் உள்ள களமுனைகளில் போராளிகளைச் சந்தித்து வாழ்த்துக் கூறி உற்சாகம் ஊட்டினார்.

ஓரிரு தடவைகள் அல்ல பல தடவைகள் பெட்டிச்சமர் நடைபெற்ற பகுதிக்கு வந்தார். சமர்களநாயகன் தொடக்கம் சாதாரண போராளிகள், சிறப்பு எல்லைப்படை வீரர்கள் வரை ஒவ்வொரு வரையும் அவர்களின் இடத்தில் சந்தித்து கைலாகு கொடுத்து வாழ்த்தினார்.
நான்காவது நாள் தாளையடிப் பெருந்தளம் மீட்கப்பட்ட உடனடியாக எங்களைப் பார்க்க வந்தார் ஜவான் அண்ணர்.
காயமடைந்த வீரர்களை வன்னியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பக் கிடைத்தது மட்டற்ற மகிழ்வைத் தந்தது.
தமிழேந்தியப்பா(ரஞ்சித் அண்ணர்) நல்ல
அறுசுவை உணவு சமைத்து அனுப்பிவிட்டார். நீண்டதோர் இடைவெளியின் பின்னர் உண்ணச் சோறு வந்தது.
உணவு வந்ததைவிடவும் ஜவான் அண்ணர் வருகை மகிழ்வையும் புதுவேகத்தினையும் தந்து நின்றது.
ஊரிலும் புலத்திலும் எம் உயிரினும் மேலான் மக்கள் வெற்றிச் சேதிக்காக பிரார்த்தித்த வண்ணம் இருப்பதாக ஜவான் அண்ணை சொன்னார்.
அஃதே,
களமுனை வீரர்களின் உள்ளத்துச் சிந்தனைகளை, மக்களுக்குச் சொல்ல வேண்டிய சேதிகளைப் பேட்டி எடுத்துச் சுடச் சுட தமிழீழ வானொலியில் ஒலிபரப்புச் செய்தார்.
வடமராட்சி கிழக்கிலிருந்து வடமராட்சி நீரேரி கடந்துதான் அந்த நேரத்தில் தென்மராட்சியின் செங்களமான பெட்டிச் சமர் நடை பெற்ற பகுதிக்குச்
செல்வார்.
இடுப்புவரையும் சில இடங்களில்
நெஞ்சுவரையும் நீர்கொண்ட நீரேரியை முதல் நாள் சமர்களநாயகனும் படையணிகளும் நடந்தே கடந்தார்கள்.
பின்னாளில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக சிறு படகுகள் அந்த இடங்களில் பாவிக்கப்பட்டது.
படகில் ஏறுவதாயினும் சிறிது தூரமாவது நீருக்காலும் சதுப்பு நிலத்தாலும் நடந்து செல்ல வேண்டும்.
முன்னொரு களத்திடை
காலிழந்த ஜவான் அண்ணர்.
பொதுவாக பொய்க்கால்கள் நீரில் மூழ்கினால் நடக்க முடியாது.
அப்பழுக்கில்லாத அப்பெருவீரன்
எதையும் ஓர் புன் சிரிப்புடன் கடந்து செல்லும் பெரும்பக்குவம் கொண்டவர்.
அன்றைய நாள் மாரிமழையெனப் பெய்த குண்டு மழையிலும் வீரநடை நல்கிப் படகேறினார்.