நூலாக்கத் தந்தை கமலநாதன் அவர்களுக்கு தமிழ் வணக்கம்.

364

இலங்கையில் பதினோராம் ஆண்டு வரை நாம் கற்ற தமிழை ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன்..

தமிழ் இலக்கணத்தில் மீச்சிறு துளியை மட்டும் கற்றேன். உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து, உயிர் மெய்யெழுத்து, பகுதி, விகுதி, சந்தி, சாரிகை, எழுவாய், பயனிலை, செய்யப்படு பொருள், பிரித்தெழுதல், சேர்த்தெழுதல் தாண்டி வேறெந்த இலக்கணமும் நாம் கற்றேனில்லை.

அதே போல் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசகச் “சொட்டுகளை” இலக்கியம் எனக் கற்றவன், நளவெண்பா என்னும் இலக்கியத்துடன் விரல் குலுக்கிக் கொண்டேன்.

அதிலும் சந்தர்ப்பம் கூறல், பொருள் கூறல் போன்ற வார்ப்புருக்களைத் தாண்டிப் போனதில்லை.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளின் தமிழறிவை நோக்கினால், தமிழ் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கணிசமான அளவில் கற்றுள்ளார்கள்.

நாம் கற்ற இலக்கணங்களை விரிவாகவும், பாவிலக்கணம், சந்தி இலக்கணம் எனப் பல மேலதிக இலக்கண அறிவையும் பெற்று எம்மை விட தமிழறிவில் உயர்ந்து உள்ளார்கள்.

சங்க இலக்கியங்கள் பற்றி உரையாடுகிறார்கள். கழகப் புலவர்களுடன் அறிமுகமாகி உள்ளார்கள். நாம் அடைந்ததை விட பன் மடங்கு அளவில் தமிழ் இலக்கிய அடைவை அவர்கள் பெற்றுள்ளார்கள்.

தமிழ் கடந்து வந்த பாதையை, தமிழைச் சுமந்து வந்த தமிழர்களை, தமிழனின் அற, வீர வரலாறுகளை எம்மை விட அறிந்துள்ளார்கள்.

ஒட்டு மொத்தத்தில் நான் இலங்கையில் கற்ற தமிழை எண்ணி வெட்கிக் குனியவைக்கவும் அவர்கள் தமிழ்ப்புலனை கண்டு பெருமிதம் கொள்ளவும் வைக்கின்றார்கள் வெளிநாட்டு ஈழக் குழந்தைகள்.

இதற்கான ஒரே ஒரு காரணம் தமிழர் நிழல் அரசின் கல்விக் கழகத்தின் நெறிப்படுத்தலில் தமிழர் கல்வி மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட தமிழ் மொழி பயிலல் வள நூல்களே. அந்நூலாக்கத் தந்தை மதிப்பு மிகு கமலநாதன் ஐயா அவர்கள்.

காலாவோட்டத்தில் காணாமல் போன தமிழை, தேவையறிந்து மீட்டெடுத்து, தமிழர் தேசத்தில் இருக்கக் கூடிய அலகுகளைக் கொண்டு, எளிய நடையில், இனிய தமிழில் தமிழ்ப் பாட நூல்களை அகவைக்கேற்ப உருவாக்கி வெளிநாட்டு வாழ் ஈழவர்களை தாய்மண்ணோடு இணைத்தவர்.

தமிழ் வளர் நிலை 10 ஐயும் தாண்டி பாட நூல்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாது, தேர்வுத்தாள்களை உருவாக்கி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்து ஈழக் குழந்தைகளுக்கு தாய்த்தமிழைக் கொடுத்த தந்தை கமலநாதன் அவர்கள்.

செயல் வீரர் என்பதாலோ என்னவோ, சொல்ல வேண்டிய கருத்தை எள்ளலும் துள்ளலும் கலந்து சுருக்கமாகச் சொல்லுவதில் வலு விண்ணர் ஐயா கமலநாதன் அவர்கள்.

ஈழக் குழந்தைகளுக்கு தமிழைப் புகட்டுவதோடு இவருடைய பணி மட்டும்மடவில்லை. அக்குழந்தைக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கினார். தன் நுண்ணறிவாலும் ஆளுமையாலும் பயிற்சிப்பட்டறைகள் நடத்தி ஆசிரியர்களை சிறப்பாகப் பயிற்றுவித்தார்.

இவருடைய தமிழ்ப்பணியின் உச்சமாக கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தமிழ்மானி பட்டயக் கல்வியின் பாட விதானத்தை உருவாக்குவதில் தொடங்கி, உடல் நிலை ஒத்துழைக்காத பொழுதும் மன உறுதியுடன் 150 க்கு மேற்பட்ட தமிழ்மானிகளை உருவாக்குவரை தமிழுக்கு தன்னை அர்ப்பணித்த பணியாளர் ஐயா கமலநாதன் அவர்கள்.

எழுந்து நிற்க இயலாத நிலையிலும், தான் கற்பித்த மாணாக்கருக்கு தமிழ்மணிப் பட்டயம் வழங்கி மகிழ்ந்த ஐயா அவர்கள் 13/03/2019 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

வெளி நாட்டு வாழ் ஈழக் குழந்தைகளின் தமிழ் தந்தை மாமனிதர் சின்னத்துரை கமலநாதன் அவர்களை வணங்கி விடைகொடுப்போம்.